சிவானந்த லஹரி ஸ்லோகங்கள் 41-50 விளக்கத்துடன்

41. இந்த்ரியங்களின் கடமை
இந்த துதியில் ம்ருத்யுஞ்ஜயனே எனது வாக்கும் மற்ற இந்த்ரியங்களும் உமது திருப்பணியிலேயே ஈடுபட்டிருக்க அருளும் என வேண்டுகிறார்.

"பாபோத்பாத-விமோசனாய ருசிரைச்வர்யாய ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ர-த்யான-நதி-ப்ரதக்ஷிண
ஸபர்யாலோகனாகர்ணனே|
ஜிவ்ஹா-சித்த-சிரோங்க்ரி-ஹஸ்த நயன -ச்ரோத்ரை-ரஹம் ப்ரார்த்திதோ
மாமாக்ஞாபய தந்நிரூபய முஹுர் மாமேவ மா மே (அ) வச:||"

(ம்ருத்யுஞ்ஜய) யமனை ஜயித்தவரே!(பாப உத்பாத விமோசனாய) பாவமாகிய துன்பத்தினின்றும் விடுபடுவதற்கும், (ருசிர ஐச்வர்யாய) இனிய சுதந்திரத்தை அடைதற்கும் 
(ஸ்தோத்ர த்யான நதி ப்ரதக்ஷிண ஸபர்யா ஆலோகன ஆகர்ணனே ) ஸ்தோத்திரம், தியானம், நமஸ்காரம், பிரதக்ஷிணம், பூஜை,தர்சனம், சிரவணம் ஆகியவற்றைச் செய்ய முறையே (ஜிஹ்வா சித்த சிரோங்க்ரி ஹஸ்த நயன ச்ரோத்ரை:) நாக்கு, மனது, தலை, கால்கள், கைகள், கண்கள், காதுகள் ஆகியவற்றால் 
(அஹம்) நான் 
(ப்ரார்த்தித ) வேண்டிக்கொள்ளப் படுகிறேன் 
(மாம்) என்னை 
(ஆஜ்ஞாபய) அவ்வாறு செய்யக் கட்டளை இடும்
(மாம்) என்னை 
(தத்) அவ்விஷயத்தில் 
(முஹு:) அடிக்கடி 
(நிரூபய) கூட்டிவைத்தருளும்
(அவச:) வாக்கை உம்பொருட்டு பயன்படுத்தாது இருத்தல் 
(மே) என்னிடம் 
(மா ஏவ) இல்லாமல் இருக்கட்டும் வாக்கும் மற்ற இந்திரியங்களும் உமது திருப்பணியில் ஈடுபட்டிருக்கும்படி அருள்வீராக.

ம்ருத்யுஞ்ஜயரே, காலனை ஜயித்தவரே, பாவத்தினாலே உண்டாகும் தீமைகளைப் போக்குவதற்கும், மேலான ஐஸ்வர்யத்தை அடைவதற்கும், துதிப்பது, தியானம் செய்வது, நமஸ்காரம் செய்வது, கோயிலை மூர்த்தியை வலம் வருவது, பூஜை செய்வது, தரிசனம் செய்வது, கதா லீலா ஸ்ரவணம் செய்வது என்கிற விஷயத்தில் என் நாக்கு, மனது, தலை, கால்கள், கைகள், கண்கள், காதுகள் இவைகள் செய்ய அனுகூலமாயிருக்க வேண்டுகிறேன். 

என்ன வேண்டுகிறார்? பரமசிவனே என்னுடைய பாபங்களை அழிக்கவும், ஐஸ்வர்யங்களை பெறவும், உன்னைத் தியானம் செய்வது, துதி செய்வது நமஸ்காரம் செய்வது, கோயில்/மூர்த்தி வலம் வருவது, நல் மலர்களால் பூஜை செய்வது, உமது லீலா குணரஸங்களைக் கேட்டு மகிழ்வது, போன்ற நல்கார்யங்கள் செய்ய வேண்டும். அதற்கு எனது ஐம்புலன்களும், கண், காது, வாய், மனது, தலை, கால், கை இவையாவும் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு உம்மையே வேண்டுகிறேன். நீர் கேளாதது போல், அருள் புரியாது இருந்துவிடக்கூடாது. மௌனம் கொள்ளாது வாய், மனம் திறந்து அருள வேண்டும்!

ஸுத ஸம்ஹிதை
சிவ ப்ரஸாதேன வினா ந புத்தி:
சிவ பாஸாதேந வினா ந யுக்தி:
சிவ ப்ரஸாதேன வினா ந ஸித்தி:
சிவ ப்ரஸாதேன வினா ந முக்தி:

சிவனருளால்தான் புத்தியோ, யுக்தியோ, ஸித்தியோ, முக்தியோ கிடைக்கும் என்று இவ்வாறு கூறும்:

சிவ மானஸ பூஜை 
"ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: ஸரீரம் க்ருஹம்|
பூஜா தே விஷயோபபோக ரசனா நித்ரா ஸமாதி ஸ்திதி:|
ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா-கிரோ|
யத்-யத் கர்ம கரோமி தத்-தத் அகிலம் ஸம்போ தவ ஆராதனம்||"

சம்புவே எனது ஆத்மாவே நீ, உமையே எனது புத்தி என் உடலே உனது க்ரஹம் கோயில், நான் தூங்குவது உன் மீது ஸமாதி நிலை, நான் நடப்பது யாவும் உமக்கு ப்ரதக்ஷிணம், நான் பேசுவது யாதும் உனக்கு துதிகள், நான் செய்வது யாவும் உமக்கே ஆராதனை.

