சிவ கீதை அத்தியாயம் 3 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்

விரஜா தீக்ஷை - மூன்றாம் அத்தியாயத்தில் அகத்தியர் ஸ்ரீ
இராமருக்கு விரசா தீட்க்ஷையாய் மகா பாசுபத விரதத்தை உபதேசிக்கின்றார். ஸ்ரீ இராமரை சிவச்சிந்தனையாக இருக்குமாறு கூறுகின்றார். ஸ்ரீ இராமரின் எதிரியான இராவணனின் பலம் மற்றும் காலதேச சூழ்நிலைகள், சிவ அனுக்கிரகம் பற்றி குறிப்பிடப்படுகின்றது.
*****
"ந க்ருஹணாதி வச: பத்யம் காமக்ரோதாதி பீடித:| ஹிதம் ந ரோசதே தஸ்ய முமூர்ஷோரிவ பேஷஜம்"|| (1)

சென்ற அத்தியாயத்தில் இறுதியில் துக்கம் அடையாமல் இருப்பதற்கு எதாவது வழி கூற வேண்டும் என்று கேட்ட ராமருக்கு இனி வரும் ஸ்லோகங்களில் பதில் கூறுகிறார்.

பொருள்:- காமக்ரோதங்களால் பீடிக்கப்பட்டவன் இதமான பேச்சைக் கேட்பதில்லை. சாகுந்தருவாயில் உள்ளவர்களுக்கு மருந்து எப்படி ருசிக்காதோ அப்படித்தான் இதுவும்.

அகஸ்தியர், ஒருவனுக்கு துயரம் ஏற்படாமல் இருக்க காமம் முதலிய ஆறு பகைகளை விட வேண்டும். அது அகங்காரத்தில் அடக்கம் என்றார். ராமரோ ஒரே பேச்சாக என்னால் அகங்காரத்தை அடக்க முடியவில்லை. இரவும் பகலும் என்னை விடாமல் துன்புறுத்துகிறது‌ என்று கூறிவிட்டார். அதுக்கு முக்கிய காரணம் சீதையை பிரந்திருப்பதால். சரி, இவ்வளவு நேரம் தான் சொன்னது எதுவும் ப்ரயோஜனப்படவில்லை, தம்முடைய சொற்கள் ராமரிடம் எடுபடவில்லை. என்பதைக் கண்ட அகஸ்தியர், இதுவரை இங்கிதமாக பேசினார், இப்போது கொஞ்சம் காட்டமாக ராமர் மனதை சற்று புண்படுத்தும் வகையில் சொல்கிறார்.

இதுவும் ஒருவகையில் தெரிந்தே செய்வது, ஏனென்றால் ராமரை துக்கத்திலிருந்து வெளியே கொண்டு வந்து அவருக்கு ஒரு கோப உணர்வை தூண்டினால் தான் அடுத்தடுத்து விஷயங்கள் நடக்கும். அதனால், இனி அடுத்து வரும் ஸ்லோகங்களில் வாள் வீச்சின் வேகத்தோடு சரே லென்று வெளிப்படும் சொற்களால் ராமரிடம் பேசுகிறார். பேசுகிறார் என்பதைவிட, சாடுகிறார் என்று சொல்லலாம்.

"மத்யே ஸமுத்ரம் யாநீதா ஸீதா தைத்யேந மாயிநா| ஆயாஸ்யதி நரஸ்ரேஷ்ட ஸா கதம் தவ சந்நிதிம்||" (2)

பொருள்:
நரஸ்ரேஷ்ட - மனிதரில் உயர்ந்த ராமா; மாயிநா - மாயாவியான; தைத்யேந - அரக்கனால்; மத்யே ஸமுத்ரம் - கடல் நடுவில்; யா ஸீதா - எந்த சீதா தேவியானவள்; நீதா - கொண்டு போகப்பட்டாளோ; ஸா அந்த சீதா; தவ ஸந்நிதம் - உன்னருகில் (மீண்டும்); கதம் - எப்படி; ஆயாஸ்யதி - வருவாள்.

கருத்து:
"ராமா, மாயாவியான அரக்கனால் அபகரிக்கப்பட்ட கடல் நடுவில் இருக்கிற சீதாதேவி திரும்ப உன்னிடம் எப்படி வருவாள்?" என்று அகஸ்தியர் கேட்கிறார்.

