சிவ கீதை அத்தியாயம் 2 ஸ்லோகங்கள் 1-43 விளக்கத்துடன்

வைராக்கிய யோக விளக்கம்..

ருஷய ஊசூ:(ரிஷிகள் கேள்வி)
"கிமர்த்தமாகதோகஸ்த்யோ ராமசந்த்ரஸ்ய ஸந்நிதிம்| கதம் வா விரஜாம் தீக்ஷாம் காரயாமாஸ ராகவம்|" (1)

பொருள்:
அகஸ்த்ய: - அகஸ்திய மஹரிஷி ; கிமார்த்தம் எதற்காக; ராமசந்த்ரஸ்ய - ராமரது; ஸந்நிதிம் - எதிரில்; ஆகத: - வந்தார்; விரஜாம் தீக்ஷாம் - விரஜா தீக்ஷையை; ராகவம் -ராமருக்கு; கதம் வா செய்து வைத்தார். எவ்வாறு; காரயாமாஸ

"தத: கிமாப்தவாந் ராம: பலம் தத் வக்துமர்ஹஸி"

பொருள்:
தத:- அதனால்; ராம: ராமர்; கிம் பலம் - என்ன பயனை; ஆப்தவாந் - அடைந்தார்; தத் - அதை; வக்தும் - சொல்வதற்கு; அர்ஹஸி - தக்கவராயிருக்கிறீர்கள்.

விளக்கம்:
 சூதர், "அகஸ்தியர் ராமருக்கு தண்டகாவனத்தில் உபதேசித்ததை (விரஜா தீக்ஷை), நான் உங்களுக்குக் கூறுகிறேன்" என்றதும் முனிவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

"ராமர் தண்டகாவனத்தில் சிறிது காலம் இருந்தார் என்பது தெரியும். ஆனால் அகஸ்தியர் அவர் இருக்கும் இடத்துக்கு ஏன் போனார்? அவருக்குப் போய் அகஸ்தியர் ஏன் உபதேசிக்க வேண்டும்" என்பது முனிவர்களுக்குப் புரியவில்லை.

மஹரிஷிகள், "அகஸ்திய மஹரிஷி எதற்காக ராமரிடம் வந்தார்? எவ்வாறு விரஜா தீக்ஷையை செய்து வைத்தார்? அதனால் ராமர் என்ன பயனை அடைந்தார்? அதை சொல்வதற்கு தாங்களே தக்கவர்" என்று கேட்டார்கள்.

பரவலாக பிரசித்தி அடைந்திருப்பது. வால்மீகி முனிவர் இயற்றியதும், குசலவர்களுக்குக் கூறியதுமான, 7 கண்டங்கள், 24,000 ஸ்லோகங்கள் அடங்கிய ஸ்ரீராமாயணம்தான். அதில் இந்த சம்பவம் இல்லை. அகஸ்தியர் ராமருக்கு தீக்ஷையை செய்த விஷயமே இல்லை. எனவே, இது விஷயம் பலருக்கும் தெரியாது. வால்மீகி முனிவர் செய்த சதகோடி ராமாயணத்தில் ஒரு சிறு பகுதிதான் நாம் சொல்லும் ராமாயணம். அது ராமகாதையின் சுருக்கம் என்றுதான் கூற வேண்டும். குழந்தைகளுக்காக ஓர் அளவோடு சொன்ன ராமாயணம் அது.

அதில் இல்லாத ராமரைப்பற்றிய பல விஷயங்களை பலரும் அறியாமலே இருந்தார்கள். அப்படி அறியாமல் இருந்தவர்கள்தான் இந்த மஹரிஷிகளும், அதனால்தான் அவர்களுக்கு ஆச்சர்யம். சூதர் இப்படிக் கூறுகிறாரே என்று. எனவே விளக்கத்தை, சூதமுனிவரிடமே கேட் டார்கள்.

சூதரும் எந்த தருணத்தில் இந்த சம்பவம் நேர்ந்தது என்பதை அடுத்து விளக்கத் தலைப்பட்டார்.
*****
சூத உவாச:
"ராவணேந் யதா ஸீதாபஹ்ருதா ஜநகாத்மஜா||" (2)

"ததா வியோக து:கேந விலபந் நாஸ ராகவ:| நிர்நித்ரோ நிரஹங்காரோ நிராஹாரோ திவாநிஷம்||" (3)

பொருள்:
ஜநகாத்மஜா - ஜனகன் மகளாகிய; 
ஸீதா- சீதா தேவியானவள்; 
ராவணேந - ராவணனால்; 
யதா எப்பொழுது; 
ஹ்ருதா - அபகரிக்கப்பட்டாளோ; 
ததா அப்பொழுது; 
வியோகது:கேந - பிரிவுத்துயரால்; 
ராகவ: - ராமர் 
திவாநிஷம் - இரவும் பகலும்; 
நிர்நித்ர: - உறக்கமற்றவராகவும்; நிரகங்கார:- அகங்காரமற்றவராகவும்; நிராஹார: - ஆகார மற்ற வராகவும்; விலபந் - புலம்பிக் கொண்டும்; 
ஆஸ - இருந்தார்.

கருத்து:
சீதாதேவியை ராவணன் அபகரித்துக் கொண்டு போனதும், ராமர் பிரிவுத்துயரால் ஊண், உறக்கம், அகங்காரம் அற்றவராக புலம்பிக் கொண்டே இருந்தார்.