"எவனொருவன் என்றும் எப்போதும் எங்கும் சிவசிந்தனையிலேயே இருப்பானோ, எவனது நா சிவனது கல்யாண குணங்களேயே போற்றிப் புகழுமோ, எவனது இருசெவிகளும் சிவனது திருக்கதைகளைத் தேனென பருகுமோ, அவனே இந்நிலவுலகில் தோன்றிய பிறவியின்பத்தைப் பெற்றவன். பிறவிப் பயனும் அதுதானே! அவனே நிச்சயம் இச்சம்சாரக் கடலைத் தாண்டிக் கடந்தவன்.."

- சிவ மஹா புராணம்

42. மனக்கோயில்
இந்த துதியில் பரமசிவனே எனது மனதில் என்றும் உறைந்து அருள் என வேண்டுகிறார்.

"காம்பீர்யம் பரிகாபதம் கனத்ருதி: ப்ராகார உத்யத் குண ஸ்தோமச்சாப்தபலம் கனேந்த்ரியசயோ த்வாராணி தேஹே ஸ்தித:|
வித்யா- வஸ்து-ஸம்ருத்தி ரித்-யகில ஸாமக்ரீ ஸமேதே ஸதா துர்காதி ப்ரிய-தேவ மாமக-மனோ துர்கே நிவாஸம் குரு||"

(துர்க்க அதிப்ரிய தேவ) - அடைய முடியாத கோட்டையினுள் வசிப்பதில் மிகவும் பிரியமுள்ள தேவனே! (காம்பீர்யம் ) ஆழங்காணமுடியாத தன்மையை 
(பரிகாபதம்) அகழியாக உடையதும், (கனதருதி:) திடமான தைரியத்தை (ப்ராகார:) மதிலாக உடையதும். 
(உத்யத் குண ஸ்தோம் :ச ) மேலோங்கி நிற்கும் நற்குணங்களின் கூட்டத்தை (ஆப்தபலம்) நட்புப்பூண்ட சேனையாகவும், 
(தேஹே ஸ்தி) தேகத்திலுள்ள (கனேந்த்ரியசய :) திடமான இந்திரிய சமூகத்தை 
(த்வாராணி) வாயில்களாகவும், 
(வித்யா) ஞானத்தை 
(வஸ்து ஸம்ருத்தி :) தேவையான பொருள்களின் நிறைவாகவும், 
(இதி ) இங்ஙனம் 
(அகில ) எல்லா 
(ஸாமகரீ ஸமேதே) பொருத்தமான அங்கங்களுடன் கூடியதுமான 
(மாமக) என்னுடைய 
(மனோதுர்க்கே ) மனதாகிற கோட்டையில் 
(நிவாஸம்) வசித்தலை 
(ஸதா) எப்போதும் 
(குரு) செய்து அருள்வீராக.

நுழைவதற்கு கடினமாயுள்ள மலையில் வசிக்க ஆசையுள்ளவனே (துர்காதேவியிடம் ப்ரியமானவனே) மஹாதேவ தேவனே மனதாகிற கோட்டையில் வசித்து, எப்போதும் அருள்வீராக.

கேதாரம் அமர்நாத், ஸ்ரீசைலம், கைலாஸம், பர்வதம், மேரு என்று பல மலைகளில் சிவன் உறைகிறார். அங்கு ஏறிப்போய் தரிசனம் செய்வது என்பது கடினமே. கயிலை மலையை அடைந்து மலையே உருவான பனிக்கட்டியினால் மூடப்பட்டிருக்கும் சிவனைத் தரிசிப்பது என்பது எல்லோராலேயும் சுலபமானது அல்ல. அதே போன்று, பரமசிவனே, என் மனதும் மிக திடமானது. காம, க்ரோத, லோப, மோஹ, மத மாத்ஸர்யங்கள் நிறைந்தது. ரஜோ குணம், தமோ குணங்களும், அஞ்ஞானம், மாயை, துர்குணங்கள் நிறைந்தது. இருந்தாலும் பரமசிவனே அந்த கடின மனதிலும் தாங்கள் அமர்ந்து கருணையுடன் அருள்புரிய வேண்டும் என உருகுகிறார்.

அருணகிரியார், கந்தரனுபூதியில்

"திணியான மனோசிலை மீது உனதுதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ" என்று வேண்டுவார்.

அதாவது கடினமான, கனமான எனது மனதில் உனது பாதாரவிந்தம், பாதத்தாமரை மலர வேண்டும் என்கிறார்.

43. மன வனம்
இந்த துதியில் மனமான என் வனத்தில் உறைந்து அருள் வேண்டும் என வேண்டுகிறார்.