"பத்யந்தே தேவதாஸ்ஸர்வா த்வாரி மர்க்கட யூதவத்| கிஞ்சசாமரதாரிண்யோ யஸ்ய சந்தி சுராங்க நா:||" (3)

"புங்க்தே த்ரிலோகீமகிலாம் யஷ்ஷம்புவரதர்பித:| நிஷ்கண்டகம் தஸ்ய ஜய: கதம் தவ பவிஷ்யதி||" (4)

பொருள்:
யஸ்ய - எவனது; த்வாரி - வாயிலில்; ஸர்வா: தேவதா:- எல்லா தேவர்களும்; மர்க்கட யூதவத் - குரங்குக் கூட்டம் போல; பத்யந்தே - கட்டப்படுகின்றார்களோ; கிஞ்ச - மேலும்; யஸ்ய எவனுக்கு; சுராங்கநா:- தேவப் பெண்கள், சாமரதாரிண்ய - சாமரம் ஏந்தியவர்களாக, ஸந்தி - இருக்கின்றனரோ; ய: - எவன்; ஷம்புவரதர்பித:- சிவபிரானது வரங்களால் கர்வமடைந்தவனாய்; த்ரிலோகீம் அகிலாம் - மூன்று உலகங்களையும்; நிஷ்கண்டகம் - தடையற்று; புங்க்தே - அனுபவிக்கின்றானோ; தஸ்ய அவனுடைய (அத்தகையவனை); ஜய: - ஜயமானது (வெற்றி கொள்வது); தவ - உனக்கு; கதம் - எங்ஙனம்; பவிஷ்யதி - ஏற்படும்.

கருத்து:
எவனது வாயிலில் எல்லா தேவர்களும் குரங்குக் கூட்டம்போல் கட்டப்படுகின்றார்களோ, எவனுக்குத் தேவப் பெண்கள் சாமரம் வீசுகின்றனரோ, அந்த ராவணன் சிவபிரானிடம் வரங்களைப் பெற்று, அந்த கர்வத்தோடு, மூவுலகங்களையும் ஆண்டு அனுபவித்துக் கொண்டிருப் பவன். மூவுலகிலும் அவனைத் தடுப்பவர் யாரும் கிடையாது. அந்த ராவணனை நீர் எவ்வாறு வெல்ல முடியும்?

"இந்த்ர ஜிந்நாம புத்ரோயஸ் தஸ்யாஸ்தீச்வரோத்தத:| தஸ்யாக்ரே ஸங்கரேதேவா: பஹுவாரம் பலாயிதா:|| (5)

பொருள்:
ய - எவன்; ஈஸ்வரோத்தத: ஈசன் கொடுத்த வரங்களால் மதம் கொண்டவனும்; இந்த்ரஜித் நாம - இந்திரஜித் என்ற பெயரால் (பிரசித்தி பெற்றவனாகவும் உள்ளானோ அவன்); தஸ்ய அவனுக்கு (அந்த ராவணனுக்கு); புத்ரன் - மகன்; தஸ்யாக்ரே - அவன் முன்னிலையில்; ஸங்கரே - போரில்; தேவா:- தேவர்கள்; பஹூவாரம் பலமுறை; பலாயிநா:- பயந்து ஓடினவர்கள்.

கருத்து:
சிவபிரான் கொடுத்த வரங்களால் மதங்கொண்டவனும் இந்திரனை வென்று 'இந்திரஜித்' என்ற நாமம் பெற்று விளங்குபவனுமான ராவணனின் மகனிடம். போரில் தேவர்கள் பலமுறை தோற்று ஓடியிருக்கிறார்கள்.  

6 - 8 ஸ்லோகங்கள் விளக்கம் கொஞ்சம் பெரியது ஆனால் விஷயம் நிறைந்து. இனி வரும் அடுத்தடுத்த ஸ்லோகங்களும் மிகவும் உயர்ந்த கருத்துக்களை கொண்டது. ராமருக்கும் அகஸ்தியருக்கும் நடக்கும் வாதங்கள்...

"கும்பகர்ணாஹ்வயோ ப்ராதா யஸ்யாஸ்தி ஸுரஸூதந:| அந்யோ திவ்யாஸ்த்ர ஸம்யுக்த: சிரஞ்சீவி விபீஷண:||"(6)

பொருள்:
ஸுரஸுதநா: தேவர்களுக்கு யமனான; கும்பகர்ணா ஹ்வய:- கும்பகர்ணன் என்பவன்; யஸ்ய - எவனுக்கு சகோ தரனோ (எவனுக்கு); திவ்யாஸ்தரஸம்யுக்த: - திவ்யமான அஸ்திரங்களை உடையவனும்; சிரஞ்ஜீவி - மரணமற்ற வனும் ஆன; அந்ய:-இன்னொரு சகோதரன்; விபீஷண: விபீஷணன் என்பவனோ.

"துர்கம் யஸ்யாஸ்தி லங்காக்யம் துர்ஜயம் தேவதானவை:| சதுரங்கம் 
பலம் யஸ்ய வர்த்ததே கோடி ஸங்க்யயா|| (7)

பொருள்:-
யஸ்ய எவனுக்கு; துர்கம் - எவராலும் நுழைய முடியாத கோட்டை கொண்ட; லங்காக்யம் - லங்கா என்னும் பெயர் கொண்ட நகரம்; அஸ்தி - இருக்கிறதோ; யஸ்ய - எவனுக்கு; தேவதானவை - தேவர்களாலும் அசுரர்களாலும்; துர்ஜயம் - வெல்லமுடியாததான, சதுரங்கம்பலம் - நால் வகைப் படைகளும்; கோடி ஸங்க்யயா - கோடிக்கணக்காக; வர்த்ததே - இருக்கின்றதோ.

