சிவானந்த லஹரி ஸ்லோகங்கள் 36-40 விளக்கத்துடன்

36. பக்தியே புண்யாஹவாசனம்
இந்தத் துதியில் உள்ளத்தினாலேயே பரமசிவனே நமக்கு புண்யாஹவாசனம் செய்கிறேன் என்கிறார். து தத்துவம் சிந்திப்போம்

"பக்தோ பக்திகுணாவ்ருதே முதம்ருதா பூர்ணே ப்ரஸன்னே மன: கும்பே ஸாம்ப தவாங்க்ரி பல்லவயுகம் ஸம்ஸ்தாப்ய
ஸம்வித்பலம்| ஸத்வம் மந்த்ர-முதீரயந்-நிஜசரீராகார சுத்திம் வஹன் புண்யாஹம் ப்ரகடீ-கரோமி ருசிரம் கல்யாண-மாபாதயன்||"

பார்வதியுடன் கூடியவரே! பக்தனாகிய நான், பக்தியாகிற நூல் சுற்றப்பட்டதாயும், ஆனந்தம் என்கிற நீர் நிறைந்ததாயும், பிரகாசம், தெளிவு பொருந்தியதாயும் உள்ள மனதாகிய குடத்தில், உமது இரு திருவடிகளாகிற மாவிலைகளையும், ஞானமாகிற தேங்காயையும் வைத்து, ஸத்வ குணத்தை வளர்க்கும் "நமச்சிவாய" என்கிற பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபித்து, எனது தேகமாகிய வீட்டிற்கு பரிசுத்தத்தை உண்டாக்குபவனாய், மனதிற்கு உகந்த மங்களத்தைத் தேடுபவனாய் இந்த புண்யாஹ வாசனத்தை உலகிற்கு வெளியிடுகிறேன்.

எனது மனமே குடம், அது பக்தி என்ற நூலால் கட்டப்பட்டுள்ளது. அதனுள் ஆனந்தம் ஸந்தோஷம் என்பதே அம்ருதமயமான ஜலம். சிவனின் திருவடிகளே மாவிலையாக உள்ளது. ஞானம் என்பதே தேங்காய். நான் பக்தி பூர்வமாக துதிக்கும் "நமசிவாய" என்கிற பஞ்சாக்ஷரமே மந்த்ரம். ஆக பக்தியுடன் நிறைந்த பஞ்சாக்ஷரம் ஓதும் மனமே, இந்த பூத உடலுக்கு புண்யாஹவாசனமாகிறது என்கிறார் ஆதிசங்கரர். இதன் மூலம் சிவ நாம மஹிமையும், ஆழ்ந்த பக்தி கொண்ட மனதின் உன்னதத்தைக் கூறும் உத்தம் துதி. அசுத்தமான ஒரு வீட்டைப் புனிதம் ஆக்குவதற்குப் புண்யாஹவாசனம் செய்வது போல், அசுத்தமான சரீரத்தை உள்ளும் புறமும் புனிதம் ஆக்குவதற்கு ஆத்யாத்மிகமான புண்யாஹவாசனம் இங்கு கூறப்படுகிறது. இதற்கு வெளிப்பொருள் எதுவும் தேவையில்லை. குடமும் நீரும் தேங்காயும் மாவிலையும் எல்லாம் உள்ளேயே சித்தமாய் இருக்கின்றன.

37. பக்தியே அம்ருதமதனம்
இந்த துதியில் பரமசிவனை அடைவதற்கு பக்தி யோகமே சுலபம் என்று பக்தியின் உன்னதத்தை விளம்புகிறார்.

"ஆம்னாயாம்புதி-மாதரேண ஸுமனஸ் - ஸங்கா: ஸமுத்யன் மனோ மந்தானம் த்ருடபக்தி-ரஜ்ஜு ஸஹிதம் க்ருத்வா மதித்வா தத:| ஸோமம் கல்பதரும் ஸுபர்வ ஸுரபிம் சிந்தாமணிம் தீமதாம் நித்யானந்த- ஸுதாம் நிரந்தர ரமா-ஸௌபாக்ய - மாதன்வதே||"

சிறந்த மனமுடையவர்களின் ஆழ்ந்த பக்தி என்றும் கயிற்றால் நல் முயற்சியுடன் கூடிய மனதை மத்தாக ஆக்கி, வேதமாகிய கடலை நம்பிக்கையுடன் கடைந்து, அதிலிருந்து
உமாதேவியுடன் கூடிய சிவபெருமான் கற்பகத்தருவாய் வேண்டுவதை அளிப்பவராயும், காமதேனுப் போன்று விரும்பியதை அளிப்பவராயும், சிந்தாமணி என்கிறதைப் போன்று நினைத்ததை அளிப்பதாயும், புத்திமான்களுக்கு நிலையான பேரானந்தம் என்கிற அம்ருதம் போன்ற வராயும், அழியாத மோக்ஷ லக்ஷ்மியின் செல்வராயும் எல்லாம் ஆக, பரமேஸ்வரனை அடைகிறார்கள்.

