சிவானந்த லஹரி ஸ்லோகங்கள் 21-30 விளக்கத்துடன்
21. மனதில் சிவசக்தி
இந்தத் துதியில், எனது மனது தூயதாகியிருக்கிறது. அதனில் பார்வதி ஸஹிதமாய் வசித்து விளங்கி அருள வேண்டும் என வேண்டுகிறார்.
(ஸ்மராரே) மன்மதனின் பகைவரே! (த்ருதி ஸ்தம்பாதாராம் ) தைரியம் எனும் நடுத்தூணை ஆதாரமாகக் கொண்டதும், (த்ருடகுண நிபத்தாம் ) உறுதியான குணம் எனும் கயிற்றால் கட்டப்பட்டதும், (ஸகமனாம்) விரும்பிய இடத்திற்கு உடன் செல்வதும், (விசித்ராம்) அழகியதும், (பத்மாட்யாம்) தாமரைப்பூப்போன்ற வடிவு உடையதும், (பரதிதிவஸ ஸன்மார்க்க கடிதாம்) தினந்தோறும் நல்ல வழியில் நாட்டப்படுவதுமாகிய (மச்சேத:) எனது மனம் எனும் (விசதாம்) விசாலமான (ஸ்புடபடகுடீம்) அழுக்கற்ற படுதாவால் அமைந்த கூடாரத்தை (சக்த்யா ஸஹ ) பராசக்தியுடன் (ப்ராப்ய) அடைந்து (சிவகணை: ஸேவித சிவ கணங்களால் சேவிக்கப்பெற்றவரே! (விபோ) இறைவரே! (ஸ்வாமின்) ஆண்டவரே! (ஜய) வெற்றிகொண்டு விளங்குவீராக!
ஸ்மராரே பரமசிவன் காமனை எரித்தவன், அதை மனதில் இருத்தி தியானிப்பவன் மனத்திலும் காமஜயம் ஏற்படும். காமஜயம் இல்லாமல் பக்தி நிலை பெறாது. மனமாகிய கூடாரம் (கோயில் ) காமனாகிய சத்ருவுக்கு வசப்படக்கூடாது.
ஸ்புடபடகுடீம் பரமசிவனுக்கு வெள்ளை வெகு பிரியம். பனிமலை, விபூதி, வெள்ளை மாடு, தும்பைப்பூ. அபிஷேகத்துக்கு பால், தயிர். அதேபோல் மனது வெள்ளையாய் இருந்தால்தான் அதில் சிவபெருமான் வந்து அருள் செய்வார். உம்மால் எனது மனது தூயதாக்கப்பட்டுவிட்டது. ஆக அதனில் பராசக்தியுடன் என்றும் பொலிவுறும் என்று வேண்டல்!
காமனை எரித்ததை ஏன் நினைவு கூறுகிறார்? காமம், அதாவது ஆசைகள் மனதிலிருந்து அறவே அகல வேண்டும். காம ஸம்ஹாரம் இல்லாவிடில் மனதில் பக்தி ஆழ்ந்து நிலைக்காது.
*****
22. உள்ளங்கவர் கள்வன் - மனம் சிவனுக்கு அடக்கம்
இந்த துதியில் எனது மனம் சஞ்சலபுத்தியாயுள்ளது. அதனை அடங்கச் செய்திட அருள் புரியும் என வேண்டுகிறார்.
"ப்ரலோபாத்யை ரர்த்தாஹரண-பரதந்த்ரோ தனிக்ருஹே ப்ரவேசோத்யுக்தஸ் ஸன் ப்ரமதி பஹுதா தஸ்கரபதே| இமம் சேதச்சோரம் கதமிஹ ஸஹே சங்கர விபோ தவாதீனம் க்ருத்வா மயி நிரபராதே குரு க்ருபாம்||" (22)
(தஸ்கரபதே) கள்வர் தலைவரே! (சங்கர) மங்களத்தைச் செய்பவரே! (விபோ ) எங்கும் நிறைந்தவரே!(ப்ரலோபாத்யை:) காமம், கோபம், லோபம், பேராசை முதலிய கெட்ட குணங்களுடன் கூடி (அர்த்தாஹரண-பரதந்த்ர:) பிறர் பொருளை அபகரிப்பதிலேயே வசப்பட்டு (தனிக்ருஹே ) பணக்காரர் வீட்டில் (ப்ரவேசோத்யுக்தஸ் ஸன் ) புகுவதில் முயற்சியுடையதாய் (பஹுதா) பலவகையில் (ப்ரமதி) என் மனம் சுழல்கிறது.(இமம்) இந்த (சேதச்சோரம்) மனமாகிய திருடனை (இஹ ) இங்கே (கதம்) எப்படி (ஸஹே) சகிப்பேன்?(தவாதீனம் ) இதை உமக்கு அடங்கியதாக (க்ருத்வா) செய்து கொண்டு (நிரபராதே) குற்றமற்ற (மயி) என்னிடத்தில் (க்ருபாம் குரு ) அருள்புரியும்.
தஸ்கரபதே - பரமசிவனை 'ஸ்தேனானாம் பதயே நம:, தஸ்கராணாம் பதயே நம : "கள்வர் தலைவர்" என்றும், கொள்ளைக்காரர்களின் தலைவர் என்றும் ஸ்ரீ ருத்ரம் வணங்குகிறது. அவர் கள்வர்களின் தலைவராய் இருப்பதால் கள்வனைப் போன்ற மனதை அடக்கவல்லவர். அவரும் கள்வராதலால், அதாவது நமக்குத் தெரியாமல் நமது மனதைக் கொள்ளை கொள்கிறார்.