"ஏகாகிநா த்வயா ஜேய: ஸகதம் ரகுநந்தந| ஆகாம் ஷதே கரே தர்த்தும் பாலஸ்சந்த்ரமஸம்யதா||" (8)

"ததா த்வம் காமமோஹேந ஜயம் தஸ்யாபிவாம்சஸி|

பொருள்:
ரகுநந்தந் - ரகுகுலத்தோன்றலே ; ஸ: ராவணன்); ஏகாகிநா - தனியனான; த்வயா கதம் - எப்படி; ஜேய: வெல்லப்படுவான்; பால: அவன் (அந்த உன்னால்; குழந்தை; யதா - எப்படி; சந்த்ரமஸம் - சந்திரனை; கரேதர்த்தும் கை யில் பிடிக்க; ஆகாம்க்ஷதே -விரும்புகின்றதோ; ததா அவ்வாறே ; தவம் - நீர்; காம மோஹேந காம மயக்கத்தால்; தஸ்ய அவனது (அவனை); ஜயம் - வெற்றி (வெற்றி கொள்வதை ); அபிவாம் சஸி - விரும்புகிறீர்.

கருத்து:
எவனுக்கு, தேவர்களுக்கு யமன் போன்றவனான கும்பகர்ணன் என்னும் சகோதரன் இருக்கிறானோ, திவ்யமான அஸ்திரங்களை உடையவனும், சிரஞ்ஜீவியுமான விபீஷணன் என்னும் மற்றொரு சகோதரன் இருக்கிறானோ, எவனுக்கு பகைவரால் உள்ளே நுழைய முடியாத லங்கா என்னும் நகரம் இருக்கிறதோ, எவனுக்கு தேவர்களாலும் அசுரர்களாலும் வெல்ல முடியாததான நால்வகைப் படைகளும் கோடிக் கணக்காக இருக்கின்றதோ, அந்த ராவணனை ஒருவனாக இருக்கும் உம்மால் எப்படி வெல்ல முடியும்?

குழந்தை சந்திரனைப் பிடிக்க ஆசைப்படுவது போன்று நீங்களும், காம மயக்கத்தால் ராவணனை வெல்ல ஆசைப் படுகிறீர்கள்.

விளக்கம்:
ஸ்ரீராமரது பிரபாவத்தை நன்கு அறிந்தவர் அகஸ்தியர். ஸ்ரீராமர்தான் சாக்ஷாத் மஹாவிஷ்ணு என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் இத்தருணத்தில் இப்படிப் பேசுகிறார் என்றால் அதற்குக் காரணம், மனோதத்துவ முறையில் இப்போது ஸ்ரீராமரை அணுகுகிறார் என்பதுதான்.

முதலில் துக்கக்கடலில் மூழ்கிப் போயிருக்கும் ஸ்ரீராமரை வெளியே கொண்டு வரவேண்டும். அவரது புலம்பலை நிறுத்த வேண்டும். இதற்காக, ஸ்ரீராமரிடம் கோப உணர்ச்சி கிளம்பும் வண்ணம் சடசடவென்று பேசுகிறார். ராவணனைப்பற்றி அவர் சொன்னதெல்லாம் உண்மை அவனை யாராலும் வெல்ல முடியாது. நால் வகைப் படைகளும் கோடிக்கணக்காக அவனிடம் இருக்கின்றன. சமுத்திரம் தாண்டி, மிகவும் பாதுகாப்பான நகரத்தில் இருக்கிறான். ராமரோ காட்டில், எந்தப் படையுமின்றி இருக்கிறார். இப்படி அகஸ்தியர் உண்மைகளைத்தான் எடுத்துக் கூறுகிறார். ஆனால் அவர் வெளிப்படுத்தாத மாபெரும் உண்மை ஒன்று உள்ளது. அது அந்த ராவணனைக்
கொல்ல ராமரால் மட்டும்தான் முடியும் என்பது; அதற்காகவே அவர் அவதரித்திருக்கிறார் என்பது. ராமருக்கு, தேவர்கள் வானரப் படைகளாக வந்து உதவப் போகிறார்கள் என்பது அவருக்கு நன்கு தெரியும். 

எதையும் வெளிப்படுத்தக் கூடாது என்று அவர் கட்டுப்பாடாக இருந்தும்கூட, ராவணனிடம் தேவர்கள் அடிமைகளாக இருப்பதைக் குறிப்பிடும்போது, குரங்குக் கூட்டம்போல தேவர் கூட்டம் இருக்கிறது என்று தன்னையும் மிஞ்சி, உவமைக்கு கூறுகிறார். மனதில் தோன்றும் தோற்றம் வாய் வழியாக வெளிப்பட்டுவிடும். இது இயல்பு. 