"மோக்துமைச்சத் தத: ப்ராணாந் ஸாநுஜோ ரகுநந்தந:| லோபாமுத்ராபதிர் ஞாத்வா தஸ்ய ஸந்நிதிமாகமத்||" (4)

பொருள்:
தத: - பிறகு; 
ஸாநுஜ சகோதரனுடன் கூடிய; 
ரகுநந்தந: - ரகு குலத்தோன்றலாகிய ராமர்; 
ப்ராணாந் - ப்ராணன்களை; 
மோக்தும் - துறப்பதற்கு; 
ஐச்சத் - விரும்பினார்; 
லோபாமுத்ராபதி - லோபா முத்ரையின் கணவராகிய அகஸ்தியர்; 
ஞாத்வா - (இதை) அறிந்து; 
தஸ்ய - அந்த ராமரது; 
ஸந்நிதிம் - எதிரில்; 
ஆகமத் - அடைந்தார்.

கருத்து:
பிறகு சகோதரனுடன் கூடிய ரகுகுலத் தோன்றலாகிய ராமர் இறக்க விரும்பினார். லோபாமுத்ரையின் கணவராகிய அகஸ்தியர் இதையறிந்து ராமரிடம் வந்தார்.

விளக்கம்:
தசரதர் மைந்தனாகிய ஸ்ரீராமர் சிற்றன்னையான கைகேயின் சூழ்ச்சியால் நாட்டைத் துறந்து, கானகத்துக்கு வந்தார். கூடவே மனையாள் சீதாதேவியும், சகோதரனாகிய லக்ஷ்மணரும் வந்திருந்தார்கள். பர்ணசாலையில் வாழ்ந்தாலும், மரவுறி தரித்தாலும், கிடைத்ததை உண்டு வாழ்ந்தாலும் அதற்கெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. நிறைவான மனத்தோடே காலம் கழித்தார்கள். மொத்தம் 14 வருடங்கள் கானகத்து வாழ்க்கையை முடிக்க வேண்டும் . 12.5 வருடங்கள் நல்லபடியாக கழிந்துவிட்டது. இப்போ தான் அரம்பித்தது சோதனை. அத்தருணத்தில் ஸ்ரீராமரின் அவதாரத்துக்குக் காரணமான விதி விளையாடத் தொடங்கியது. சீதாதேவி ராவணனால் அபகரிக்கப்பட்டாள்.

திடீரென்று தாக்கிய இந்த துக்கப் புயலில் சிக்குண்ட ராமர் மூர்ச்சையடைந்தார். லக்ஷ்மணர் ஜலத்தைத் தெளித்து அவரை எழுப்பினார். ஸ்ரீராமர் பரமாத்மா. ஆனாலும் மானிட அவதாரம் எடுத்த நிலையில், இத்தருணத்தில் ஒரு மானிடனைப் போலவே நடந்து கொள்கிறார். மனைவியை இழந்த நிலையில் துக்கப்படுகிறார்; கோபப்படுகிறார்; அழுது புலம்புகிறார்; உலகங்களை அழித்துவிடுவதாக ஆவேசப்படுகிறார். மனைவியைக் காக்க முடியாதவன் என்ற அபகீர்த்தியோடு இருப்பதைவிட, இறந்துவிடலாம் என்றும் எண்ணுகிறார். அத்தருணத்தில் அகஸ்தியர் அங்கு வருகிறார். அகஸ்தியரைப் பற்றி குறிப்பிடும்போது "லோபாமுத்ரபதி" என்கிறார். ஏன் அகஸ்தியர் வந்தார், வேறு ரிஷிகள் ஏன் வரவில்லை..?? அதாவது, ராமர் இருக்கும் நிலையை, ஒரு சந்நியாசியால் புரிந்து கொள்ள முடியாது. புரிந்து கொள்ள முடியாத ஒருவரால் கூறப்படும் ஆறுதல் வார்த்தைகளோ, ஞான மொழிகளோ உயிரோட்டமாக இருக்காது, எடுபடாது. 

ஆனால் அகஸ்தியர் அப்படியல்ல, அவர் இல்லற தர்மத்தை அனுஷ்டிப்பவர். ராமருடைய நிலை அவருக்கு புரியும். அவர் கூறும் வார்த்தைகள் சரியாக இருக்கும். வந்து அகஸ்தியரும் முதலில் புரியாதவர் போல மேலோட்டமாக பேசுகிறார். அவை இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன

வந்த அகஸ்தியரும் முதலில் புரிந்து கொள்ளாதவர் போலவே மேலோட்டமாக தத்துவம் பேசுகிறார். அவை தான் இந்த அத்யாயத்தில் இடம் பெற்றுள்ளன.

"அதைநம் போதயாமாஸ ஸம்ஸாரா ஸாரதாம் முனி:| கிம் விஷீதஸி ராஜேந்த்ர காந்தா கஸ்ய விசார்யதாம்||" (5)

பொருள்:
அத - பிறகு; 
முனி:- முனிவர்;
ராமம் - ராமரை(ராமருக்கு); 
ஸம்ஸாராஸாரதாம் - சம்சாரம் துச்சமென்பதை; 
போதயாமாஸ - போதித்தார்;
ராஜேந்த்ர - மன்னர்களுக்குள் 
மஹிமை பொருந்திய ராமா; 
கிம் - ஏன்; 
விஷீதஸி - துயரப்படுகிறாய்; 
காந்தா - அன்பு மனைவி; 
கஸ்ய - யாருக்கு; 
விசார்யதாம் - விசாரிக்கத்தக்கது. 