திருடர்களின் தலைவரே! எங்கும் நிறைந்து மங்களங் களைச் செய்யும் சங்கரரே! எனது திருட்டு மனமானது பேராசை, பிறர் பொருளை அபகரிப்பது, பணக்காரன் வீட்டில் புகுவது, போன்ற கீழான குணங்களில் நாடுகிறது என்னாலேயே சகிக்கவில்லை. ஆக நீவீர் என் மனதைக் கவர்ந்து, உமக்கு அடங்கியதாகச் செய்து, எனக்கு அருள் புரியும், என வேண்டுகிறார்
மனது சஞ்சலமானதே மனது ஒரு நிலையில் இராது அதனை கட்டுப்படுத்தி நேர்வழியில்தான் செல்ல வேண்டும் என்று நாம் நினைத்தாலும், நமக்கு அது கட்டுப்படாமல் தீயவழிகளில் போக சிந்திக்கும். ஆகவே, ஆதிசங்கரர் நமக்காக வேண்டுகிறார்: எங்கும் நிறைந்த சிவபெருமானே, மங்களங்கள் செய்பவரே என் மனதைக் கவர்ந்து உமக்குடையதாக ஆக்கி அருள வேண்டும் என்று வேண்டுகிறார். மாணிக்கவாசகரின் உள்ளத்தை அவர் அறியாமலேயே ஈர்த்து தடுத்து ஆட்கொண்ட எம்பெருமான்..
*****
23. பக்தியே உயர்ந்த பதவி
இந்த துதியில், எனக்குப் பதவி ஏதும் தேவையில்லை. அது அஹங்காரத்தில் கொண்டு போய் விட்டுவிடும். எனக்கு உம்மீது பக்தியே போதும் என்கிறார்.
"கரோமி த்வத் பூஜாம் ஸபதி ஸுகதோ மே பவ விபோ விதித்வம் விஷ்ணுத்வம் திசஸி கலு தஸ்யா: பலமிதி| புனச்ச த்வாம் த்ரஷ்டும் திவி புவி வஹன் பக்ஷி ம்ருகதா ம(அ)த்ருஷ்ட்வா தத்கேதம் கதமிஹ ஸஹே சங்கர விபோ||" (23)
(விபோ) எங்கும் நிறைந்தவரே! (தவத் பூஜாம்) உமது பூஜையை (கரோமி) செய்கிறேன் (ஸபதி) - உடனே பிரசன்னராகி (மே) எனக்கு (ஸுகத:) பேரின்பத்தை அளிப்பவராக (பவ) நீர் ஆகவேண்டும். (விதித்வம்) பிரம்மாவின் பதவியையோ, (விஷ்ணுத்வம்) விஷ்ணுவின் பதவியையோ (தஸ்யா:) அந்தப் பூஜையின் (பலம் இதி ) பலன் என்று (திசஸி கலு) நீர் அளிப்பீரேயானால் (புனச்ச) மீண்டும் (தவாம்) உம்மை (த்ரஷ்டும் ) தரிசிப்பதற்கு (திவி ) ஆகாயத்திலும் (புவி) பூமியிலும் (பக்ஷி மருகதாம்) ஹம்ஸப்பறவை வடிவையும் வராக வடிவையும் (வஹன்) எடுத்துக்கொண்டு - அலைந்து - (அத்ருஷ்டவா) காணாமல் (தத் கேதம்) அதனால் ஏற்படும் துன்பத்தை (கதம்) எவ்வாறு (இஹ ) இங்கே (ஸஹே) சகிப்பேன்? (சங்கர) மங்களத்தைச் செய்பவரே, (விபோ) எங்கும் நிறைந்தவரே!
ஸபதி ஸுகதோ மே பவ - பக்திக்குப் பரிசாகப் பதவி கிடைத்தால் அது எவ்வளவு உயர்ந்த பதவியானாலும் ஈஸ்வர ஸாக்ஷாத்காரத்திற்குத் தடையாகும். ஆகையால் என்னால் வேண்டப்படுவது, இங்கேயே, இப்போதே, 'ஸபதி ' உடனே ஸாக்ஷாத்கார ஆனந்தானுபவம் தான். அதாவது நேரிடையாக எனக்கு தரிசனம் தர வேண்டும்.
செல்வச் செருக்குக்கும், கல்விச் செருக்குக்கும் எட்டாதது பரம்பொருள் என்பதை விளக்குவது லக்ஷ்மீ நாயகனான விஷ்ணுவும், ஸரஸ்வதீ நாயகனான பிரம்மாவும் கூட அடியும் முடியும் காணாமல் அலைந்தார்கள். பிரம்மன் படைக்கும் தொழிலையும், மஹாவிஷ்ணு காக்கும் தொழிலையும், உமது பூஜா பலனாகத்தான் பெற்றனர். அத்தகைய ப்ரம்ம, விஷ்ணு பதவிகள் பூஜை பலனாக எனக்குத் தேவையில்லை. அப்பதவிகளில் மோகங் கொண்டு, அகங்காரம் கொண்டு, உமது மஹிமையையும் மறந்து வராக பன்றியாகவும், அன்ன பறவையாகவும் அடிமுடி காணாத அவஸ்தை எனக்குத் தேவையில்லை. ஆகையால் கவிச்செல்வம், பொருட்செல்வம் இவற்றால் உம்மை உணர்வேன் என்கிற தப்பு மனப்பான்மையை என்னிடம் தவிர். உம்மை அன்புடன் நேசித்து, பூஜை செய்து, பக்தியில் ஆழ்ந்து, சிவஞானம், சிவஞானானந்தம், சிவானுபூதி பெற்றாலே போதும் என வேண்டுகிறார்.
சண்டிகேசர், நந்திகேசர் சிவபூஜையால் தானே சிவபக்தர்களாகக திகழ்ந்தனர். சிவ பக்தியே உயர்ந்த பதவி..புஷ்பதந்தர், சிவமஹிம்நா ஸ்தோத்திரம்..
*****
24. கயிலை காட்சி அனுபவம்
இந்த துதியில் கைலாய காட்சியையும் அதனில் திளைத்து விடுவதையும் வேண்டுகிறார்.