ஸ்ரீ ராமர் வானரப் படையோடு கடல் கடந்து சென்று ராவணனை ஒழிக்கப் போவதும், இப்போது இத்தருணத்தில் தான் அங்கு தோன்றி ராமருக்கு உபதேசம் செய்ய வேண்டியிருப்பதும், யுத்த களத்தில் வானரர்கள் நிறைந்திருப்பதை, அவரது மனத்திரையில் வானரங்களின் தோற்றம் நிறைந்திருப்பதால், அவர் ஞானக் கண்ணால் காண்கிறார்.

இவ்வளவு தூரம் ஸ்ரீராமரை இவர் சீண்டுவது ஏன் என்றால். ஸ்ரீராமருக்கு கோபத்தை உண்டாக்கத்தான். கோபம் அதிகரித்தால், ஏற்கெனவே அதிகமாகி அமிழ்த்திக் கொண்டிருக்கும் துயரத்தை அது அடக்கிவிடும். துயர உணர்ச்சியை அடக்குவதற்காக, கோப உணர்ச்சியை, தூண்டுகிறார் அகஸ்தியர்.

அவர் மனோதத்தவம் வென்றது. ஸ்ரீராமருக்கு இப்போது சினம் மீறியது. ஏற்கெனவே கொஞ்சம் கோபம் ஏற்பட்டு, அதை அடக்கிக் கொண்டு, வெளிப்படுத்தாமல் பேசினார். ஆனால் இப்போது சினம் மீற, சொற்களை அம்புகளாக வெளிப்படுத்தத் தொடங்குகிறார்.

"க்ஷத்ரியோஹம் முனிஸ்ரேஷ்ட பார்யா மே ரட்சஸாஹ்ருதா|| (9)

"யதி தம் ந நிஹந்மயாசு ஜீவநேமேஸ்தி கிம் பலம்| அதஸ்தே தத்வபோதேந நமே கிஞ்சித் ப்ரயோஜனம்||" (10)

பொருள்:-
முனிஸ்ரேஷ்ட - முனிவர் பிரானே; அஹம் க்ஷத்ரிய: நான் க்ஷத்ரியன்; மே பார்யா எனது மனைவி; ரட்சஸா - அரக்கனால்; ஹ்ருதா - அபகரிக்கப்பட்டாள்; தம் - அவனை (அந்த அரக்கனை) ஆசு சீக்கிரமாக; நநிஹந்மியதி கொல்லாவிடில்; மே எனக்கு; ஜீவநே - ஜீவிப்பதில்; கிம் பலம் அஸ்தி - என்ன பயன் இருக்கிறது; அத:- ஆதலால்; தே- தங்களது; தத்வ போதேந - தத்துவ உபதேசத்தால்; மே எனக்கு; ந கிஞ்சித் ப்ரயோஜனம் - ஒரு சிறிதும் பயனில்லை.

கருத்து:
முனிவர் பிரானே, நான் க்ஷத்ரியன். என் மனைவியை ஒரு அரக்கன் அபகரித்துக் கொண்டு போயிருக்கிறான். நான் எப்படி சும்மா பார்த்துக் கொண்டு முப்பது? அந்த அரக்கனை நான் சீக்கிரம் கொல்லாவிடில் நான் க்ஷத்ரியன் என்று சொல்வதில் என்ன பயன்?  எனவே, தங்கள் தத்துவ உபதேசத்தால் எனக்கு கொஞ்சம்கூட பிரயோஜனமில்லை. வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று கூறவும் என்று கொஞ்சம் காட்டமாக கூறுகிறார்
*****
"காம க்ரோதாதயஸ்ஸாவே தஹ்யதே தைஸ்தநுர்மம்| அஹங்காரோபி மே நித்யம் ஜீவநம் ஹந்துமுத்யத:|| (11)

பொருள்:
காமக்ரோதா யஸ்ஸர்வே - காமம் குரோதம் முதலான அனைத்தும் (என்னிடம் இருக்கின்றன); 
தை: - அவைகளால்; 
மம தநு:- எனது உடல்; 
தஹ்யதே - கொளுத்தப்படுகின்றது; அஹங்காரோபி - அகங்காரமும்; 
மே ஜீவநம்- என் ஜீவனை; 
ஹந்தும் - கொல்வதற்கு; 
நித்யம் - எப்போதும்; 
உத்யத:- தயாராக இருக்கின்றது.

கருத்து:
என்னிடம் காமம், குரோதம் முதலான அத்தனை குணங்களும் இருக்கின்றன. அவைகளால் என் உடல் கொளுத்தப்படுகின்றது. அகங்காரமும் என் உயிரைப் பறிக்க எப்போதும் தயாராக இருக்கின்றது.

"ஹ்ருதாயாம் நிஜகாந்தாயாம் ஷத்ருணாவமதஸ்யவா| யஸ்ய தத்வபு புத்ஸாஸ்யாத் ஸ லோகே புருஷாதம:|| (12)

பொருள்:
நிஜகாந்தாயாம் - தன் மனைவி ; ஹ்ருதாயாம் - அபகரிக்கப்பட்டிருக்கும்போதோ; சத்ருணாவமதஸ்யவா - சத்ருவால் அவமானம் செய்யப்பட்டபோதோ; 
யஸ்ய - எவனுக்கு; தத்வபுபுத்ஸா - தத்துவ ஞானத்தில் விருப்பமானது; ஸ்யாத் - உண்டாகின்றதோ; 
ஸ: -அவன்; 
லோகே - உலகத்தில்; 
புருஷா தம - மனிதர்களுக்குள் அதமனாவான்.