"மா கச்ச த்வமிதஸ்ததோ கிரிசபோமய்யேவ வாஸம் குரு
ஸ்வாமின்னா(ஆ)தி-கிராத மாமக மன: காந்தார-ஸீமாந்தரே| வர்த்தந்தே பஹுசோம்ருகா மதஜுஷோ மாத்ஸர்ய- மோஹாதயஸ்தான் ஹத்வா ம்ருகயா - விநோத -ருசிதாலா பஞ்ச ஸம்ப்ராப்ஸ்யஸி||"

(போ கிரிச ) மலையில் இருப்பவரே! (த்வம் ) நீர் 
(இத: தத:) இங்குமங்கும் 
(மா கச்ச) போக வேண்டாம். 
(ஸ்வாமின்) ஸ்வாமி! 
(மய்யேவ) என்னிடத்திலேயே 
(வாஸம் குரு) வசித்திரும். 
(ஆதிகிராத) ஆதிவேடரே! 
(மாமக-) என்னுடைய 
(மன:காந்தார ஸீமாந்தரே ) மனமாகிற வனத்தின் நடுவில் 
(மாத்ஸர்ய மோஹாதய:) பொறாமை, மதிமயக்கம் முதலிய 
(மதஜுஷ:) மதம் பிடித்த 
(பஹுச:) பல 
(ம்ருகா:) மிருகங்கள் 
(வர்த்தந்தே) இருக்கின்றன
(தான்) அவற்றை 
(ஹத்வா) கொன்று 
(ம்ருகயாவிநோத ருசிதா) வேட்டையின் விநோதக் கேளிக்கையாகிய 
(லாபம் ச) பயனை 
(ஸம்ப்ராப்ஸ்யஸி) நன்றாக அடைவீர்.

மலையில் வசிப்பவரே, நீவீர் இங்கும் அங்கும் போகத் தேவை இல்லை. என்னிடமே வாஸம் செய்யும் ஆதிவேடரே என் மனமாகிற காட்டில் கொடிய விலங்குகளுக்கு ஒப்ப பொறாமை, மதிமயக்கம், முதலிய மதம் பிடித்த பல மிருகங்கள் உள்ளன. அவைகளையும் வேட்டையாடி, கொன்று, பயன் பெறலாம் என்கிறார்.

மனது சாந்தம், அமைதி, பொறுமை, கருணை, பக்தி பக்தியை மேம்பட ஆர்வம், இருக்க வேண்டும் அப்போது நீவீர் சுகமாக வாழலாம். ஆனால் எனது மனம் காமக்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸர்யம், அசூயை, தமோகுணம், ரஜோகுணம் போன்ற கொடிய விலங்குகளால் பரவியுள்ளது. நீரோ வேடர் ஆக வேட்டைக்கு வேறு கானகம் செல்ல வேண்டாம். என் மனதில் உள்ள துர்குணம் எனும் விலங்குகளையே வேட்டையாடலாம். அவ்வாறு கொடிய விலங்குகளை த்வம்சம் செய்வதால் என் மனம் சாந்தம், அமைதி, அடையும். நீவீர் அங்கு அவ்வாறே தங்க நான் சிவஞானம் பெறுவேன். சிவமயம் ஆகுவேன்.

ருத்ரத்திலும், "நமஸ்தே அஸ்து தன்வனே வனானாம் பதயே நம: மருகயுப்ய: சவனிப்யச்ச வோ நமோ நம: நம: காட்யாய ச||"

"வனானாம் பதயே நம" வருகிறது. மஹாபாரதத்திலும் கிராதார்ஜுனீயம் எனும் நூலிலும் அர்ஜுனன் பாசுபாதஸ்திரம் பெற சிவனைக் குறித்து வனத்தில் தபஸ் செய்தான். சிவபெருமான் ஆதிகிராத வேஷத்தில் வந்து அர்ஜுனனிடம் மல்யுத்தம் செய்தாராம். யுத்த களத்தில் சிவன் மேலே கிளம்ப, அர்ஜுனனும் அவரின் பாதங்களைப் பிடித்துக் கொண்டான். பாதம் பிடித்தவனுக்கு அருள வேண்டி கருணாமய சிவன் தன் உருவம் காட்டி பாசுபதாஸ்திரம் அளித்தானாம். அந்த சம்பவத்தை நினைத்து ஆதிசங்கரர் இந்த துதியில் ஆதிகிராத என்கிற நாமத்தைச் சொல்கிறார்.

44. சிவனும் - சிங்கமும்
இந்த துதியில் மனதை ஒரு குகையாகவும், சிவனை அதில் வசிக்கும் சிங்கமாகவும் வர்ணிக்கப்படுகிறது.

"கரலக்னம்ருக: கரீந்த்ர - பங்கோ
கன சார்தூல- விகண்டனோ(அ)ஸ்த-ஜந்து:| கிரிசோ விசதாக்ருதிச்ச சேத:
குஹரே பஞ்சமுகோஸ்தி மே குதோ பீ:||"

(கரலக்ன மருக:) கையில் மானை ஏந்தியவராகவும் 
(கரீந்தர பங்க:) கஜாசுரனைக் கொன்றவராகவும்
(கனசார்த்தூல விகண்டன:) கொடிய வியாக்கிராசுரனைக் கண்டதுண்டம் ஆக்கியவராகவும்
(அஸ்தஜந்து:) ஜீவர்கள் எல்லாம் தன்னிடம் லயமடையப் பெற்றவராகவும், (கிரிச:) மலையில் உறைபவராகவும், (விசதாக்ருதி: ச ) வெண்மையான மூர்த்தி உடையவராகவும்
(பஞ்சமுக:) ஐந்து முகத்துடன் கூடியவராகவும் உள்ள பரமேசுவரன் (மே) என்னுடைய 
(சேத) மனமாகிற 
(குஹரே) குகையில் 
(அஸ்தி) இருக்கிறார்
(பீ) பயம் 
(குத:) எங்கிருந்து எனக்கு வரும்?