"கதா வா கைலாஸே கனகமணி ஸௌதே ஸஹகணைர் வஸன் சம்போரக்ரே ஸ்புட கடித-முர்த்தாஞ் ஜலிபுட: விபோ ஸாம்ப ஸ்வாமின் பரமசிவ பாஹீதி நிகதன் விதாத்ருணாம் கல்பான் க்ஷணமிவ விநேஷ்யாமி ஸுகத:||" (24)
(கதா வா) எப்போது (கைலாஸே) கைலாஸ பர்வதத்தில் (கனகமணி ஸௌதே) பொன்னும் ரத்னமும் இழைக்கப்பட்ட உப்பரிகையில் (சம்போ:) பரமசிவனுடைய (அக்ரே) முன்னிலையில் (ஸஹகணை :) பிரமத கணங்களுடன் (வஸன்) வசித்துக்கொண்டு (ஸ்புடகடித மூர்த்தாஞ்ஜலி புட:) தலைமேல் கூப்பிய கை விளங்க, (விபோ ) எங்கும் நிறைந்தவரே! (ஸாம்ப ) அம்பிகையுடன் கூடியவரே! (ஸ்வாமின்) இறைவரே! (பரம) மேலானவரே! (சிவ) மங்களத்தைச் செய்பவரே! (பாஹி ) காப்பாற்றியருளும்' (இதி) என்று (நிகதன் ) சொல்லிக் கொண்டு (ஸுகத:) இன்பமாக (விதாத்ரூணாம் கல்பான்) பிரம்மாக்களின் கல்பங்களைப் போல் நீண்டகாலத்தை (க்ஷணம் இவ) ஒரு நொடி போல (விநேஷ்யாமி ) கழிப்பேன்?
சிவ தரிசனம் பெற ஆழ்ந்த இந்த துதியை பக்தர்கள் உணர வேண்டும்.
பரமசிவனே, கைலாயநாதனே, எப்போது கைலாஸ பர்வதத்தில், பொன் ரத்தினங்கள் இவைகளால் இழைக்கப் பட்ட ஆசனத்தில், பரமசிவனுடைய முன்னிலையில், முதற்கணங்களான நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர் அவர்கள் வசித்துக் கொண்டு அவர்கள் தலைமேல் கூப்பிய வண்ணம் இருப்பார்களே, அம்பிகையுடன் கூடியவரே, இறைவரே, யாவருக்கும் மேலானவரே, மங்களமே, நல்லதையே யாவருக்கும் செய்பவரே, என்னைக் காப்பாற்றி அருளும் என்று சொல்லிக்கொண்டு, ஆனந்தமாய், பிரம்மாக்களின் கல்பங்கள் போல் நீண்ட காலத்தை ஒரு நொடி போல் கழிப்பேன் என்று வேண்டுகிறார்.
'தத் பாவம் பவதி" என்பது உபநிடத வாக்கியம். எவ்வாறு ஆழ்ந்து எண்ணுகிறாயோ அவ்வாறே நீ ஆவாய். கைலாயத்தில் சிவபெருமானை பரிவார கணங்களுடன் தரிசிக்க வேண்டும் என்ற ஆழ்ந்த ஆர்வம் கொண்டு பக்தி செய்தால் பரமதயாளுவான பரமேஸ்வரன் அத்தரிசனம் தருவார் ஈவான் சுந்தரர், வரகுண பாண்டியன், ஒளவையாருக்கு ஈயவில்லையா! நக்கீரருக்கு கைலாய தரிசனம் காளஹஸ்தியிலே அப்பர் தமது தள்ளாத வயதில் கைலாயம் தரிசிக்கச் சென்றாராம் கால் நடக்க முடியாமல் போக படுத்து வணங்கியபடியே சென்றாராம். உடலில் பல காயங்கள். சிவன் அவரது ஆழ்ந்த பக்திக்கு உகந்து நீவீர் இப்போது திருவையாறு ஆற்றில் எழுவீர் உமக்கு கயிலாய தரிசனம் அங்கே என்றார். காரைக்கால் அம்மையார் பேயாக மாறி கைலைநாதனை தரிசிக்க ஆசைப்பட்டார். அவளுக்கு தரிசனம் திருவாலங்காட்டில்.
பரமேஸ்வர, சம்போ மஹாதேவா, அன்னையுடன் கூடிய மஹாதேவா, ஸ்வாமின் என்று பலவிதமாக ஆழ்ந்து வேண்டி அந்த சிவானந்த ரஸாம்ருதத்தில் மூழ்கி பரவசமாகி தன்னை மறந்த நிலை வரவேண்டும். அந்த நிலை, பரவசானந்த லய நிலை பல பிரம்ம கற்பங்களான ஒரு வினாடியாகக் கழிக்கின்ற நிலை, எனக்கு எப்போது வரப்போகிறது என்று கேட்கிறார் ஆதிசங்கரர். கால காலனைப் பார்த்து "பல பிரம்ம கற்பங்கள் ஒரு வினாடி என்கிறார். இது என்ன அளவு? சிறிது சிந்திப்போமா, நிமிடம், மணி, நாள், வாரமாலாதம் வருடம் இது தெரியும். தமிழ் வருடங்கள் பார்த்தால் பிரபவ, விபவ என்று 60 வருடங்களுக்குத்தான் பெயர் உள்ளது.
இதனில் யுகம், பிரம்ம கல்பம் யாதும் இல்லை. கல்பம் என்றால் 1000 சதுர்யுகங்கள் - அது பிரமனுக்கு ஒரு நாள்.
யுகங்கள் - 4, க்ருத, த்ரேத, த்வாபர, கலி என்று (இப்போது நடப்பது கலியுகம்).
4 யுகம் சேர்ந்தது 432 லக்ஷம், நமது வருடங்கள் அதுவே பிரம்மாவின் அரை நாளாகும். நாள் முடிந்ததும், பிரளயம் வரும். அப்போது புது பிரம்மா வருவார். ஆக, சில வினாடிகள் கைலாஸத்தில் நாம் இருந்தால் நமது பல ஆயிரம் வருடம் கழிந்து விடும். பிரம்மா 100 வருடம் வாழ்கிறார். ஆதிசங்கரருக்கு என்ன பேராசை - பல பிரம்ம கற்பங்கள் ஒரு வினாடியாக கழிக்கின்ற நாள் எப்போது வரும் என்கிறார். அவர் சிவ மறு அவதாரம். ஆக அவ்வாறு கேட்கலாம்.
இந்த கலியுகத்தில் நாமெல்லாம் பிறந்து 100 ஆண்டுகள்தான் அதிக வாழ்வு என்ற நிலையிலிருக்கும்போது, உனது கைலாச தரிசனத்தை எனக்கு ஒரு வினாடியாவது காண்பிக்க மாட்டாயா! என்னை உய்யவிடுவாயா. சிவானந்தத்தில் அமிழ்ந்திடச் செய்வாயா என்றுதான் வேண்டலாம்.