கருத்து:
அகஸ்திய முனிவர் சம்சாரம் துச்சமென்பதை ராமருக்கு போதித்தார். "மன்னர்களுக்குள் மஹிமை பொருந்திய ராமா, ஏன் துயரப்படுகிறாய்? அன்பு மனைவி என்பது யாருக்கு என்று விசாரித்தறியத்தக்கது" என்றார்.

"ஜட: கிம் ந விஜாநாதி தேஹோயம் பாஞ்சபௌதிக: நிர்லேப: பரிபூர்ணஸ்ச ஸச்சிதாநந்த விக்ரஹ:||" (6)

"ஆத்மா ஸம்ஜாயதே நைவம்ரியதே நசதுக்கப்பாக்| சூர்யோஸௌ ஸர்வலோகஸ்ய சக்ஷுஷ்டவே ந வ்யவஸ்தித:||" (7)

"ததாபிசாக்ஷுஷைர்தோ ஷைர்நகதாசித் விலிப்யதே| ஸர்வ பூதாந்தராத்மாபி தத்வத்து:கைர் ந லிப்யதே||" (8)

பொருள் :
பாஞ்சபௌதிக: ஐம்பூதங்களிலிருந்தும் தோன்றிய; 
அயம் தேஹ:- இந்த உடல்; 
ஜட: - ஜடம் என்று 
நவிஜாநாதி கிம் - நீ அறியவில்லையா, என்ன?
நிர்லேப:- எதிலும் ஒட்டாததும்; 
பரிபூர்ண: - எங்கும் நிறைந்துள்ளதும்; ஸச்சிதானந்த விக்ரஹ: - சத், சித், ஆனந்த வடிவுமான; 
ஆத்மா - ஆத்மாவானது; 
நஸஞ்ஜாயதே ஏவ - உண்டாவதேயில்லை; 
நம்ரியதே - மடிவதுமில்லை; 
து:க பாக் நச - துக்கமுடையதும் இல்லை; அஸௌ சூர்ய: சூரியனானவர்; 
ஸர்வ லோகஸ்ய - எல்லா உலகுக்கும்; சுக்ஷுஷ்ட்வே நவ்யவஸ்தித: - கண்ணின் தன்மை உடையவர் என்று தீர்மானிக்கப்பட்டவராவார்; 
ததாபி ஆனாலும் ; சாக்ஷுஷை:தோஷை: - கண் சம்பந்தமான குற்றங்களால்; கதாசித் - ஒருகாலும் ; 
நவிலிப்யதே - சம்பந்திப்பதில்லை; ஸர்வபூதாந்த ராத்மாபி - எல்லா பூசங்களிலும் இருக்கின்ற ஆத்மாவானாலும் ; 
தத்வத் - அதுபோல; 
துக்கை:- துக்கங்களோடு, 
நலிப்யதே - சம்பந்திப்பதில்லை.

கருத்து:
பஞ்ச பூதங்களிலிருந்தும் தோன்றிய இந்த சரீரம், ஜடம் என்பதை நீ அறியாயா என்ன? எதிலும் ஒட்டாததும், எங்கும் வியாபித்து நிறைந்திருப்பதும், சத், சித், ஆனந்த வடிவுமான ஆத்மா உண்டாவதும் இல்லை; அழிவதும் இல்லை. காணப்படுகின்ற இந்த சூரியனானவர் அனைத்துலகுக்கும் கண்ணாக விளங்குபவர். ஆனாலும் கண் சம்பந்தமான குற்றங்களால் ஒருகாலும் சம்பந்திப்பதில்லை. அதுபோல. எல்லா பூதங்களிலும் இருக்கின்ற ஆத்மாவானாலும், துக்கங்களோடு சம்பந்திப்பதில்லை.

நாம் நமது கண்ணால் பார்க்கிறோம். கண்கள் கெட்டுப் போனால் பார்வை போய் விடுகிறது. பகலில் சூரியன் வானில் இருந்தாலும், உலகம் ஒளி மயமாக இருந்தாலும் குருடனுக்கு இருட்டுதான். கண்களில் ஏற்படும் குற்றங்களோடு சூரியனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

இதேபோல, ஆத்மா பஞ்சபூதங்களோடு, பஞ்சபூதங்களாலான உடலோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால் இதன் துக்கங்கள் ஆத்மாவைப் பாதிக்காது. இவற்றோடு ஆத்மாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

"தேஹோபி மலபிண்டோயம் முக்த ஜீவோ ஜடாத்மக:| தஹ்யதே வஹ்நிநா காஷ்டை: ஷிவாத்யைர்பக்ஷ்யதேபிவா||" (9)

பொருள்:
மலபிண்டம் -மலபிண்டமாகவும்; ஜடாத்மக: - ஜட உருவமாகவும் (உள்ள); அயம் தேஹோபி - இந்த உடலும்; 
முக்த ஜீவ: - உயிரை இழந்துவிட்டால் (பிறகு); 
வஹ்நிநா- நெருப்பால்; 
காஷ்டை: - கட்டைகளோடுகூட; 
தஹ்யதே - எரிக்கப்படுகின்றது; 
அதவா - அல்லது; 
ஷிவாத்யை: - நரி முதலானவைகளால்; பக்ஷயதே - சாப்பிடப்படுகிறது.

கருத்து:
மலபிண்டமாகவும், ஜட உருவமாகவும் உள்ள இந்த உடலிலிருந்தும் உயிர் போய்விட்டால் பிறகு உடல் கட்டைகளோடுகூட எரிக்கப்படுகின்றது. அல்லது நரி முதலி யவைகள் அதைச் சாப்பிடுகின்றன.