பஞ்சமுக:
ஐந்து முகமுள்ள பரமசிவன்; அவருடைய மந்திரவடிவம் பஞ்சாக்ஷரம். கையில் மானை ஏந்தியவராகவும், கஜாசுரனைக் கொன்றவராயும், கொடிய வ்யாக்ராசுரனை கண்ட துண்டமாக்கியவரும், ஜீவர்கள் எல்லாம் தன்னிடம் ஐக்கியமடையப் பெற்றவராகவும், மலையில் உறைபவராகவும், வெண்மையான சரீரம் உடையவராகவும், ஐந்து முகங்கள் உடையவராகவும் உள்ள பரமேஸ்வரன் என் மனமாகிய குகையில் இருக்கும்போது பயம் எங்கே?

 சிவனுக்கு ஐந்து முகம் - ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்பன. (கணபதிக்கும், காயத்ரிக்கும், ஆஞ்சனேயருக்கும் ஐந்து முகங்கள் உண்டு. 

நான்கு வேதங்களையும் மானாக சிவன் தரிக்கிறார். கஜாசுரன், வ்யாக்ராசுரன் இவர்களை அழித்த சிவன், மங்களங்கள் பொழிவதற்கே இதயத்தில் பக்தி வசத்தால் உறைகிறார்.

தத்துவம் என்ன? எல்லாருக்கும் மேலானவன் சிவன். பிரளய காலத்திலும் எஞ்சியிருப்பவன் சிவனே. அந்த பரம தயாளுவான பரமசிவனை உள்ளன்புடன் துதித்தால், சிவானந்தம் பெறலாம்.  

45. மனதில் சிவன் திருவடி
இந்த துதியில் மனதை பக்ஷிக்கு உவமானமாகி காட்டிலேயே இறைவன் திருவடிகளால் ஆனந்தம் அடையும்போது அலையத் தேவையில்லை என்கிறார்.

"சந்த: சாகி- சிகான்விதைர் த்விஜவரை: ஸம்ஸேவிதே சாச்வதே ஸௌக்யாபாதினி கேத-பேதினி ஸுதாஸாரை: பலைர்- தீபிதே| சேத: பக்ஷிசிகாமணே த்யஜ வ்ருதா- ஸஞ்சார- மன்யைரலம் நித்யம் சங்கரபாத-பத்ம-யுகளீ - நீடே விஹாரம் குரு||"

(சேத: பக்ஷிசிகாமணே) தலைசிறந்த மனமாகிய பறவையே! 
(சந்த:சாகி சிகான்விதை:) சாகைகளாகிற கிளைகளையும், உபநிஷதங்களாகிற உச்சிகளையும் உடையதாயும், 
(த்விஜவரை :) பிராம்மண சிரேஷ்டர்களாகிற பறவைகளால் (ஸம்ஸேவிதே) நன்கு நாடப்பெற்றதாயும், 
(சாச்வதே) அழிவற்றதாயும், (ஸௌக்யாபாதினி) இன்பத்தைத் தருவதாயும், 
(கேதபேதினி) துன்பத்தைப் போக்குவதாயும், 
(ஸுதாஸாரை :) அமிருதத்திற்கு ஒப்பான ரஸமுள்ள 
(பலை:) தர்ம அர்த்த காம மோக்ஷம் என்னும் பழங்களுடன்
(தீபிதே) பிரகாசிப்பதாயும் - உள்ள மரத்தில் விளங்கும் 
(சங்கர பாதபத்ம யுகளீ நீடே) பரமசிவனுடைய இரண்டு திருவடித் தாமரைகளாகிற கூட்டில் 
(நித்யம்) இடைவிடாது 
(விஹாரம் குரு) விளையாடுவாயாக (வருதா) வீணாக 
(ஸஞ்சாரம்) அலைவதை 
(த்யஜ) விட்டுவிடு
(அன்யை: அலம்) வேறு விதமான அலைச்சல்கள் போதும்.

"பக்ஷிசிகாமணே" இங்கு மனது ஒரு சிறந்த பறவைக்கு ஒப்பிடப்படுகிறது. அது ஏன் வீணில் இங்குமங்கும் அலைந்து களைப்புற்றுக் கஷ்டப்பட வேண்டும்? அதற்கு க்ஷேமமும் இன்பமும் கூட்டில் உள்ளது. இறைவன் திருவடியே அக்கூடு. அங்கே ஆனந்தமாய் இருக்கட்டும்.

பரமசிவனின் பாதாரவிந்தங்கள் மனதாகிற கூட்டில் இருந்திட தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்கிற எல்லாவித சுபமங்களங்கள் பொழியும் என்கிறார்.

ஆக, இது சிவபாதார விந்த மஹிமையைக் கூறுகிறது. அந்த வாசனை அருள்மிகுந்த பாதத் தாமரைகள், பக்தனின் மனதில் ஆழ்ந்து துதித்திட, தயாஸாகரனான பரமசிவன் எல்லாவித மங்களங்களையும் பொழிவான்.