இந்த துதியின் தத்துவம் என்ன? கைலாயம் எங்கோ இமயமலையில் இல்லை. "சிவானந்த ரூபம் சிவோஹம்" என்று பார்த்தால், சிவன் இருக்கும் அந்த கைலாயம் நமது இதயத்தில், நமது ஆத்மாவில். அதனை உணர்ந்து, அமிழ்ந்து, ஆனந்த லயமாவதே, இந்த மனித பிறவியின் பயன் என்று ஆழ்ந்து செயல்பட வேண்டும். பரம தத்துவம் வாய்ந்த துதி இது என்று நாம் நெகிழ, மகிழ வேண்டும்.
*****
25. சிவா சிவ தரிசனம் - வ்ருஷாபரூட தரிசனம்
இந்த துதியில் பார்வதியுடன் கூடிய சிவனை எப்போது தரிசிப்பேன் என்று ஏங்குகிறார்.
"ஸ்தவைர்-ப்ரஹ்மாதீனாம் ஜயஜய- வசோபிர் நியமினாம் கணானாம் கேலீபிர் மதகல மஹோக்ஷஸ்ய ககுதி| ஸ்திதம் நீலக்ரீவம் த்ரிநயன முமாச்லிஷ்ட- வபுஷம் கதா த்வாம் பச்யேயம் கரத்ருத-ம்ருகம் கண்ட பரசும்||" (25)
பிரம்மா முதலிய தேவர்களுடைய துதிகளோடும், நியம முறைகளைக் கடைபிடிக்கும் ரிஷிகளின் ஜயஜய என்ற கோஷங்களோடும், நந்தி, பருங்கி முதலிய சிவ கணங்களோடு விளையாடிக் கொண்டிருப்பவராயும், கொழுப்புள்ள பெரிய காளையின் மேல் வீற்றிருப்பவ ராயும், கறுத்த கழுத்தை (நீலகண்ட) உடையவராயும், மூன்று கண்கள் உடையவராயும், உமாதேவியால் ஆலிங்கனம் செய்யப்பட்ட உடலை உள்ளவராயும், மானும் பரசும் ஏந்தியிருக்கும் உம்மை என்று தரிசிப்பேன் என்று ஏங்குகிறார்.
சிவபெருமானுக்கு நீலகண்டன் என்று பெயர் ஏன்? அமிர்தம் கடைந்த கதை
மான் பரசு ஏன் ஏந்தியிருக்கிறார்?. தாருக வனத்தில் ரிஷிகள் செருக்குற்றிருந்தனர். அதாவது தங்களுக்கு மும்மூர்த்திகளும் இணையானவர்கள் இல்லை என்றும், வேத மந்திரங்களிலும், வேள்விகளிலும் தங்களைவிடச் சிறந்தவர்கள் இல்லை என்று கர்வமுற்றிருந்தனர். பக்தி கொள்ளாது கர்மங்கள் மட்டுமே செய்து கொண்டிருந்த ரிஷிகள்
ஆக, நாம் என்ன உணர வேண்டும்? சிவனை நிந்திக்கக்கூடாது. போரிட எண்ணக் கூடாது. பக்தியால் பணிய வேண்டும். பணிந்தால் அருளுபவன் சிவன். தேவி அருகிலிருக்க பரமசிவன் மனத்தில் அருள் உடனே சுரக்குமாம். ஆக, உமாசங்கரனை தரிசிக்க விழைகிறார்.
ரிஷப வாஹன தத்வம் என்ன? அதுதான் தர்மம். நந்தி தர்மத்தின் அடையாளம், அதன் மேல் அதாவது தர்மத்தின் மேல் அமர்ந்து தர்ம பரிபாலனம் செய்கிறார். நந்தி தர்மத்தின் உருவகம், பொறுமையின் எடுத்துக் காட்டு. ஆக, ரிஷப வாஹனத்தில் அலங்கார பூஷிதனான சிவனை உமையுடன் தரிசிக்க, கருணாமூர்த்தி, கருணை அருள் மழை பொழிகிறார். இந்த துதியை பக்தியுடன் துதித்து வணங்கினால் மங்கள ஸ்வரூபியான உமாசங்கரன் தரிசனம் தந்து அருள் பொழிவான்
*****
26. பாதாரவிந்த தரிசனம்
இந்த துதியில் சிவபாதாரவிந்த தரிசனம் எப்போது அடைவேன் என்று நெகிழ்கிறார்.
"கதா வா த்வாம் த்ருஷ்ட்வா கிரிச தவ பவ்யாங்க்ரி யுகலம் க்ருஹீத்வா ஹஸ்தாப்யாம் சிரஸி நயனே வக்ஷஸி வஹன் ஸமாச்லிஷ்யாக்ராய ஸ்புட ஜலஜ கந்தான் பரிமலா னலப்யாம் ப்ரஹ்மாத்யைர்-முத மனுபவிஷ்யாமி ஹ்ருதயே||" (26)
மலையில் வசிப்பவனே, உம்மைப் பார்த்து உமது மங்களங்கள் செய்கின்ற இரண்டு பாதங்களையும் இரண்டு கைகளாலும் பிடித்து தலையிலும், கண்ணிலும், மார்பிலும் வைத்து இறுகத் தழுவிக்கொண்டு, மலர்ந்த தாமரை போன்ற பரிமள வாசனையை முகர்ந்து, பிரம்மா முதலிய தேவர்களாலும் அடைவதற்கு அரிய ஆனந்தத்தை, எனது இதயத்தில் எப்போது அனுபவிப்பேனோ என்று நெகிழ்கிறார். பாதம் பணிகிறோம் என்றால் நமது ஆணவத்தை அஹங்காரத்தை அழிக்கிறோம் என்று பொருள்.
பகவன் பாதம் பணிவது என்பது நமது செயலால் அல்ல. அதற்கும் பகவன் கருணை, சித்தம் இருந்தால்தான் நடக்கும். உதாரணமாக, குதிரை வாங்கச் சென்ற பாண்டிய மந்திரி திருவாதவூரரை வலிய இழுத்து திருவாசகம் எனும் தேன், அதை அருளிய மாணிக்கவாசகப் பெருமான் "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" என்று பாடுவார். அதாவது அவனை வணங்குவதற்கு கூட அவன் அருளால் தான் நடக்கும்..