விளக்கம் :
உடலோடு உயிர் இருக்கும்வரைதான் எல்லாமே. போற்றிப் பாதுகாத்த பணமும் அதுவரைதான். உயிருக்கு உயிராய் நேசித்த உறவுகளும் அதுவரைதான். செத்த உடலை யாரும் நேசித்து கூடவே வைத்துக் கொண்டிருப்ப தில்லை. சிதையில் அந்த உடல் எரிக்கப்படுகிறது.

எரிப்பதற்குக்கூட ஆள் இல்லாமல் காட்டில் எங்கோ தன்னந்தனியாக இறந்தான் என்றால் நரி, பருந்து முத லானவை, உடனடியாக அங்கு முற்றுகையிட்டு, தங்களுக்கு உணவு கிடைத்த சந்தோஷத்தோடு, உடலை பிய்த்துக் கொள்ளத் தொடங்கிவிடும். எத்தனை வருடங்கள் காத்த உடலானாலும், நல்ல பலம்,தோற்றம், அழகு, பொலிவு நிறைந்த உடலானாலும், உயிர் போனபிறகு இந்த நிலையைத்தான் அடையும்..

"ததாபி நைவ ஜாநந்தி விரஹே தஸ்ய காவ்யதா| ஸுவர்ண கௌரீ தூர்வாயா தளவச்யாமளாபிவா||" (10)

"பீநோத்துங்கஸ்தநாபோக புக் ந ஸுக்ஷ்மாவலக்நகா| ப்ருஹந்நிதம்ப ஜகநா ரக்தபாத ஸரோருஹா||" (11)

"ராகாசந்த்ரமுகீபிம்ப ப்ரதிபிம்பரதச்சதா|நிலேந்தீவரநீகாஷ நயநத் வயஷோபிதா||" (12)

மத்தகோகில ஸல்லாபா மத்தத்விரத காமிநீ| கடாக்ஷைரநுக்ருஹ்ணாதி மாம் பஞ்சேஷு ஷரோத்தமை:|| (13)

இதியோ மந்யதே மூட: ஸத்ய: பஞ்சேஷு ஷாஸித:| தஸ்யாவிவேகம் வக்ஷ்யாமி ஸ்ருணுஷ்வாவஹிதோ நிருப|| (14)

பொருள்:
ததாபி - அவ்வாறாயினும்; 
ந ஜாநந்த்யேவ - அறிகிறார் களில்லை; தஸ்ய - (அத்தகு) உடலுடைய; 
விரஹே - பிரிவில்; 
காவ்யதா - என்ன துயரம் உள்ளது?; ஸுவர்ண கௌரீ - தங்கம் போன்ற நிறமுடையவளும்; 
தூர்வாயா: தளவத் (அல்லது) அருகம்புல்லின் தளம் போன்ற நிறமுடையாளும்; 
ச்யாமளா (அல்லது) சயாமள நிறமுடையவளும்; 
பீநோத் துங்கஸ்தநா போகபுக் ந ஸுஷமாவலக்நகா - பருத்தும் உயர்ந்தும் உள்ள ஸ்தனங்களால் வாட்டமுற்ற சிற்றிடையுடையவளும்; 
ப்ருஹந்நிதம் ப ஜகநா - பருத்த பின்புறத்தை உடையவளும்; 
ரத்த பாதஸரோருஹா - சிவந்த பாதங்களை உடையவளும்; 
ராகா சந்தரமுகி - பூர்ண சந்திரன் போன்ற முகமுடையவளும்; பிம்பப்ரதிபிம்பரதச்சதா - கொவ்வைப் பழத்துக்கு நிகரான உதடுகளுடையவளும்; 
நீலேந்தீவர நீகாச நயந த்வய க்ஷோபிதா - நீலோத்பல மலருக்கு நிகரான கண்களோடு இருப்பவளும், 
மத்த கோகில ஸல்லாபா - உன்மத்தம் கொண்ட குயிலின் குரலைப் போன்ற குரலுடையவளும்; 
மத்தத்விரத காமிநீ - மதங் கொண்ட யானையைப் போன்ற நடையுடையவளும் (ஆகிய இப்பெண்); மாம் - என்னை; 
பஞ்சேஷுஸரோத்தமை:- சிறந்த மன்மத பாணங்களாலான: 
கடாக்ஷை: பார்வைகளால்; அனுககுஹ்ணாதி - அருளுகின்றாள்; இதி - என்று; 
பஞ்சேஷு ஷாஸித - மன்மதனால் ஏவப்பட்டு: 
ஸத்ய: - உடனடியாக 
மூடடய: தஸ்ய - மூடனான எவன்; 
மந்யதே - எண்ணுகிறானோ; அவனுடைய; 
அவிவேகம் - அஞ்ஞானத்தை; 
வக்ஷ்யாமி - கூறுகிறேன். 
ந்ருப - அரசனே; 
அவஹித: நன்கு; 
ஸ்ருணுஷவ - கேட்பாயாக.

கருத்து:
அழியக்கூடியது உடல் என்றாலும் அதை அறியாமல் இருக்கிறார்கள். அத்தகைய உடலைப் பிரிவதால் என்ன துயரம் உள்ளது?