வெவ்வேறு தெய்வரூபங்களில் மனதைச் செலுத் தாமல் சிவன் பாதாரவிந்தங்களில் மனதை லயமாக்கு வாயாக.

மாணிக்கவாசகர், திருவாசகத்தில்..
"நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஜகன்தன் பெய் கழல்கள் வெல்க புறத்தார்க்கும் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோள் கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்கள் வெல்க ஈசனடி போற்றி எந்தை அடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துரை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.."
*****
46. மனதில் சிவசக்தி திருவடிகள்
இந்த துதியில் மனதே, ராஜஹம்ஸமே நீ ரஹஸ்யமாக பக்தியெனும் மனைவியுடன் பரமேஸ்வரனின் பாதாம் புஜத்தில் உன்னிஷ்டப்படி களித்திடு என்கிறார்.

"ஆகீர்ணே நகராஜி-காந்தி விபவை: ருத்யத் ஸுதா-வைபவை ராதௌதேபி ச பத்மராக-லலிதே ஹம்ஸ- வ்ரஜை-ராச்ரிதே| நித்யம் பக்தி-வதூ கணைச்ச ரஹஸி ஸ்வேச்சா- விஹாரம் குரு
ஸ்தித்வா மானஸ-ராஜ ஹம்ஸ கிரிஜா நாதாங்க்ரி - ஸௌதாந்தரே||

(மானஸராஜஹம்ஸ)மனதாகிற சிறந்த அன்னமே! (நகராஜி காந்தி விபவை:) நகவரிசைகளினின்று வீசும் ஒளிப்பெருக்கால் (ஆகீர்ணே) நிறைந்ததாயும், (உத்யத் ஸுதா வைபவை:) தலையிலுள்ள வளர்கின்ற சந்திரனுடைய அமிர்தகலைப் பெருக்கால் (ஆதௌதே) வெள்ளையடிக்கப்பட்டது போல் இருப்பதாயும், (அபி ச) மேலும், (பத்மராக லலிதே) பத்மராகக் கற்கள் இழைத்ததால் அழகாகச் சிவந்து காணப்படுவதாய்த் தோன்றுவதும்,( ஹம்ஸவ்ரஜை:) பரமஹம்ஸர்களாகிற அன்னப் பறவைகளால் (ஆச்ரிதே) சூழப்பெற்றதாயும் உள்ள (கிரிஜாநாத அங்கரி ஸௌதாந்தரே ) பார்வதீ பதியின் திருவடிகளாகிற மாளிகையின் உள்ளே (ரஹஸி) ரகசியத்தில் (ஸ்தித்வா) இருந்துகொண்டு (பக்திவா தூகணை: ச) பக்தியாகிற மாதர்கணத்துடன் (ஸ்வேச்சா விஹாரம்) இஷ்டப்படி கூடிக்குலாவுதலை (நித்யம் ) எப்போதும் (குரு) செய்.

மனதாகிற சிறந்த அன்னமே! நகவரிசைகளின்று வீசும் ஒளியால் நிறைந்ததாயும், தலையில் விளங்கும் சந்திரனின் அம்ருத கலைப்பெருக்கால், வெள்ளையடிக்கப் பட்டது போல் பத்மராக கற்கள் இழைத்ததால் அழகாகச் சிவந்து காணப்படுவதாய் தோன்றும் ... பரமஹம்சர் களாகிற அன்னப்பறவைகளால் சூழப்பட்டதுமான பார்வதி பதியின் திருவடிகளாகிற மாளிகையுள்ளே ரஹஸ்யமாய் இருந்து கொண்டு பக்தியாகிற மாதர் கணத்துடன் இஷ்டப்படி களித்திரும்.
ஜனன மரணம் என்கிற பிறவிச்சூழலில் சுழலும் அறியாமை அக்ஞானம் உள்ளவர்களுக்கு பரமேஸ்வரன்.
பாதாரவிந்தங்களின் ஸ்மரணமே, தியானமே பரம ஒளஷதம்.

மஹா மந்த்ரங்கள், வேதபுராண இதிஹாஸ உபநிஷதம் இவையாவும் உணர்ந்த பரமஹம்ஸர்களால் உமாபதி பரமேஸ்வரனின் பாத மலர்களே சேவிக்கப்படுகிறது. அத்தகைய பாதார விந்த மேடையில் பக்தி எனும் ஸ்திரீகளுடன் விளையாடிக் கொண்டிரு. அவ்வாறு இருந்தால் சிவானந்தம் பெறலாம்.

தத்துவம் என்ன? சிவபாதார விந்தங்களை மனதில் பக்தியோடு சிவாத்மோஹம், சிவோஹம், ஹம்ஸஸ் ஸோஹம், ப்ரம்மைவாஹம் என நினைக்கப்பட்டால், வணங்கப்பட்டால், நித்யானந்தம், ஸதானந்தம், சிவானந்தம், பரமானந்தம் பெறலாம்.

"நகதீதிதி ஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா" - லலிதா ஸஹஸ்ரநாமம்

பொருள் : தன் பாதங்களில் வணங்குவோரின் அக்ஞானம் எனும் இருளை நகத்தின் காந்தியால் அழிப்பவள். உனது பாததரிசனமே பாவங்களை அழிக்கும். முன்னாள் செய்த புண்யத்தில்தான் அந்த பாததரிசனம் அடையப் பெற்றேன்.