திருமூலரின் திருமந்திரத்திலும் பல திருவடி பெருமையை கூறும் பாடல்கள் உள்ளன.
பரமசிவ பரம பித்தரான அப்பய்ய தீக்ஷிதரும், ஊமத்தங்காய் தின்று தன் மனோநிலை எவ்வாறு என்று சோதிக்க, ஆத்மார்ப்பண ஸ்துதியில் "த்வத் பாதாம்புஜ ப்ரதனம்ருதே உபாயம் ந ஏவ பஸ்யாமி"
ஸம்ஸார வேதனைகளில் உழலும் நான் உமது பாதாரவிந்தங்களில் அடைக்கலம் புகுவதைத் தவிர வேறு வழி காண்கிலேன் என்று உருகிறார்.
பரமனின் பாதாரவிந்தங்களில் பணிந்து நாம் என்றும் பரமானந்த அனுபூதி லயம் பெற்று நெகிழ்வோமே !!
*****
27. மனதை அர்ப்பணம் செய்தல், மனமே சிறந்த காணிக்கை
இந்த துதியில் சிவனுக்கு என் மனதைத் தவிர வேறு யாதுதான் அளிக்க முடியும் என்கிறார்.
கரஸ்தே ஹேமத்ரௌ கிரிச நிகடஸ்த்தே தனபதௌ க்ருஹஸ்தே ஸ்வர்பூஜா(அ)மர ஸுரபி சிந்தாமணிகணே சிரஸ்தே சீதாம்சௌ சரண யுகலஸ்தே (அ) கிலசுபே கமர்த்தம் தாஸ்யே(அ) ஹம் பவது பவதர்த்தம் மம மன:|
(கிரிச) மலையில் உறைபவரே! (கரஸ்தே ஹேமாத்ரௌ ) கையில் பொன்மலை இருக்க, (நிகடஸ்தே) தனபதௌ ) அருகில் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் இருக்க, (க்ருஹஸ்தே ஸ்வர்பூஜா அமரஸுரபி சிந்தாமணிகணே) வீட்டில் கற்பகவிருக்ஷம், காமதேனு, சிந்தாமணி ஆகியவற்றின் கூட்டம் இருக்க, (சிரஸ்தே சீதாம்சௌ) தலையில் குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன் இருக்க, (சரண யுகளஸ்தே அகிலசுபே ) இரு திருவடிகளிலும் எல்லா மங்களங்களும் நிலைத்திருக்க, (அஹம்) நான் (கம் அர்த்தம்) எந்த வஸ்துவை (தாஸ்யே ) உமக்கு அளிப்பேன்? (மம மன:) என்னுடைய மனது (பவத் அர்த்தம் ) உம் பொருட்டு அளிக்கப்பட்டதாக (பவது) ஆகட்டும்.
கரஸ்தே ஹேமாத்ரௌ - செய்தபோது பரமசிவன் த்ரிபுரஸம்ஹாரம் பொன்மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டார்.
நிகடஸ்தே தனபதௌ - குபேரனைப் பரமசிவன் தாஸனாகவும் கொண்டவர். ராஜாதிராஜனான தோழனாகவும்
கற்பகவிருக்ஷம் காமதேனு சிந்தாமணி - ஆகியவை அண்டியவர்க்கு அவர்கள் ஆசைப்படும் பொருளை எல்லாம் அளிப்பவை.
சரண யுகளஸ்தேsகிலசுபே - எல்லா நலன்களுக்கும் உறைவிடம் பரமசிவனுடைய பாதங்கள்.
கைலைமலையில் வசிப்பவரே! தங்கமயமான மேரு மலையானது திரிபுர சம்ஹாரத்தின் போது தங்களுக்கு வில்லாக கையில் அமைந்தது. ஐஸ்வர்யங்களுக்கு அதிபதியான குபேரன் அருகிலேயே உள்ளான். தேவலோகத்தில் யாவற்றையும், நினைத்ததை அளிக்கும் கல்பக வ்ருக்ஷம், தேவர்களின், பசுவான காமதேனு, சிந்தாமணி இவையாவும் உமது வீட்டிலேயே இருக்கிறது. குளுமையைத் தரும் சந்திரன் உமது தலையில் அமர்ந்துள்ளான். எல்லாவித மங்களத்தைத் தருவது உமது சரணாரவிந்தங்கள் என்று இருக்கும்போது, யான் எந்த வஸ்துவை உமக்குத் தர முடியும், இயலும்? ஆக என் மனது உமக்கென்று ஆகட்டும் என்கிறார்.
என் மனது எனக்குச் சொந்தம், அது ஒன்றுதான் அவரிடம் இல்லாதது. ஆக அதுவே அவருக்கு அர்ப்பணிக்கத்தக்கது என்கிறார்.
*****
28. சிவ பக்தி மஹிமை
இந்த துதியில் சிவபூஜை, நாமஸங்கீர்த்தனம், ஸாதுஸங்கம், சிவத்யானம் இவைகளினாலேயே சிவமோக்ஷம் இங்கேயே என்கிறார். உத்தமமான துதி!