பக்தி யோகத்தின் உன்னதத்தைக் கூற, தேவர்கள் பாற்கடலை மந்தர மலையாகக் கொண்டு, வாசுகி என்கிற பாம்பைக் கயிறாகக் கடைந்தபோது, ஹாலஹால விஷம் முதல் வந்தது அதனை பரமசிவனே உண்டு நீலகண்டனார். மேற்கொண்டு காமதேனு, கல்பதரு, சிந்தாமணி போன்றவை நினைத்ததை அளிப்பது வந்தன. மேற் கொண்டு தன்வந்தரி, மஹாலக்ஷ்மி அம்ருதம் கிடைத்தது.

புத்திமான்கள் மனதை மத்தாகவும், பக்தியைக் கயிறாகவும், வேதமான கடலைக் கடைய, விஷம் வரவில்லை. அம்ருதம் போல் ஸோமன், உமாநாதன் தோன்றுகிறார். வேதத்தை அத்வைத மதத்தை, ஞானத்தை போதித்த ஆதிசங்கரர் இதனில் பக்தியின் உன்னதத்தைக் கூறுகிறார்.

38. பக்தியே சிவமயம்
இந்த துதியில் பக்தர்கள் இதயத்தில் மிளிரும் சிவமயத்தை ஒரு சந்த்ரோதயமாக கல்பித்து சிலேடையாக வர்ணிக்கிறார்.

"ப்ராக்- புண்யாசல-மார்கதர்சித-ஸுதாமூர்த்தி: ப்ரஸன்ன: சிவ:
ஸோம: ஸத்குண - ஸேவிதோ ம்ருகதர: பூர்ணஸ்தமோ-மோசக:| சேத:புஷ்கர-லக்ஷிதோ பவதி சேதானந்தபாதோ நிதி:
ப்ராகல்ப்யேன விஜ்ரும்பதே ஸுமனஸாம் வ்ருத்திஸ்- ததாஜாயதே||"

பொருள்:-
பகவான் மீது ஈடுபாடு, பக்தி வேண்டுமானால் அது அவன் செயலால், அவன் கிருபையால், பூர்வ புண்ணியத்தால்தான் ஆகும்.

திருவாதவூரர் அரசனுக்காக ஜாதி குதிரை வாங்கத்தான் சென்றார். திருப்பெருந்துரைப் பெருமான் ஆவுடையார் சிவனார் அவரைத் தடுத்தாட்கொண்டு, கோயிலைக் கட்டியதோடு திருவாசகம் எனும் தேனை அருளிடச் செய்தார்.
ஆகவே அவர் கூறுவார் "அவனருளாலே அவன்தாள் வணங்கி", "ஈர்த்து என்னை ஆட்கொண்ட எம்பெருமானே" என்று. 

தாயுமான ஸ்வாமிகளை மலைக்கோட்டை ஈசன் தாயுமான ஸ்வாமி குருவாய் வந்து, ஆட்கொண்டார். அவர் சந்யாசமும் ஏற்று, உருக்கமான பல பாடல்களும் பாடி கடைசியில் ராமனாதபுரத்தில் சமாதியுற்றார். அவர் பாடல்களும் அதி அற்புதமானவை. மனதை நெகிழ்த்தும் திருப்புகழைப் பாடி முருகனிடம் ஐக்கியமானார்  அருணகிரிநாதப் பெருமான்.

பக்தியானது, ஒருவனுக்கு உயர்ந்த பக்த ஞானிகளின், சாதுக்களின் க்ருபையினாலோ அல்லது பகவானது க்ருபையினாலேதான் அடையமுடியும்! இதற்கு அவர்கள் புண்ணியமும் , முன் ஜன்ம கர்மாவை பொருத்து அமைவது.