ஒரு பெண், தங்கம் போன்றோ, அறுகம்புல் தளம் போன்றோ அல்லது சியாமள நிறத்துடனோ, பருத்து உயர்ந்த ஸ்தனங்களின் பாரத்தால் வாட்டமுற்ற சிற்றிடையாளாக, பருத்த பின்புறமும், சிவந்த பாதங்களும், கொவ்வைப் பழம் போன்ற உதடுகளுமுடையவளாக, உன்மத்தம் கொண்ட குயிலின் குரலைப் போல இனிய குரலோடு, மதங்கொண்ட யானையைப் போன்ற நடையோடு நீலோத்பலம் போன்ற கண்களோடு பார்வையால் மன்மத பாணங்களை எய்பவளாக இருக்கும்போது, உடனடியாக அதற்கு வசப்படும் மூட னுடைய அஞ்ஞானத்தைக் கூறுகிறேன்.

விளக்கம்:
அழகான பெண்ணைக் கண்டு. அதுவும் அவள் தன்னை அழகாக நோக்கும்போது, மன்மத பாணங்களுக்கு வசப்படுகிறான் மனிதன். அவளுடைய ஒவ்வொரு அங்கமும் பேரழகு. இவனை மயக்க அழகிய ஓர் அங்கமே போதும். அவளுக்கோ அத்தனையும் அழகு. எப்படி ஒருவனால் வசப் படாமல் இருக்க முடியும்? சிவபெருமானைத் தவிர, காமனை வெல்லுதலும் எரித்தல். அது அந்த உணர்வை. 

அந்த பெண்ணின் கவரும் பார்வையை தனக்குக் கிடைத்த அனுக்ரஹமாகவே எண்ணுகிறான். இதற்குமுன் அழியக்கூடியது உடல், அது வெறும் ஜடம் என்று கூறிய அகஸ்தியர், அழகிய பெண்ணிடம் வசப்படுவது எத்தகை அஞ்ஞானம், என்று கூறுகிறேன் கேள். என்று சொல்லத் தொடங்குகிறார்.

பின் வரும் ஸ்லோகங்களில்:-

தத்துவ விசாரம் சொல்கிறார் அகஸ்தியர். அவரும் மறந்து இல்லற வாழ்க்கை மறந்து துறவியை போல பேசுகிறார். பிறகு உணர்ந்த அகஸ்தியர், தத்துவம் உபயோகப்படாது வேறு உபாயம் தான் கையெடுக்க வேண்டும் என்று, ராமருக்கு கோபத்தை வீரத்தை ரோஷத்தை உண்டாக்கி சத்திரிய தர்மத்தை எடுத்து சொல்லுகிறார்...

"ந ச ஸ்திரீ ந புமாநேஷ நைவசாயம் நபும்ஸக:| அர்த்த: புருமூஷ: பூர்ண: த்ரஷ்டா தேஹீ ஸஜீவந:||" (15)

பொருள்:
ஏஷ- இந்த ஆத்மா; ஸ்திரீ ச ந - பெண்ணும் அல்ல; ஏஷ:- இந்த ஆத்மா புமாந் ந - புருஷனும் அல்ல; அயம் - இது; நபும்ஸக:நசஏவ - நபும்சகனும் அல்ல; தேஹீ - ஆத்மா, அமூர்த்த: - உருவற்றவன்; புருஷ: சரீரத்தில் உள்ளவன்; பூர்ண: - (எங்கும்) நிறைந்தவன்; த்ரஷ்டா - காண்போன்

"யா தந்வங்கீ ம்ருதுர்பாலா மலபிண்டாத்மிகா ஜடா| ஸா ந பஷ்யதி யத்கிஞ்சிந்ந ஷ்ருணோதி நஜிக்ரதி||" (16)

பொருள் (15,16):
ம்ருதுர் பாலா - இளமையும் மென்மையும் வாய்ந்தவள் (என்றும்); 
தநவங்கீ - அழகி (என்றும்): 
யா - எவள் (கூறப்படுகின்றாளோ) மலபிண்டாத்மிகா - மலபிண்ட மானவளும்; 
ஐடா - ஜடமானவளும் (ஆன); 
ஸா - அவள்; 
ந பச்யதி - பார்க்கின்றதில்லை; யதகிஞ்சித் - ஒன்றையும்; 
ந ஷருணோதி - கேட்பதும் இல்லை; 
ந ஜிக்ரதி - முகரு வதும் இல்லை.

"சர்ம மாத்ரந்தநுந்தஸ்யா புத்வா த்யக்ஷஸ்வ ராகவ| யா ப்ராணாததிகாஸைவ ஹந்ததேஸ்யாத் க்ருணாஸ் பதம்||" (17)

பொருள்:
ராகவ - ராகவரே: 
தஸ்யா - அவளுடைய
தநும் - தேகத்தை; 
சர்ம மாத்ரம் - தோல் மாத்திரம் (என்று); புத்வா - அறிந்து; 
த்யக்ஷஸ்வ - ஒதுக்குவாயாக; 
யா - எந்தப் பெண்; 
ப்ராணாத் - உயிரைவிட; 
அதிகா - சிறந்தவளோ, 
ஹந்த - ஐயகோ; 
ஸா ஏவ் - அவளே; 
தே - உனக்கு; 
க்ருணாஸ்பதம் - துக்கத்துக்குக் காரணமாகிறாள்.

கருத்து: (15, 16, 17)
ஆத்மா பெண்ணும் அல்ல, ஆணும் அல்ல, அலியும் அல்ல. ஆத்மாவுக்கு உருவம் கிடையாது. அது சரீரத்தில் உள்ளது. எங்கும் நிறைந்து காணப்படுவது. மென்மையும் இளமையும் வாய்ந்த அழகி என்று கூறப் படுபவள் மலபிண்டமாகவும், ஜடமாகவும் இருப்பவளே. அவள் பார்ப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை, முகர்வதும் இல்லை.