"ஸாரூப்யம் தவ பூஜனே சிவ மஹாதேவேதி ஸங்கீர்த்தனே ஸாமீப்யம் சிவ-பக்தி-துர்ய-ஜனதா ஸாங்கத்ய - ஸம்பாஷணே| ஸாலோக்யஞ்ச சராசராத்மக-தனு த்யானே பவானீபதே ஸாயுஜ்யம் மம ஸித்த-மத்ர பவதி ஸ்வாமின் க்ருதார்த்தோ (அ)ஸ்ம்யஹம்||" (28)
(ஸாரூப்யம்) ஸாரூப்யம் எனும் முக்திநிலை (தவ) உன்னுடைய (பூஜனே) பூஜையிலும், (ஸாமீப்யம்) ஸாமீப்யம் எனும் முக்திநிலை ( சிவ மஹாதேவ இதி ஸங்கீர்த்தனே) 'சிவனே! மகாதேவனே!' என்று ஸங்கீர்த்தனம் செய்வதிலும், (ஸாலோக்யம் ச) மேலும் ஸாலோக்யம் எனும் முக்திநிலை (சிவபக்தி துர்ய ஜனதா -) சிவபக்தியைத் தலையால் தாங்கும் ஜனங்களுடன் (ஸாங்கத்ய ஸம்பாஷணே) கூடியிருப்பதிலும் பேசுவதிலும், (ஸாயுஜ்யம்) ஸாயுஜ்யம் எனும் முக்திநிலை (சராசராத்மக தனு தயானே) சராசரப் பிரபஞ்ச வடிவான உமது திருமேனியின் தியானத்திலும் (மம ) எனக்கு (அத்ர ) இங்கேயே, இப்பிறவியிலேயே (ஸித்தம்) கிடைத்துவிட்டதாக (பவதி ) ஆகிறது.(பவானீபதே ) பார்வதி நாதனே! (ஸ்வாமின்) இறைவனே!(அஹம்) நான் (க்ருதார்த்த:) அடையவேண்டிய பயனை அடைந்தவனாக (அஸ்மி) ஆகிறேன்.
பவானி தேவியின் பதியே, ஸாரூப்யம் எனும் முக்திநிலை உம்மை பூஜிப்பதாலும், சிவனே, மஹாதேவனே என்று உனது நாம சங்கீர்த்தனம் செய்வதால் ஸாமீப்யம் எனும் முக்தி நிலையையும், சிவ பக்தியில் அமிழ்ந்து இருக்கும் சிவபக்த ஸாது சங்கத்தால் ஸாலோக்ய முக்தியையும், ஸாயுஜ்யம் எனும் முக்தி நிலை சிவஸ்வரூப தியானத்திலேயே, இப்பிறவியிலேயே அடைந்துவிட்டதாக ஆகிறது. ஸ்வாமியே நான் அடைய வேண்டியதை அடைந்தவனாகிறேன் என்கிறார்.
ஆழ்ந்த தத்துவம் வாய்ந்த துதி இது. உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த துதியை மனதில் ஆழ்ந்து, நெகிழ்ந்து, கசிந்து, உள்ளன்புடன் உருகி, நினைத்தாலேயே சிவஞான முக்திநிலை அடையலாம்.
விபூதி ருத்ராக்ஷம் அணிந்து, சிவலிங்கத்திற்கு ஏகாதசருத்ரம் ஜபித்து, அபிஷேகம் செய்து, அஷ்டோத்ரம், த்ரிசதி, ஸஹஸ்ரநாமம் என்று பலப்பல நாமாவளிகளில் சிவனுக்கு, வில்வம், கொன்னை, இருவாக்ஷி, தும்பை போன்ற தூய மலர்களால் அர்ச்சித்தாலே-சிவ ஸாரூப்யம் அதாவது சிவமயமாகுதல் என்ற முக்தி நிலை எய்தலாம். அந்த நிலை எய்துவதற்கு, பூஜையில் படாடோபம், கர்வம், நான் என்ற அஹங்காரம் கூடாது. ஆழ்ந்த தூய பக்தி தேவை. கண்ணப்பன் அதுதானே செய்தான்! வேதம் யாது அறியாத பேதை வேடுவன் அவன்; அவனது தூய பக்திக்கு சிவன் அருளவில்லையா!
சிவ, மஹாதேவ என்று பகவான் நாமங்கள் சங்கீர்த்தனம் செய்வதிலேயே சிவ ஸாமீப்யம்- சிவன் அருகில் நாம் உள்ளோம் என்கிற முக்தி நிலை எய்தலாம். சங்கீர்த்தனம் பயபக்தியுடன் இருக்க வேண்டும். மற்றவர்கள் கேட்டு 'ஹாஹா' என்று சந்தோஷமாக கைதட்டுவதாகமோ, ஸம்பாவனையை எதிர்பார்த்தோ. அல்லது ஸம்பாவனைக்கு உகந்த அளவு பஜனையோ செய்தல், அந்நிலையை எய்யச் செய்யாது! (ஆனால்) இந்நாட்களில் நாம ஸங்கீர்த்தனம் என்கிற பஜனை, ஸங்கீத கச்சேரி போல் அந்த நிலைக்கு வந்துவிட்டது, வருந்தத்தக்க விஷயம்!)
காமக்ரோத, லோப, மோஹ, மத மாத்ஸர்யங்கள் அற்று, சுத்த பரிபூரண மனத்துடன் சிவனையே தியானம். கானம், ஜபம் செய்யும் சாதுக்களின் சங்கமே சிவலோகத்தில் வாழும் ஸாலோக்ய முக்தியாகும். சாதுக்கள், அசல் சாதுக்களாக இருக்க வேண்டும். போலி சாதுக்களாக இருந்தால் பயனில்லை. சிவனைத் தவிர, வேறு நாட்டமுள்ள சாதுவேடதாரிகள் சங்கத்தில் பயனில்லை.
சதாஸர்வ காலமும் சிவனே என்று தியானத்தில் மூழ்கி, தன்னை மறந்து, தன் உடலை மறந்து, சிவானந்த-லய-லஹரி - அனுபூதி-ரஸத்தில் அமிழ்வதே ஸாயுஜ்ய முக்தி நிலை அடைவதாகும். இந்த நிலையில் இருந்தவர் தான் திருவண்ணாமலை ரமண மஹரிஷி, நெரூர் ஸதாஸிவப்ரம்மேந்திராள், அப்பய்ய தீக்ஷிதர், ஹரதத்தர், மாணிக்கவாசகர் போன்ற மஹனீயர்கள். அவர்கள் எப்போதும் ஸஹஜஸாயுஜ்ய முக்தி நிலையில் அமிழ்ந்தவர்கள். அருணாசல நாமஸ்மரணம் முக்திநிலை எய்தும் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு ரமணமஹரிஷி எனலாம்.
சிவபூஜையாலே ஸாக்ஷாத்காரம் பெற்றவர்கள், சண்டிகேஸ்வர், மார்க்கண்டேயர் போன்ற மஹனீயர்கள்.