47. இதயத்தில் சிவன்
இந்த துதியில் சிவ தியானமாகிற இதய பூந்தோட்டத்தில் பக்தியால் ஞானானந்தம் பெறுவோமே என்கிறார்.

"சம்புத்யான - வஸந்த- ஸங்கினி ஹ்ருதாராமே (அ)க ஜீர்ணச்சதா:
ஸ்ரஸ்தா: பக்திலதாச்சடா விலஸிதா: புண்யப்ரவால-ஸ்ரிதா:| தீப்யந்தே குணகோரகா ஜப-வச புஷ்பாணி ஸத்வாஸனா ஞானானந்த-ஸுதா மரந்த- லஹரீ ஸம்வித்பலா (அ)ப்யுந்நதி:||"

பொருள்:-
(சம்பு த்யான வஸந்த ஸங்கினி ) சிவத்தியானம் என்னும் வஸந்த ருதுவின் சேர்க்கையால் 
(ஹ்ருதாராமே) இருதயமாகிற பூந்தோட்டத்தில் 
(அகஜீர்ணச்சதா:) பாபமாகிற பழுத்த இலைகள் 
(ஸ்ரஸ்தா:) உதிர்ந்து போகின்றன; (பக்திலதாச்சடா:) பக்தியாகிற கொடியின் சமூகங்கள் 
(விலஸிதா:) அழகாகப் பிரகாசிக்கின்றன; 
(புண்ய ப்ரவால சரிதா:) புண்ணியம் எனும் துளிர்கள் தோன்றுகின்றன; (குணகோரகா:) நற்குணங்கள் எனும் அரும்புகளும்,
(ஜபவச: புஷ்பாணி) ஜபமந்திரங்களாகிற புஷ்பங்களும் (ஸத்வாஸனா) நன்மையாகிற வாசனையும், 
(ஜ்ஞானானந்த ஸுதா மரந்த லஹரீ) ஞான ஆனந்தமாகிற அமுதம் எனும் தேனின் பெருக்கும், 
(ஸம்வித் பல அப்யுன்னதி) ஞான அனுபவமாகிற பழத்தின் உயர்வும் (தீபயந்தே) பிரகாசிக்கின்றன.

பக்தியாகிற கொடியின் சமூகம் - சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம், வந்தனம் பணிவிடை முதலிய செய்கைகளே பக்தியாகிற கொடியின் சமூகம்.

ஒ. மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசனெந்தை யிணையடி நீழலே.

சிவத்தியானம் வஸந்தருதுவைப் போல் இன்பம் அளிப்பது. சிவத்தியானம் என்னும் வஸந்த ருதுவின் சேர்க்கையால், மனதாகிய தோட்டத்தில் பாபம் என்னும் ஜீர்ணமான இலைகள் உதிர்கின்றன, புண்ணியம் என்னும் துளிர் பிரகாசிக்கின்றன. பக்திக்கொடி கூட்டங்கள் குணங்களாகிய மொட்டுகளாம் ஜபம் செய்யும் வார்த்தை களான புஷ்பங்களும், ஸத் கர்மங்களென்னும் நல்வாஸனையும், ஞானானந்தம், ஆனந்தம், அம்ருதம், புஷ்பத்தின் ரஸமான தேன் இவைகளால் பெருக்கும், பிரம்ம ஞானமாகிய பழங்களின் வருத்தியும் பிரகாசிக்கின்றன.

ஆகவேதான் சிவன் ஆசுதோஷி, வெகுசுலபமாக, எளிமையான ஆழ்ந்த பக்தியில் மனங்குளிர்ந்து அருளு பவர். ஆக சிவனை உள்ளன்புடன் துதித்து உய்வோம்.

48. சிவ தியான ரஸம்
இந்த துதியில் மனமான அன்னபக்ஷியே சிவனுக்கு சேவை செய்து சிவானந்தம் பெறுவாய் என்கிறார்.  

"நித்யானந்த-ரஸாலயம் ஸுரமுனிஸ்வாந்தாம்பு-ஜாதாச்ரயம்
ஸ்வச்சம் ஸத்- த்விஜஸேவிதம் கலுஷ ஹ்ருத் ஸத்வாஸனாவிஷ்க்ருதம்| சம்புத்யான - ஸரோவரம் வ்ரஜ மனோ ஹம்ஸாவதம்ஸஸ்திரம் கிம் க்ஷுத்ராச்ரய-பல்வல-ப்ரமண- ஸஞ்ஜாத - ச்ரமம் ப்ராப்ஸ்யஸி||"

பொருள்:-
(நித்யானந்த ரஸாலயம்) அழிவிலாத ஆனந்தமாகிற நீர் நிறைந்ததும், (ஸுரமுனி - ஸ்வாந்த அம்புஜாதாச்ரயம்) தேவரிஷிகளின் இருதயமாகிற தாமரைக்கு இருப்பிடமாகியதும், (ஸ்வச்சம்) தெளிவானதும்,
(ஸத்த்விஜ ஸேவிதம்) ஸாதுக்களாகிற பக்ஷிகளால் நாடப்பெற்றதும், (கலுஷஹ்ருத்) பாபமாகிற அழுக்கைப் போக்குவதும், 
(ஸத்வாஸனா ஆவிஷ்க்ருதம் ) புண்ணியமாகிற வாஸனையை வெளிப்படுத்துவதுமாகிய 
(சம்பு த்யான ஸரோவரம்) சிவத்தியானம் எனும் சிறந்த நீர்நிலையை 
(ஸ்திரம் ) நிலையாக 
(வ்ரஜ) அடைவாயாக
(மனோ ஹம்ஸாவதம்ஸ்) மனம் என்னும் சிறந்த அன்னமே! 
(க்ஷுத்ராச்ரயா பல்வல்-) அற்பமான சேவையாகிய சிறு குட்டையில் 
(ப்ரமண ஸஞ்ஜாத சரமம்) உழல்வதால் உண்டாகும் கஷ்டத்தை 
(கிம் ப்ராபஸ்யஸி) ஏன் அடைகிறாய்?