ராமா, அவளுடைய தேகத்தை வெறும் தோல் மாத்திரம் என்று அறிந்து ஒதுக்குவாயாக. எந்தப் பெண் உன் உயிரினும் மேலானவள் என்று எண்ணுகிறாயோ, அந்தோ, அவளே உன் துயரத்துக்குக் காரணமாகிறாள்.

விளக்கம்:
உடலுக்குள் ஆத்மா இருக்கிறது. அந்த ஆத்மா ஆண், பெண் பேதத்துக்கு அப்பாற்பட்டது. ஆண் உருவுக்குள் இருந்தால் ஆண் என்கிறோம். பெண் உருவுக்குள் இருந் தால் பெண் என்கிறோம்.

அழகான, மெல்லியவள் என்று கூறுகிறோமே. அந்த பெண்ணுக்குள்ளும் எங்கும். எல்லோருக்குள்ளும் நிறைந்த இந்த ஆத்மாதான் இருக்கிறது. மற்றபடி அவள் அழகு, இளமை என்பதெல்லாம் மாயை உண்மையில் உள்ளிருக்கும் ஆத்மாவா, பார்க்கிறது? கேட்கிறது? இல்லவே இல்லை.

ராமா, உடல் வெறும் தோலால் போர்த்தப்பட்டது என்பதை உணர வேண்டும். உயிருக்கும் மேலானவள் என்று சொல்லும் அந்தப் பெண் சீதாதேவிதானே உன்னுடைய இவ்வளவு பெரும் துயரத்துக்குக் காரணமாக இருக்கிறாள்? அவளை ஒதுக்கித் தள்ளிவிடு' என்று அகஸ்தியர் ஸ்ரீராமரைப் பார்த்துக் கூறுகிறார் .

உண்மையில் சீதாதேலி யார் என்பதை பூரணமாக உணர்ந்தவர் அகஸ்தியர். மஹாலக்ஷ்மி அவதாரம். இனி வருங்காலத்தில் ராமரது வெற்றிக்காக 'ஆதித்ய ஹ்ருதயம்' என்னும் மஹா மந்திரத்தை உபதேசிக்கப் போகிறவரும்கூட. அப்படியிருக் கும்போது சீதாதேவியை இங்கு குறைவுபடுத்தும் விதமாகப் பேசியிருக்கிறார். ஆனால் நோக்கம் குறைவுபடுத்துவது அல்ல. துயரக் கடலில் மூழ்கியிருக்கும் ராமரை முதலில் பலாத்காரமாக வெளியே இழுக்க வேண்டும். பிறகு ஆசுவாசப்படுத்த வேண்டும். அதன் பிறகு பேசினால் மனதில் பதியும். இங்கே அகஸ்தியர் செய்வதும் அதுதான். ராமரை அவரது மன அழுத்தத் திலிருந்து வெளியே பலாத்காரமாக இழுக்கவே இப்படிச் சொல்கிறார்.

"ஜாயந்தேயதி பூதேப்ய: தேஹாஸ்தத் பாஞ்ச பெளதிகா:| ஆத்மா யதேகலஸ் தேஷு பரிபூர்ணஸ்ஸநாதந:||" (18)

பொருள்:
தேஹா - தேகங்கள்; 
பூதேப்ய: - (பஞ்ச) பூதங்களிலிருந்தே: 
யதி ஜாயந்தே - உண்டாகின்றன அல்லவா: 
தத் - ஆதலால்; 
பாஞ்ச பெளதிகா: - பஞ்சபூதத்தன்மைகளானதே யாகும்; ஆத்மா - ஆத்மாவானவன்; 
தேஷு - அந்த தேகங்களில், 
யதேகல: சாட்சியாகவும்; 
பரிபூர்ண: - பரிபூரணனாகவும்; 
ஸநாதன: - தொன்மையானவனாகவும் (இருக்கின்றான்)

கருத்து:
பஞ்சபூதங்களினின்று உண்டானது தேகங்கள் என்பதால், அவை பஞ்சபூத சேர்க்கையின் தன்மை கொண்டவை. ஆத்மாவோ, அந்த தேகங்களில் வெறும் சாட்சியாக இருக்கிறது. ஆத்மா பரிபூர்ணமானது; அநாதியானது.

"கா காந்தா தத்ர க: காந்த: ஸர்வஏவ ஸஹோதரா:| நிர்மிதாயாம் க்ருஹாவல்யாம் ததவச்சிந்நதாம் கதம்||" (19)

"நபஸ்தஸ்யாம் து தக்தாயாம் நகாஞ்சித் க்ஷதிம் ருச்சதி| தத்வதாத்மாபி தேஹேஷு பரிபூர்ணஸ்ஸநாதந:||" (20)

பொருள் (19, 20):
தத்ர - இவ்வாறிருக்க; 
கா - எவள்; 
காந்தா - மனைவி; 
எவன்; காந்த: கணவன்; 
ஸர்வே - எல்லோரும்; 
ஸஹோதரா:ஏவ - உடன் பிறந்தவர்களே; க்ருஹாவலயாம் - வீடுகள்; 
நிர்மிதாயாம் - கட்டப்பட்டனவானால்; ததவச்சிந்ந் தாம் - அதனுள் அடங்கின தன்மையை; கதம்- அடைந்த; 
நப - ஆகாயம்; 
தஸ்யாம் -அவ்வீடுகள்; 
தத்தாயாம் - எரிந்து போனால்; 
காம் சித்க்ஷதிம் - ஒரு கெடுதியையும் ; நருச்சதி - அடைவதில்லை; 
தத்வத் - அதுபோல; 
தேகேஷு - தேகங்களில்; 
பரிபூர்ண:-பரிபூர்ணனும்; 
ஸநாதன்:- எப்போதும் உள்ளவனும் ஆன; ஆத்மாபி -ஆத்மாவும்.