*****
29. கருணா தீக்ஷை வேண்டல்
இந்த துதியில் சிவனே, உம்மையே தியானிக்கிறேன். தீக்ஷை தந்தருளும் என்று வேண்டுகிறார். உன்னத துதி துதி பொருள் தத்துவம் சிந்திப்போம்.
"த்வத் பாதாம்புஜ-மர்ச்சயாமி பரமம் த்வாம் சிந்தயாம்யன்வஹம் த்வாமீசம் சரணம் வ்ரஜாமி வசஸா த்வாமேவ யாசே விபோ | வீக்ஷாம் மே திச சாக்ஷுஷீம் ஸகருணாம் திவ்யைச் சிரம்
ப்ரார்த்திதாம் சம்போ லோககுரோ மதீய மனஸஸ் - ஸௌக்யோபதேசம் குரு||" (29)
(விபோ ) எங்கும் நிறைந்தவரே! (த்வத் பாதாம்புஜம்) உமது திருவடித்தாமரையை (அர்ச்சயாமி) பூஜிக்கிறேன். (பரமம்) சிறந்தவரான (த்வாம் ) உம்மை (அன்வஹம்) எப்போதும் (சிந்தயாமி ) தியானம் செய்கிறேன்.(ஈசம்) இறைவரான (த்வாம் ) உம்மை (சரணம் வரஜாமி) சரணடைகின்றேன். (வசஸா) வாக்கால் (தவாம் ஏவ) உம்மையே (யாசே) பிரார்த்திக்கிறேன் (சம்போ) இன்பத்தை அளிப்பவரே! (திவ்யை:) தேவலோக வாசிகளால் (சிரம்) நெடுங்காலமாக (ப்ரார்த்திதாம்) விரும்பப்பட்டதும் (ஸகருணாம் சாக்ஷுஷீம்) கருணையுடன் கூடியதுமான கண் பார்வையாகிற (வீக்ஷாம்) தீக்ஷையை (மே)எனக்கு (திச) அளிப்பீராக! (லோக்குரோ) உலக குருவே! (மதீயமனஸ:) என் மனதிற்கு (ஸௌக்யோபதேசம்) பேரின்பத்தை அளிக்கும் உபதேசத்தை (குரு) செய்தருள்வீராக.
எங்கும் நிறைந்த சிவபெருமானே! உமது திருவடித் தாமரைகளைப் பூவைக் கொண்டு நாமாவளி சொல்லி அர்ச்சிக்கிறேன் உம்மை எப்போதும் சிந்திக்கிறேன் உம்மை சரணம் அடைகிறேன் வார்த்தைகளால் உம்மையே வேண்டுகிறேன் மங்களங்கள் செய்பவரே! தேவர்களால் வேண்டப்பட்டதான கருணையுடன் கூடிய தீக்ஷையை, பார்வையை எனக்கு அளிப்பீராக. உலக குருவே எனக்கு ஆனந்தானுபூதி அளிக்கும் உகந்த உபதேசம் செய்தருள் வீராக என வேண்டுகிறார்.
குருதீக்ஷை சிஷ்யனுக்குப் பலவிதமாகக் கூறப் பட்டுள்ளது. இது குருவின் தன்மை, சிஷ்யனின் நிலையைப் பொறுத்தது.
குக்குட தீக்ஷை - ஸ்பர்சதீக்ஷை
குருவானவர் சீடனை அருகே அழைத்து அவனது இதயத்திலோ, ஆக்ஞாசக்கரத்திலோ (நெற்றி புருவ இமைநடுவே) தொட்டு, தனது சக்தியை அளிப்பது. இது கோழி முட்டை மீது அமர்ந்து, அடைகாத்து, குஞ்சு பொரிப்பதை ஒத்தது. சந்தேஹப் பேர்வழியான, துடுக்கான இளைஞர் நரேந்திரனுக்கு ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தனது காலை அவனது மார்பில் நிறுத்தி, நிர்விகல்ப சமாதி அடைய வைத்தார்.
நயன தீக்ஷை-மத்ஸ்ய தீக்ஷை
குருவானவர் சிஷ்யனை கருணா கடாக்ஷத்தினா லேயே பார்த்து தீக்ஷை அளிக்கிறார். தக்ஷிணா மூர்த்தி யானவர், மௌனமாய் சின் முத்திரையுடன் அமர்ந் துள்ளார். ஸனகாதி முனிவர்களுக்கு அவரின் பார்வையாலேயே, மௌனத்தினாலே பேச்சு ஒன்றும் இல்லாமலேயே தீக்ஷை அளிக்கிறார்.
குஞ்சு மீன், தாய் மீன் பார்வையாலேயே வளரும். பால்ப்ரண்டன் என்ற ஆன்மீகன், அயல்நாட்டவன், தனது மூளையில்/மனதில் மூட்டை சந்தேகங்களுடன், அருணாசலத்தில், ரமணமஹரிஷி முன் வந்து உட்கார்ந் தான். மஹரிஷி அவனை ஒரு பார்வைதான் பார்த்தார்! அந்த பார்வை ஒளியை அவனால் தாங்க முடியவில்லை. கண்ணை மூடிக்கொண்டான். பல நேரம் அவ்வாறு இருந்தான். சுய நினைவு வந்தது. அவனது மூட்டை கேள்விகள் மறைந்தன. மனம் தெளிவாகியது. சூரியன் விளக்கு வந்தால், உடனே இருட்டு மறைவது போல் மனத்தெளிவு, ஞானம் பெருகுகிறது. தக்ஷிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கு மௌத்தினாலேயே புரிய வைத்தார்.
வாக்கு தீக்ஷை-ஸக்யதீக்ஷை-ஸஹவாஸ உபதேச தீக்ஷை
குருவானவர் சிஷ்யனை தன்னிடம் இருத்தி வாக்குகள், சொற்கள் மூலமாக சிஷ்யனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக, படிப்படியாக அறிவித்து மனம் தெளி வடையச் செய்கிறார். இதுதான் சாதாரண - குரு - சிஷ்ய -தீக்ஷை நாம் குருவிடம் பணிவுடன் அமர்ந்து பாடம் கேட்டு, கேள்விகள் கேட்டு, சந்தேகம் தீர்ந்து, தெளிவடைகிறோம்.