கருத்து:
தன் மனைவி அபகரிக்கப்பட்டிருக்கும் போதே, சத்ருவால் அவமானம் நேரிட்டிருக்கும்போதோ, எவனுக்கு தத்துவ ஞானத்தில் விருப்பம் ஏற்படுகிறதோ, அவன் மனிதர் களுக்குள் மகாஅதமன். தர்மத்தை தவறியவனாவான்

விளக்கம்:
அகஸ்தியர், ராவணன் சக்திகளைச் சொன்னதோடு, நிறுத்திக் கொள்ளவில்லை. நீ காம மயக்கத்தில் இருக்கிறாய். அதனால் அவனை வென்றுவிட முடியும் என்று நினைக்கிறாய் என்றும் கூறினாரல்லவா?

அதற்கு பதிலடி கொடுக்கிறார் ஸ்ரீராமர். "ஆமாம், நான் காம மயக்கத்தில்தான் இருக்கிறேன். காமம் மட்டும் தான் மயக்குவதாக ஏன் சொல்கிறீர்கள்? காமம், குரோதம் முதலான அத்தனையும் என்னிடம் இருக்கின்றன. தாங்கள் தீயவை, இருக்கக்கூடாது என்று எவற்றையெல்லாம் சொன்னீர்களோ, அவை அத்தனையும் இப்போது என்னிடம் இருக்கின்றன. அத்தனையும் அகங்காரத்தில் அடக்கம் என்றீர்களல்லவா? இப்போது அந்த அகங்காரத்தில்தான் நான் இருக்கிறேன். என் தன்மானத்தை விட்டு வாழ என்னால் முடியாது.

"தஸ்மாத் தஸ்ய வதோ(உ)பாயம் லங்கயித்வா(அ)ம்புதிம் முநே|
ப்ரூஹி மே முநிர்ஷார்தூல த்வத்தோ நா(அ)ந்யோஸ்திமே குரு:||" (13)

பொருள்:
தஸ்மாத் - ஆதலால்; 
முநே - முனிவரே; 
அம்புதிம் லங்கயித்வா -கடலைத் தாண்டி: 
தஸ்ய வதோபாயம் - அவனைக் கொல்லத்தக்க உபாயத்தை; 
ப்ரூஹி - கூறுங்கள்; 
மே - எனக்கு; 
த்வத்த: - உங்களைக் காட்டிலும்; 
அந்ய: வேறு; 
குரு:- குரு; 
நாஸ்தி - இல்லை;

கருத்து: 
முனிவரே, கடலைத் தாண்டி சென்று, ராவணனைக் கொல்லும் உபாயத்தை தாங்கள் தான் கூற வேண்டும். உங்களைத் தவிர வேறு குரு இல்லை.

அகஸ்திய உவாச:
"ஏவம்சேச்சரணம் யாஹி பார்வதீபதி மவ்யயம்| ஸசேத் ப்ரஸந்நோ பகவான் வாஞ்சிதார்த்தம் ப்ரதாஸ்யதி||" (14)

பொருள்:
ஏவம்சேத் - இங்ஙமானால்; 
அவ்யயம் பார்வதீபதிம் - பரம்பொருளான பார்வதீநாதனை; சரணம்யாஹி - சரணமடைவீராக; 
ஸ: பகவான் - அந்த பகவான்; 
ப்ரஸந்ந: சேத் - மகிழ்ச்சியடைந்தாரானால்; வாஞ்சிதார்த்தம் - விரும்பிய பொருளை; ப்ரதாஸ்யதி - கொடுப்பார்.

கருத்து: 
ராமா, பரம்பொருளான பார்வதீநாதனான சிவபிரானைச் சரணமடைவீராக. அவர் மகிழ்ச்சியடைந்தால் விரும்பிய பொருளைக் கொடுப்பார்.

விளக்கம்: 
கேட்டால் எதையும் சொல்ல வேண்டும் என்பது சாஸ்திரம். ராமரோ "நீங்கள்தான் என் குரு, எனக்கு நீங்கள் வழி கூறுங்கள்" என்று கேட்டுவிட்டார். அகஸ்தியர் வழி சொல்கிறார். ராமா, "பரம்பொருளான பார்வதீநாதனான சிவபிரானை சரணமடைவீராக. அவர் மகிழ்ச்சியடைந்தால் விரும்பிய பொருளைக் கொடுப்பார். அவர் அருள் இருந்தால் தான் இது சாத்தியம்". 

எது சாத்தியம்? கடலைக் கடந்து லங்கைக்குச் சென்று ராவணன் மற்றும் எல்லோரையும் வென்று சீதையை மீட்டு வர வேண்டும். அதற்கு சிவபிரானை சரணடைந்து அவரிடம் வரம் பெற சொல்கிறார். அதற்கான வழிமுறைகளை அடுத்து வரும் ஸ்லோகங்களில் சொல்கிறார்.