நித்யானந்தமான நீர் நிறைந்ததும், தேவர்களுக்கு இருப்பிடமாகியதும், தெளிவானதும், சாதுக்களாகிய பக்ஷிகளால் நாடப்பட்டதும், பாபங்களை அழிப்பதும், புண்ணியம் என்கிற நல்வாசனையை வீசுவதும், ஆகிய 

சிவதியானம் என்கிற சிறந்த தடாகத்தை நிலையாக அடைவாயாக. மனமென்னும் சிறந்த அன்னமே அற்பமான சிறு குட்டையில் உண்டாகும் கஷ்டத்தை ஏன் அடைகிறாய்? மனதை மையமாகக் கொண்டு அது அக்ஞானம், மாயை இவற்றில் சிக்கி உழலாமல் ஞான ஒளி, நிர்மலமான மனது, தயை, கருணை இவற்றில் உழன்று சிவதியானம் ஆழ்ந்து செய்ய சீவன் சிவமயமாகலாமே, சிவானந்த ரஸலயம் அடையலாமே,நித்யானந்தமாயிருக்கலாமே, உடலைப் போஷிப்பது மட்டும் அல்லாது, மனதை தூயதாக்கி ப்ரம்மைவாஹம் என்ற நிலைக்குக் கொணரலாமே என்று பலப்பல துதிகளில் அதை கூறுகிறார்.

49.பக்திக் கொடியில் ஆனந்தம்
இந்த துதியில் பக்திக்கொடி மனப்பந்தலில் பரவி சிவானந்தத்தை அருளட்டும் என்கிறார்.

"ஆனந்தாம்ருத-பூரிதா ஹரபதாம்போஜாலவாலோத்யதா ஸ்த்தைர்யோபக்ன முபேத்ய பக்திலதிகா சாகோபசாகான்விதா| உச்சைர்-மானஸ-காய மான படலீ மாக்ரம்ய நிஷ்கல்மஷா நித்யாபீஷ்ட -பலப்ரதாபவது மே ஸத்கர்ம-ஸம்வர்த்திதா||"

பொருள்:-
(ஆனந்தாம்ருத பூரிதா ) ஆனந்தமாகிய அமுத நீரால் போஷிக்கப் பெற்றதும் (ஹரபதாம்போஜ-) சிவனுடைய பாதகமலமாகிற (ஆலவாலோத்யதா) பாத்தியில் முளைத்து வளர்வதும் (ஸ்தைர்யோபக்னம் உபேத்ய) திடச்சித்தம் எனும் கொம்பைப் பற்றிக் கொண்டிருப்பதுமான (பக்திலத்திகா) பக்தியெனும் கொடி (சாகோபசாகான்விதா ) கிளைகளும் உபகிளைகளும் உடையதாக (உச்சைர் மானஸ காயமான படலீம்) உயர்ந்த மனம் எனும் பந்தலின் மேல் (ஆக்ரம்ய) படர்ந்து (நிஷ்கல்மஷா) குற்றமற்றதாய் (ஸத்கர்ம ஸம்வர்த்திதா) புண்ணியச் செயல்களால் நன்கு வளர்ந்து (மே) எனக்கு (நித்யாபீஷ்ட பலப்ரதா) என்றும் மனதிற்கினிய முக்தி எனும் பழத்தை அளிப்பதாய் (பவது ) விளங்கட்டும்.

இங்கே படம் பிடித்துக் காட்டப்படுவது ஓர் அழகான பாத்தி, அதில் ஊன்றின கொம்பைச் சுற்றிப் படரும் கொடி, மேலே அது படரும் பந்தல், பூச்சி அரிக்காத இலைகள், அரும்பு, மலர்,காய், இனியபழம். 

பாத்தி - இறைவன் திருவடி; நீர் தியான ஆனந்தம் ; கொம்பு - திடச்சித்தம்;கொடி - பக்தி; பந்தல் -உயர்ந்த மனம்; செய்நேர்த்தி - நற்கருமம்; பழம்- முக்தி.