ஸ்மரண தீக்ஷை-நினைவாலே தீக்ஷை (கூர்ம தீக்ஷை)
குருவானவர், சீடனுக்குத் தான் என்ன கூற வேண்டுமோ, அல்லது அவனது அஞ்ஞானம் அகல ஞானம் பெற யாது செய்ய வேண்டுமோ, அதனை குருவானவர் தன் மனதில் நினைக்க, சீடன் தீக்ஷா ஞானம் பெறுகிறான். இது ஒரு அதிசய, அதீத, தீக்ஷை எல்லோருக்கும் நடக்காது.
ஆமை தனது முட்டையை நதிக்கரையில் இட்டுவிடும். அந்த முட்டையைப் பற்றி நினைக்கும். முட்டை பொரிந்து குஞ்சு வெளிவரும். சீடனின் சந்தேஹம், குருவின் மனதை ஈர்க்க, குரு உடனே அதற்கு நிவாரணமாக தீக்ஷை, ஞானம் அளிக்கிறார். இந்த மாதிரி தீக்ஷை கனவிலும் நடக்கலாம். இது மிக மிக உன்னத தீக்ஷை!
*****
30. எங்கும் நிறைந்தவனுக்கு பூஜையா?
இந்த துதியில் எங்கும் என்றும் நிறைந்தவனுக்கு எவ்வாறு பூஜை செய்ய முடியும் என்று சந்தேகம் கொள்கிறார். துதி, பொருள், தத்துவம் சிந்திப்போம்.
"வஸ்த்ரோத்தூத-விதௌ ஸஹஸ்ரகரதா புஷ்பார்ச்சனே விஷ்ணுதா கந்தே கந்தவஹாத்மதா (அ) ன்னபசனே
பர்ஹிர்முகாத்யக்ஷதா| பாத்ரே காஞ்சன கர்பதாஸ்தி மயி சேத் பாலேந்துசூடா மணே சுச்ரூஷாம் கரவாணி தே பசுபதே ஸ்வாமின் த்ரிலோகீகுரோ||" (30)
(பாலேந்து சூடாமணே ) இளம்பிறைச் சந்திரனை சிரத்தில் அணிந்தவரே! (பசுபதே) உயிர்களின் தலைவரே! (ஸ்வாமின்) இறைவரே! (தரிலோகீ குரோ) மூன்று உலகங்களுக்கும் குருவே! (வஸ்த்ர உத்தூத விதௌ) பூஜையில் உனக்கு வஸ்திரம் உடுத்தி உபசரிப்பதற்கு (ஸஹஸ்ர கரதா) எண்ணற்ற கிரணங்களாகிற கைகளையுடைய சூரியனுடைய தன்மையும், (புஷ்பார்ச்சனே) புஷ்பங்களால் அர்ச்சிப்பதற்கு (விஷ்ணுதா) விஷ்ணுவின் தன்மையும், (கந்தே) சந்தனம் முதலிய வாசனைப் பொருள்களால் உபசரிப்பதற்கு (கந்தவஹாத்மதா) வாசனையைப் பரப்பும் வாயுவின் தன்மையும், (அன்னபசனே) அன்னத்தை ஆக்கி நிவேதனம் செய்வதற்கு (பர்ஹிர்முக- அத்யக்ஷதா ) அக்னியை முகமாகக் கொண்ட தேவர்களின் தலைமையும், (பாதரே ) பூஜைக்குரிய பாத்திரங்களைக் கல்பிப்பதற்கு (காஞ்சன கர்ப்பதா) சிருஷ்டி கர்த்தாவான ஹிரண்யகர்ப்பரின் தன்மையும் (மயி) என்னிடத்தில் (அஸ்தி சேத்) பொருந்தியிருக்குமேயானால் (தே) உமக்கு (சுச்ரூஷாம்) வழிபாட்டு உபசாரத்தை (கரவாணி) செய்யக் கூடியவன் ஆவேன்.
இளம்பிறை சந்திரனை தலையில் ஆபரணமாய் குளிர்ச்சியாக அணிந்தவரே, பசுபதியே -இந்த யாதும் அறியா ஜீவ பசுவின் பதியே, ஸ்வாமியே, மூவுலகங்களுக்கும் குருவே, பூஜையின்போது உடைய எண்ணற்ற ஒளிக்கதிர்களை சூரியனுடைய தன்மையும், புஷ்பங்களாய் பூசிப்பதற்கு விஷ்ணுவின் தன்மையும், சந்தனம், பன்னீர், அத்தர் போன்ற வாசனை திரவியங்களால் அலங்கரிப்பதற்கு வாயுவின் தன்மையும், பலவித அன்னங்கள் தயார் செய்து நிவேதனம் செய்ய அக்னிமுகமான தேவர்கள் தன்மையும், பூஜைக்குரிய பாத்திரங்கள் செய்ய சிருஷ்டி செய்யும் பிரம்மனின் தன்மையும், என்னிடத்தில் இருக்குமேயானால் நான் உமக்கு உகந்த பூஜை வழிபாடு பூரணமாக செய்ய இயலும் ஆனால், என்னிடம் மேற்சொன்ன சக்திகள் யாதும் இல்லையே? ஆக நான் உமக்கு உகந்த பூஜை எவ்வாறு செய்ய முடியும் என்று சிந்திக்கிறார்.
சிவனுக்க 1008 பூக்களால் அர்ச்சனை செய்ய, மஹாவிஷ்ணு முனைந்தபோது ஒரு பூ குறைய தனது ஒரு கண்ணையே தாமரை பூவாக விஷ்ணு சமர்ப்பித்தார். நான் என்ன கண்ணனா அல்லது கண்ணப்பனா, கண் புஷ்பங்களால் பூஜை செய்ய!
இதனை ஒட்டியே சிவ மானஸ பூஜையில் - யத்யத் கரோமி தத் தத் அகிலம் சம்போதவ ஆராதனம்" வாழ்வதற்கு, என் உடலுக்கு குளித்தல், உடை அணிதல், அலங்காரம் செய்தல், உண்ணுதல், இவை யாவையும் உனக்கு நான் செய்யும் ஆராதனையாக ஏற்றுக்கொள்ளும் என்று வேண்டுவார்.
*****
திருச்சிற்றம்பலம் 🙏
Comments
Post a Comment