கருத்து:
யார் மனைவி, யார் கணவன், யார் சகோதரர்? வீடு கட்டப்பட்டு, அதனுள் இருக்கும் ஆகாசம், அவை எரிந்து போனால் ஆகாசத்துக்கு எந்தக் கெடுதியும் இல்லை. அதைப் போலத்தான், தேகங்களில் உள்ள ஆத்மாவும். இந்த ஆத்மா பரிபூரணமானது. எப்போதும் உள்ளது.

விளக்கம்:
ஆகாசம் என்பது என்ன? ஆகாசம் என்றால் வெட்டவெளி. ஒன்றுமே இல்லை என்று நமக்குத் தோன்றுகிறதே - அதுதான் ஆகாசம்!. பாத்திரத்துக்குள் பால் இருக்கிறது. பாலைக் கொட்டி விட்டால், பிறகு என்ன சொல்கிறோம் ? பாத்திரத்தில் ஒன்றுமே இல்லை, பாத்திரம் காலியாக இருக்கிறது என்கிறோம். அந்த காலியிடம் ஆகாசம். 

நாம் ஒரு வீடு கட்டுகிறோம். அதற்குள் அறைகள் அமைக்கிறோம். வானத்துக்கும் பூமிக்குமாக எங்கும் பரந்திருக்கின்ற ஆகாசம், வெட்டவெளி, காலியிடம், அந்த வீட்டுக்குள்ளும் இருக்கிறது. ஒவ்வோர் அறைக்குள்ளும் இப்போது ஆகாசம் இருக்கிறதல்லவா...
இனி அந்த வீடு எரிந்து போனது, அல்லது இடித்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்த பொருள்கள் எல்லாம் எரிந்து சாம்பலாகிப் போயிருக்கும்; மரங்களெல்லாம் எரிந்து சாம்பலாகிப் போயிருக்கும். அறைகள் இல்லை; அலமாரிகள் இல்லை எல்லாம் அழிந்துவிட்டன. ஆனால் அறைகளுக்குள் இருந்த ஆகாசம் இப்போது என்னவானது? அழிந்தா போனது? இல்லவே இல்லை. அறைகள் என்னும் தடுப்புகள் இல்லையே தவிர, ஆகாசம் அழியததாகவே இருக்கிறது. ஆகாசம் எங்கும் நீக்கமற நிறைந்தது. அழிவற்றது. ஆத்மாவும் அதைப் போன்றதே.

எங்கும் நிறைந்த ஆகாசம் எப்படி அறைகளுக்குள் தனித்தனியாக அடங்கியிருந்ததோ, அதைப்போல, எங்கும் நிறைந்த ஆத்மாவே தேகங்களுக்குள் தனித்தனியாக உள்ளது. அப்படியிருக்கும்போது யாருக்கு யார் கணவன்? யாருக்கு யார் மனைவி? என்கிறார் அகஸ்தியர்.

"ஹந்யமாநேஷு தேஷ்வேவ ஸ்வயம் நைவ விஹந்யதே| ஹந்தாசேந் மந்யதே ஹந்தும் ஹதஸ்சேந் மந்யதே ஹதம்|| (21)

"தாவுபெள நவிஜாநீதோ நாயம் ஹம்திநஹந்யதே| கஸ்மாந்ந்ருபாதி துக்கேந கிம் கேதஸ்யாஸ்தி காரணம்|| (22)

பொருள்: (21, 22)
ஏவம் - இவ்விதமாக; 
தேஷு - தேகங்கள்; 
ஹந்யமா நேஷு - கொல்லப்படுவனவாயிருக்க; 
ஸ்வயம் -தான் (ஆத்மா); 
ந விஹந்ய தேஏவ - கொல்லப்படுவதே இல்லை; 
ஹந்தாசேத் - கொலை செய்பவனோ: ஹந்தும் கொல்வதாக; 
மந்யதே - நினைக்கிறான்; 
ஹத: சேத் - கொல்லப்படுபவனோ, ஹதம் - (ஆத்மாவை) கொல்லப்பட்டவன் என்று; 
மந்யதே - எண்ணுகின்றான்; 
தாவுபௌ - அவ்விருவரும்; 
நவிஜாநீத: - அறிகின்றார்களில்லை. அயம் - இவன்; 
நஹந்தி - கொல்வதுமில்லை; 
ந ஹந்யதே - கொல்லப்படுகின்றதுமில்லை; 
அஸ்மாத் - இக்காரணத்தால்; 
ந்ருப - அரசே (ராமரே); 
அதிதுக்கேந - மிக்க துயரத்தால்; கேதஸ்ய - தவிப்பதற்கு; 
கிம் காரணம் அஸ்தி - என்ன காரணம் உள்ளது? 

"ஸ்வஸ்வரூபம் விதித்வேதம் து:கம் த்யக்த்வா சுகீ பவா|"

பொருள்:
ஸ்வஸ்வரூபம் - தன்னுடைய சொரூபத்தை; 
விதித்வா - அறிந்து; 
இதம் - இந்த; 
து:கம் - துக்கத்தை; 
த்யக்த்வா - விடுத்து;
சுகீ பவ - சுகமாக இருப்பாயாக. (தன் சொரூபத்தை அறிந்து, துக்கத்தைவிட்டு சுகமாக இரு.)