"தேவை ரயேஷ் ஷக்ராத்யைர் ஹரிணா ப்ருஹ்மணாபிவா| ஸ தேவத்ய: கதம்வாஸ்து ஷம்கராநுக்ரஹம் விநா||" (15)

பொருள்:
ஷக்ராத்யை:- இந்திரன் முதலான; தேவை: - தேவர்களாலும்; 
ப்ருஹ்மணா - பிரம்மதேவராலும்; ஹரிணாபிவா - மஹாவிஷ்ணுவாலும்; அஜேய: - வெல்ல முடியாதவனான; 
ஸ: - அவன் (ராவணன்); ஷம்கராநுக்ரஹம் விநா - சங்கரருடைய அருளின்றி; 
கதம் - எவ்வாறு; 
தே வத்ய: அஸ்து உன்னால் கொல்லப்படுவோனாவான்.

கருத்து: 
ராவணன் இந்திராதி தேவர்களாலும், பிரம்மா, விஷ்ணுவாலும் கூட வெல்லமுடியாதவன். சிவபெருமானின் அருள் இருந்தால்தான் நீர் அவனை வெல்ல முடியும். அப்படி இருக்க, அவர் அருளைப் பெறாமல் எப்படி உம்மால் வெல்ல முடியும்? என்று கேட்கிறார்.

"அதஸ்த்வாம் தீக்ஷயிஷ்யாமி விரஜாகமமாஷ்ரித:| தேந மார்க்கேண மர்த்யத்வம் ஹித்வா தேஜோமயோ பவ||" (16)

பொருள்:
அத: - ஆகையால்; 
விரஜா கமம் ஆஷ்ரித: - விரஜா ஆகமத்தைத் தழுவி; 
த்வாம் தீக்ஷயிஷ்யாமி - உனக்கு தீட்சை செய்து வைக்கின்றேன்; 
தேந மார்க்கேண - அவ்வழியில்; மர்த்யத்வம் - மனிதத்தன்மையை; ஹித்வா - விட்டு; 
தேஜோ மய: - தேஜோமயனாக; 
பவ - ஆவாயாக.

கருத்து:
அகஸ்தியர் கூறுகிறார், " ஹே ராமா! விரஜா ஆகம விதிப்படி உனக்கு தீட்சை செய்து வைக்கிறேன். அதன்படி நடந்து மனிதத்தன்மை நீங்கி தேஜோமயனாவாயாக. இப்போதுள்ள மனக்கலக்கம் எல்லாம் தீரும். சிவ தரிசனம் கிடைக்கும். சிவனருளால், அவரது பார்வையால் ஞானம் கிட்டும். உன்னுடைய உடல் தேஜஸுடன் ஒளிரும்", இதைத் தான் மனிதத்தன்மை நீங்கி தேஜோமயனாவாய் என்று சொல்கிறார் அகத்தியர்.

"தேந ஹித்வா ரணே ஷத்ரூண் ஸர்வான் காமாநவாப்ஸ்யஸி|

பொருள்:
தேன - அவரது அருளால்; 
சத்ரூன் - பகைவர்களை; 
ரணே - யுத்த களத்தில்; 
ஹத்வா - கொன்று; 
ஸர்வாந் காமாந் - அனைத்து விருப்பங்களையும்; 
அவாப்ஸ்யஸி - நிறைவேற்றிக் கொள்வாயாக.

கருத்து:- சிவபிரானுடைய அருளால் பகைவர்களை கொன்று அனைத்து விருப்பங்களையும் தாங்கள் நிறைவேற்றிக் கொள்வீராக.
*****
சூத உவாச:-
"அதப்ரணம்ய ராமஸ்தம் தண்டவந் முநிஸத்தமம்| உவாச து:க நிர்முக்த: ப்ரஹ்ருஷ்டே நாந்தராத்மநா||" (17)

ராம உவாச:-
"க்ருதார்த்தோஹம் முநே ஜாதோ வாஞ்சிதார்த்தோ மமா கத:||" (18)

"பீதாம்புதி: ப்ரஸந்நஸ்த்வம் யதிமே கிமு துர்லபம்| அதஸ்த்வம் விரஜாம் தீக்ஷாம் ப்ரூஹிமே முநிஸத்தம||" (19)

பொருள்:
அத - பிறகு; 
ராம: - ராமர்;
தம் - அவரை (அகஸ்தியரை); தண்டவத்ப்ரணம்ய - சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி; 
துக்க நிர் முக்த: - துக்கத்தினின்றும் விடுபட்டவராக; 
ப்ரஹ்ருஷ்டேந அந்தராத்மனா - சந்தோஷமான மனதுடையவராக; 
உவாச - கூறினார்; 
முநே - முனிவரே; 
அஹம் க்ருதார்த்த: ஜாத: - நான் மகிழ்ச்சியடைந்தேன்; 
மம - எனக்கு; 
வாஞ்சிதார்த்த: - விரும்பிய பொருள்; ஆகத: கிடைத்துவிட்டது; 
பீதாமபுதி:- கடலைக் குடித்தவரான; 
த்வம் - தாங்கள்; 
ப்ரஸந்நோயதி - ஆனந்தமுடையவரானால்; 
மே - எனக்கு; 
துர்லபம்கிமு கிடைக்க முடியாதது எது இருக்க முடியும்; 
முநிஸத்தம - முனிவரே; 
அத: - ஆதலால்; 
த்வம் - தாங்கள்;
மே - எனக்கு; 
விரஜாம் தீக்ஷாம் - விரஜா தீட்சையை ; ப்ரூஹி -கூறுங்கள்.