சிவன் ஞானஸ்வரூபி, தக்ஷிணாமூர்த்தி. மௌனத்திலேயே சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தவர். மௌன தீக்ஷை. சில தக்ஷிணாமூர்த்தி துதி சிந்திப்போமா

"ஓம் ப்ரணவார்த்த ஸ்வரூபாய ஸுத்த ஞானைக மூர்த்தயே நிர்மலாய ப்ரசாந்தாய தக்ஷிணாமூர்த்தயே நம:"

"அக்ஞான திமிராந்தஸ்ய ஞானாஞ்சந ஸ்லாகயா சக்ஷு உன் மீலிதம் ஏன தஸ்மை ஸ்ரீகுரவே நம:"

ஒளி வந்திட இருள் மறைவதுபோல், அருணாசல ஜ்யோதி ஸ்வரூபனான சிவனை நாம் ஆழ்ந்து துதிக்க சிவனருள் ஜ்யோதி, நமது அக்ஞானம், அறியாமை, மனக்குழப்பம், மாயை, அவகுணங்கள் இவற்றிலிருந்து விடுபட்டு, நிர்மல மனது பெற்று, பக்தி - ஞானம் இவை மேலும் ஆழமாகப் போகத்தூண்டும்.

சிவனருள் இருந்தால், பக்தனுக்கு கவலை ஏது? பல நாயன்மார்களின் சரித்திரங்களும் அவ்வாறுதானே விளக்குகின்றன! மனிதனல்லாது, பாம்பு, யானை, சிலந்தி, நண்டு, எறும்பு, குருவி, இவைகள்கூட பல க்ஷேத்ரங்களில் சிவனருள் கிடைத்து முக்தி பெற்றது! அவைகளுக்கு மனிதன் போல் மனது என்பது உண்டா? பூர்வ புண்ணியமும் சாபமும் சேர்ந்து சிவனைத் துதிக்கச் செய்து உயந்து விடுகின்றன!

ஒரு குரங்கு வில்வ மரத்திலிருந்து, சிவராத்ரியன்று, இலைகளைப் பறித்து கீழே போட, அது யதேச்சையாக ஒரு சிவலிங்கம் மீது விழ, சிவனருளால் அந்த குரங்கு முசுகுந்த சக்ரவர்த்தியானதே!

நமது பூர்வ புண்ணியத்தால், சத்சங்கம் சேர்ந்து பக்தி புரிந்திட, பரம தயாளுவான பரமசிவன் நம்மை காப்பான் என்று திட நம்பிக்கையுடன் பணிவோம், உய்வோம்.

39. தர்மம் தலைகாக்கும்
இந்த துதியில் சத்திய ஸந்தனான ராஜா அரசை ஆளும்போது அந்த நாடு சுபிட்சமாக, வளமாக உள்ளது. அதுபோன்று பரமேஸ்வரன் நமது இதயத்தில் இருந்தால் சர்வ மங்களமும் உண்டாகும் என்கிறார் ஆதிசங்கரர்.

"தர்மோ மே சதுரங்க்ரிக:ஸுசரித: பாபம் விநாசம் கதம் காமக்ரோத-மதாதயோ விகலிதா: காலா: ஸுகாவிஷ்க்ருதா:| ஜ்ஞானானந்த-மஹெளஷதி: ஸுபலிதா கைவல்யநாதே ஸதா மான்யே மானஸ புண்டரீக-நகரே ராஜாவதம்ஸே ஸ்திதே||"

பொருள்:-
மனத்தாமரை என்கிற இடத்தில் யாவராலும் பூஜிக்கப்பட்டு வரும் ராஜ ஸ்ரேஷ்டரான பரமசிவன் வீற்றிருப்பதால் நான்கு கால்களையுடைய தர்மமானது நன்கு பரிபாலிக்கப்படுகிறது. பாபங்கள் யாவும் தொலைந்தன, நசித்தன. காமக்ரோத லோபமோஹ மத மாத்ஸர்யம் என்னும் அவகுணங்கள் யாவும் நீங்கின. பருவங்கள் மழை பெய்து இன்பம் பெருக்கின. ஆக ஞானானந்தம் எங்கும் என்றும் பரவுகிறது.

"தர்மோ ரக்ஷதி ரக்ஷித" என்பது வாக்கு. தர்மத்தை கடைபிடித்தால் அது அவனுக்கு நல்லனவே தந்து மங்களம் பொழியும்.