பக்தி எனும் கொடி வளருகிறது பரமேஸ்வரனுடைய திருவடித் தாமரைகளே இக்கொடியை நடுவதற்கு பாத்தி பக்தி என்ற செடி வளர்ந்து கொடியாக கிளம்புகிறது. தைரியம் நம்பிக்கை, ஸ்ரத்தை, சத்யம், தர்மம் இவைதான் பக்திக்கொடி மேல் ஏற தாங்குகோல் மனதில் உதிக்கின்ற உயர்ந்த எண்ணங்களே பந்தல் இந்த பந்தலில் பெரியதும் சிறியதுமான கொடி கிளைகளுடன் பந்தலில் படர்கிறது. கொடிகளை புழுபூச்சிகள் இவை அரித்துவிடாமல் நன்றாக கொடி படர்கின்றன. (உலகத்திலுள்ள லோப- மோஹம், மதமாத்ஸர்யம், அவகுணங்கள் ஆகியவைகளால் நாசம்-மாசு அடைவதில்லை) இது வளர்வதற்கு ஆனந்தம் என்கிற ஜலம் பாத்தியில் நிரப்பப்படுகிறது. முற்பிறவியில் செய்த புண்ணிய கர்மாக்களால் இக்கொடி நாம் விரும்புவதை அளிக்கும். நித்ய அபீஷ்ட என்பதால் கீழ்தரமான விருப்பங்கள் அல்ல, சிவமயம், சிவானந்தம், பிரம்மானந்தம், அத்வைதானந்தம் என்கிற முக்தி அளிக்கிறது.

பக்தியும், மனமும் எவ்வாறு நிர்மலமாக இருக்க வேண்டும் என்று உணர்த்தும் துதி இது. அவ்வாறு இருந்தால்தான் நாளடைவில் (செடி வளர்ந்து பூத்து, காயாகி, பழமாக நாட்கள், மாதங்கள் ஆகும் அல்லவா) அத்வைதானந்தம் முக்தியடைவிக்கும் என்கிறது. நன்றாக பரந்து வளர்ந்த கொடியின் பலன் என்ன?

ஜீவப்ரம்ம ஐக்யமடைந்து எல்லையற்ற ஆனந்தத்தை அடைகிறது.

அந்த நிலையை நிர்மலமான ஆழ்ந்த பக்தி அளிக்கிறது. ஆனால் அது சுலபமல்ல. அவகுணங்கள் அழித்து விவேகம் உற்று, ஆசைகள் யாவும் அறுத்து, பகவானை அடைவதே நோக்கம் என்று சாதனை செய்ய வேண்டும். சூழ்நிலைகள் அதற்கு.த்தக்கவாறு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

50. மல்லிக்கும் சிவனுக்கும் சிலேடை
இந்த துதியில் மல்லிப்பூவுக்கும் மல்லிகார்ஜுன சிவனுக்கும் ஒப்பிட்டு அந்த சிவனை வணங்குகிறேன் என்கிறார்.

"ஸந்த்யாரம்ப விஜ்ரும்பிதம் ச்ருதிசிரஸ்தானந்த-ராதிஷ்டிதம் ஸப்ரேம- ப்ரமராபிராம -மஸக்ருத் ஸத்வாஸனா -சோபிதம்| போகீந்த்ராபரணம் ஸமஸ்த-ஸுமன: பூஜ்யம் குணாவிஷ்க்ருதம் ஸேவே ஸ்ரீகிரி-மல்லிகார்ஜுன மஹாலிங்கம் சிவாலிங்கிதம்||"

பொருள்:-
(ஸந்த்யாரம்ப விஜ்ரும்பிதம்) மாலை வரும்போது மலர்வதும்,(ச்ருதிசிர ஸ்தானாந்தர அதிஷ்டிதம்) காது, தலை ஆகியவற்றுள் வைக்கப்படுவதும், (ஸப்ரேம் ப்ரமராபிராமம்) ஆசையுடன் கூடிய வண்டுகளால் அழகியதும், (அஸக்ருத்) எப்போதும் (ஸத்வாஸனா சோபிதம் ) நல்ல மணத்துடன் விளங்குவதும், (போகீந்த்ர ஆபரணம்) சிறந்த போகிகளை அலங்கரிப்பதும், (ஸமஸ்த ஸுமன: பூஜ்யம்) புஷ்பங்கள் அனைத்துள்ளும் போற்றப்படுவதும், (குணாவிஷக்ருதம்) அழகு, மணம் முதலிய குணங்களால் பிரகாசிப்பதும், (சிவாலிங்கிதம் ) பார்வதியால் தழுவப் பெற்றதுமான (ஸ்ரீகிரி மல்லிகார்ஜுன மஹாலிங்கம் ) ஸ்ரீகிரியில் உள்ள மல்லிகார்ஜுன மஹாலிங்கம் எனும் மல்லிகையை / மூர்த்தியை
(ஸேவே) நாடுகின்றேன்.

இரவும், பகலும் இணைந்த ஸந்தியா காலம் என்னும் நேரத்தில் நடனத்தில் களிப்பவரும், வேதத்தின் உச்சியிலுள்ள உபநிடதங்களில் இடையே நிலைபெற்ற வரும், ப்ரேமையுடன் கூடிய ப்ரமராம்பிகையின் சேர்க்கையால் அழகியவரும். எப்போதும் ஸாதுஜனங் களின் பக்தி மணத்தில் அமிழ்பவரும், சிறந்த பாம்புகளை ஆபரணங்களாகக் கொண்டவரும், எல்லா தேவர்கள், நல்ல மனதுடைய ஸாதுக்களால் பூஜிக்கப்படுபவரும், நல்ல குணங்களால் விளங்குபவரும், பார்வதியால் தழுவப் பட்டவரும் ஆகிய ஸ்ரீசைலம் என்னும் மலையில் உறையும் மஹாலிங்க மூர்த்தியை வணங்குகிறேன்.
*****







Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்