விளக்கம்:- 
ராமர் துக்கத்தினின்றும் விடுபட்டு, மகிழ்ச்சி அடைந்தவராக அகஸ்தியரை சாஷ்டாங்கமாக வணங்கி, "எனக்கு நான் விரும்பியது கிடைத்துவிட்டது. கடலைக் குடித்தவரான தாங்கள் இருக்கும் போது, எனக்கு கிடைக்க முடியாதது எதுவுமில்லை. முனிவரே, தாங்கள் என் குரு, தாங்கள் தான் எனக்கு விரஜா ஆகம தீட்சையை கூற வேண்டும்" என்று வேண்டினார்.

விளக்கம் :
ஸ்ரீராமர் சோகரசத்தில் மூழ்கியிருந்தார். அவர் அருகில் அகஸ்தியர் வந்து பேசினார். ராமர் சோகரசத்திலிருந்து. கோபரசத்துக்கு மாறினார். இப்போதோ, ஆனந்த ரசத்துக்கு ஆட்பட்டார். இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் இப்படி நிமிடத்துக்கு நிமிடம் தன்னிஷ்டபடி எதிராளியின் உணர்ச்சிகளை மாற்றும் வித்தகராக அகஸ்தியர் இருக்கிறார் என்பதைத்தான்.

அவரை ராமருக்கு ஏற்கெனவே தெரியும். வனவாசம் வந்தபிறகு அவரை தரிசித்திருக்கிறார். அவரது மஹிமைகள் ராமருக்குத் தெரியும். அதனால்தான் அவர், மனப்பூர்த்தியாக ஒன்று நடக்கும். அதற்கு இப்படி செய். என்று சொன்னார் என்றால், அது நடந்துவிட்டதற்கே சமம் என்று எண்ணி, அப்போதே ராவணனைக் கொன்றதும். சீதா தேவியை மீட்டுவந்ததுமான திருப்தியும், சந்தோஷமும் ராமருக்கு ஏற்பட்டுவிட்டது.

அந்த சந்தோஷத்தோடு, "கடலைக் குடித்தவரான தாங்கள் சந்துஷ்டியோடு ஒன்றைச் சொன்னபிறகு. எனக்கு இனிமேல் என்ன வருத்தம்? அடைய முடியாதது என்று எதுதான் இருக்க முடியும்? அந்த தீட்சையைப் பற்றி சொல்லுங்கள்" என்று கேட்கிறார்.

இதில் குருவின் மஹிமையை புரிந்து கொள்ள வேண்டும். குருவிடம் சரணாகதி அடைந்தால் அவர் நல்ல வழி காட்டுவார். அது மட்டுமல்ல, குரு தெய்வத்திடம் கூட்டிச் செல்வார். வழிகாட்டி. 

சோகக்கடலில் மூழ்கிப் போயிருந்த ராமர் அவ்வளவு சோகத்தையும் மறந்து, ஆனந்தமாகிவிட்டார். ஏதோ ஒரு முனிவர் எதையோ கூறியிருந்தால் இது நடக்காது. சொன்ன வர் அகஸ்தியர் என்பதால்தான் சோகம் ஆனந்தமாக மாறிய மாயாஜாலம் நடந்தது.

அகஸ்திய உவாச:-
"சுக்லபஷே சதுர்தஸ்யா மஷ்டம்யாம்வா விசேஷத:| ஏகாதஷ்யாம் ஸோமவாரே ஆர்தராயாம் வா ஸமாரபேத்||" (20)

பொருள்:
சுக்லபக்ஷே - வளர்பிறையில்; சதுர்தஸ்யாம் - சதுர்த் தசியில் (அல்லது); அஷ்டம்யாம்வா - அஷ்டமியிலாவது; விசேஷத:- விசேஷமாக; 
ஏகாதஷ்யாம் - ஏகாதசியிலாவது;
ஸோமவாரே - திங்கட் கிழமையில்; ஆர்த்ராயாம்வா - அவ்வாறே திருவாதிரை நட்சத்திரத்தில்; 
ஸமாரபேத் - ஆரம்பிக்க வேண்டும்.