இந்த துதியின் தத்துவம் இவ்வாறு என்று உணர வேண்டும். மனமே நீ ஆழ்ந்த பக்தி செய்து சிவனை உனது இதயத்தாமரையில் கொண்டு வர வேண்டும். அதற்கு காம, க்ரோத, லோப, மத, மாத்ஸர்யம் என்கிற அவகுணங்களை மனம் நாடாமல் வெறுக்க வேண்டும், அழிக்க வேண்டும். தர்ம தேவதையின் நான்கு கால்களான தபஸ், நிர்மல மனது, கருணை, உண்மை இவற்றை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இதயவாசியான பரமசிவன் அருளால் எல்லா மங்களங்களையும் பெற்று ஆனந்தமாக வாழலாம்.

40. பக்திப் பயிர் வளர்த்தல்
இந்த துதியில் ஸதாசிவன் லீலைகள் என் உள்ளத்தில் பக்தி ப்ரவாஹத்தில் மிளிர்வதால் பஞ்சம் ஏது என்கிறார். துதி தத்துவம் சிந்திப்போம்.

"தீ-யந்த்ரேண வசோகடேன கவிதா குல்யோப-குல்யாக்ரமை: ஆனீதைச்ச ஸதாசிவஸ்ய சரிதாம்போரா சி திவ்யாம்ருதை:| ஹ்ருத்கேதாரயுதாச்ச பக்திகலமா: ஸாபல்ய-மாதன்வதே
துர்பிக்ஷான்-மம ஸேவகஸ்ய பகவன் விச்வேச பீதி: குத:||"

நிலத்தை நன்றாக உழன்று, உன்னதமான விதைகளை விதைத்து, வேண்டியவாறு நீர் பாய்ச்சி, களைகளை எடுத்தால், பயிர் நன்றாக செழுமையாக வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும். அப்போது பஞ்சம் என்பது இருக்காது. இதனை பக்திப் பயிருக்கு ஒப்புகிறார்.

பக்திப் பயிர் நன்றாக விளைந்து தகுந்த உன்னத பலன் அதாவது சிவமயம், சிவோஹம், முக்தி எய்து விட வேண்டுமானால், விதை அதாவது பக்தி நன்றாக இருக்க வேண்டும். அது ஆழ்ந்து இருக்க வேண்டும். பகவத் லீலா குணஸ்ரவணம், பஜனம் இவை செய்தலே நீர் ஊற்றுவது போலாகும். இது ஒருவேளை, ஒருநாள் என்று போதாது. தினமும் செய்ய வேண்டும். பக்திப் பயிரால் முக்தி என்ற தானியம் விளையும் வரை செய்து கொண்டே இருக்க வேண்டும். காம, க்ரோத, லோப, மோஹ, மத மாத்ஸர்யம், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை போன்ற அவகுணங்களான களைகள் அவ்வப்போது எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் சிவானந்தம், ஞானானந்தம், ப்ரம்மானந்தம், நித்யானந்தம், ஸதானந்தம், சிவகதி, சிவமயமாகுதல் என்கிற பக்தியின் ஆதரவால் ஜீவ - பரம - லய-ஐக்யம் -  எய்தும்.

பக்தியை நன்கு வளர்க்க சிவலீலா குணங்களை ச்ரவணம் செய்ய வேண்டும். பஜனம் செய்ய வேண்டும், தேவையற்ற அனுகூலமற்ற மற்ற செய்கைகளை அறவே விலக்க வேண்டும் என்று கூறும் மகா உன்னத துதி இது !

ஸதாசிவம் என்கிறார். இதன் தத்துவம் என்ன? ஒன்று எப்போதும் மங்களமே செய்பவன். வேறு என்ன? ஸதா என்பது தேவியினுடைய ரூபம், சிவன் என்பது ஈஸ்வர தத்துவம், ஆக சிவசக்தி இணைந்த அர்தநாரீஸ்வர ரூபமே ஸதாசிவம். அதாவது உமையுடன் கூடிய சிவன்.

மனதாகிய வயல் நன்றாக இருந்து, அதில் பகவானுடைய, ஸதாசிவனுடைய சரித்திரம், லீலாகுண ஸ்ரவண பஜனைகள் என்கிற நீர் பாய்ச்சினால்தான், மனது வேறு எந்த குந்தகங்களையும் அடையவிடாமல் இருந்தால்தான், பக்தி என்னும் பயிர் நன்கு விளைந்து முக்தி, ஞானம் என்னும் பலனை அளிக்கும் என்று உணர்த்தும் உன்னத துதி இது.


Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்