விளக்கம்:- தீட்சை ஆரம்பிப்பதற்கு, திதி வாரம் நட்சத்திரம் ஆகியவற்றை கூறுகிறார். திங்கட்கிழமை, திருவாதிரை நட்சத்திரமும் இணைந்து வரும் வளர்பிறையில் இதை தொடங்க வேண்டும். திதிகள் சதுர்த்தசி, அஷ்டமி அல்லது ஏகாதசியாக இருக்க வேண்டும்.
*****
"யம் வாமமாஹுர்யம் ருத்ரம் சாஸ்வதம் பரமேஸ்வரம்| பராத்பர தரம் சாஹு: பராத்பரதரம் ஷிவம்||" (21)

"ப்ரம்மணோஜனகம் விஷ்ணோர் வஹ்நேர் வாயோஸ் ஸதாஷிவம்| த்யாத்வாக்நிநா வஸ்த்யாக்நிம் விஷோத்யச ப்ருதக் ப்ருதக்"||(22)

"பஞ்சபூதாநி ஸம்யம்ய த்யாத்வா குணவிதி க்ரமாத்| மாத்ரா: பஞ்ச சதஸ்ரச்ச த்ரிமாத்ராத்விஸ்தத: பரம்||"(23)

"ஏகமாத்ரம(அ)மாத்ரம்ஹி த்வாதஷாம் தவ்யவஸ்திதம்| ஸ்தித்யாஸ்தாப்யாம்ருதோ பூத்வா வ்ரதம் பாசுபதம் சரேத்||" (24)

"இதம் வரதம் பாஷுபதம் கரிஷ்யாமி ஸமாஸத:| ப்ராதரேவது ஸங்கல்பம் நிதாயாக்நிம் ஸ்வசாகயா||" (25)

"உபோஷிதஷ்ஷுசிஸ்நாத: சுக்லாம்பரதரம் ஸ்வயம்| சுக்ல யக்ஞோபவீதஸ்ச சுக்லமால்யாநுலேபந:||" (26)

"ஜுஹுயாத் விரஜாமந்த்ரை: பராணாபாநாதிபிஸ்ம்ருத:| அநுவாகாந்த மேகாக்ரஸ் ஸமிதாஜ்ய சரூந் ப்ருதக்||" (27)

"ஆத்மந் யக்நீந் ஸமாரோப்ய யாதே அக்நேதி மந்த்ரத:| பஸ்மாதாயாக்நிரித்யாத்யை: விம்ருஜ்யாங்காநி ஸம்ஸ்ப்ருசேத்:||" (28)

பொருள்:- மேலானவற்றுக்கும் மேலான சிவபெருமான சம்சார பிணியிலிருந்து போக்கடிப்பவர் என்றும் அழகில் சிறந்தவர் என்றும் எக்காலத்திலும் உள்ளவர் என்றும் பரமேஸ்வரர் என்றும் மும்மூர்த்திகளுக்கும் மேலானவர் என்றும் கூறப்படும் சிவபெருமானை, ப்ரம்மா விஷ்ணு அக்னி வாயுக்களின் உற்பத்திக்கிடமான சிவபெருமானை தியானித்து அக்னியால் "ஆவஸத்யம்" என்ற அக்னியை சோதித்து ஐம்பூதங்களை நன்கு அறிந்து கொண்டு குணங்களின் விதிமுறைப்படி சிந்தித்து ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று மாத்திரைகளையும் சிந்தித்து, துவாதசாந்தத்திலுள்ள சிவபிரானை தியானித்து ஸ்தாபித்து தன்னையே சிவமயமாய் ஆக்கிக் கொண்டு பாசுபத விரதத்தை செய்ய வேண்டும்.

ஐம்புலன்கள் உண்டு. அதில் மண்ணுக்கு 5 குணங்கள், நீருக்கு 4 குணங்கள், நெருப்புக்கு 3 குணங்கள், காற்றுக்கு 2 குணங்கள், ஆகாசத்துக்கு 1 மாத்திரை அல்லது குணம். மாத்திரையற்றதாக இருப்பது ஆத்மா, அதைப் பற்றி யோசிக்க வேண்டும். ஆவஸத்யம் என்பது ஜீவனைக் குறிக்கிறது. ஜீவனையே அக்னி சொருபமாக சொல்லப்படுகிறது. யோகிகள் பரமாத்மாவை தமது சிரசில் தரிசிக்கும் இடத்திற்கு பெயர் துவாதசாந்தம். அத்தகைய சிவபிரானை நாம் மனதில் தியானித்து நமக்குள்ளேயே அவரை வரவழைத்து அவரே தானாக பாவித்து கொள்ளும் பக்தி பாவமே அமிரத்தம். அமிர்தம் அழிவற்றது. சிவபிரானே அமர்த்தம் அழிவற்றவர். அவரை தியானிக்க வேண்டும் என்று சொல்கிறார் அகஸ்தியர் ராமருக்கு.


இதி பத்ம புராணே..சிவ கீதா உபநிஷத்..பிரம்ம வித்யாயாம்..யோக சாஸ்திரே..சிவ ராகவ சம்வாதே..விரஜா தீஷா நிரூபணம நாம..த்ரியோத்யாய சம்பூர்ண:

Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்