கருத்து:
தேகங்கள்தான் கொல்லப்படுகின்றன. ஆத்மா கொல்லப் படுவதில்லை. கொலை செய்பவனோ கொல்வதாக நினைக்கிறான். கொல்லப்படுபவனோ, இறந்ததாக எண்ணுகிறான். உண்மையை இருவருமே அறிகிறார்களில்லை. உண்மையில் இவன் கொல்வதுமில்லை, அவன் கொல்லப்படுவதுமில்லை. எனவே ராமா, நீர் துயரத்தில் தவிப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது?

விளக்கம்:
இங்கே, ஞானத்தை எடுத்துக் கூறுகிறார் அகஸ்தியர் ஆனால் ராமர் இப்போதுள்ள சூழ்நிலைக்குத் தக்கதாக அவரது கூற்று இல்லை. இங்கே இறந்து போனவருக்காக வருந்தவில்லை ராமர். ராவணன் அபகரித்துக் கொண்டு போன, உயிரோடிருக்கும் சீதாதேவிக்காகவே வருந்துகிறார்.

ராம ஊசூ:
"முநே தேஹஸ்யநோ து:கம் நைவசேத் பரமாத்மந:II" (23)

"ஸீதா வியோக து: காக்நிர் மாம் பஸ் மீ குருதே கதம்| ஸநாநுபூயதே யோர்தஸ்ஸ நாஸ்தீதி த்வயேரித:I| " (24)

பொருள் (23 , 24):
முனே - முனிவரே; 
து:கம் - துக்கமானது; 
தேஹஸ்ய - உடலுக்கு; 
ந - அல்ல; 
பரம் - வேறு என்றால்; 
ஆத்மன ச - ஆத்மாவுக்கும்; 
நைவ சேத் - இல்லை என்றால்; 
ஸீதா வியோக து:காக்நி: - சீதாதேவியின் பிரிவினால் ஏற்பட்ட துக்கம் என்னும் நெருப்பானது; 
மாம் - என்னை; 
கதம் - ஏன்; 
பஸ்மீ குருதே - தகிக்கின்றது; 
ஸதா - எப்போதும்; 
ய: அர்த்த: - எந்த விஷயமானது; அநுபூயதே - அனுபவிக்கப்படுகின்றதோ; ஸ: - அந்த விஷயம்; 
நாஸ்தீதி - இல்லை என்று; 
த்வயா உங்களால்; 
ஈரித:-கூறப்பட்டது.

ராம ஊசூ:-
முனிவரே, துக்கமானது உடலுக்கல்ல, ஆத்மாவுக்கும் அல்ல என்று கூறுகிறீர்கள். சீதாதேவியின் பிரிவால் ஏற்பட்ட துயரம் என்னும் நெருப்பு என்னை எரித்துக் கொண் டிருக்கிறது. அது இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்களே, என்று ராமர் கேட்கிறார்.

"ஜாயதாம் தத்ரவிஸ்வாஸ: கதம் மே முனிபுங்கவ| அந்யோஸ்தி நாஸ்தி கோ போக்தா யேந ஜந்து: ப்ரதப்யதே||" (25) 

"ஸுகஸ்யவாபி து:கஸ்ய தத் ப்ரூஹி முநிஸத்தம|"

பொருள்:
தத்ர - அவ்விஷயத்தில்; மே - எனக்கு: விஸ்வாஸ: - நம்பிக்கையானது; கதம் ஜாயதாம் -எங்ஙனம் உண்டாகும்?
முநிபுங்கவ - முனிவர் பெருமானே; யேந - யாதொரு துக்கத்தால்; ஜந்து: - ஜீவன்; ப்ரதப்யதே - தவித்துக் கொண்டிருக்கிறானோ (அத்தகைய துக்கத்தை); போக்தா - அனுபவிக் கின்றவன்; அஸ்தி - இருக்கின்றான்; நாஸ்தி (அப்படி) இல்லை (என்றால்); அந்ய:- வேறு; க: எவன்; ஸுகஸ்ய து:கஸ்ய வா அபி - சுகதுக்கத்துக்குக் காரணன்; முனிஸத்தம - முனிசிரேஷ்டரே; தத் ப்ரூஹி - அதனைக் கூறுங்கள்

கருத்து :
"நீங்கள் சொல்வதை நான் எப்படி நம்புவது? ஜீவன் துக்கத்தால் தவித்துக் கொண்டிருக்கும்போது, தாங்கள் அனுபவிப்பவன் என்று ஒருவன் இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படியானால் வேறு யார்தான் அதற்கு காரண மாகிறார்கள்?" என்று ராமர் முனிவரைக் கேட்கிறார்.

விளக்கம் :
ஸ்ரீராமபிரானது கேள்வியில் நமது மனநிலை அப்படியே பிரதிபலிக்கிறது. லேசான சீற்றமும் அதில் தென் படுகிறது. துயரத்தால் தவித்துக் கதறிக் கொண்டிருப்பவனிடம் வந்து ஒருவர், இதெல்லாம் ஒன்றுமேயில்லை. மாயை, இந்த துக்கம், உன் உடலுக்கா. ஆத்மாவுக்கா, இரண்டுக்கும் இல்லாதபோது நீ அழுவானேன், என்று வேதாந்தம் பேசினால் கோபம்தானே வரும்.!?

இப்போதைய தவிப்பு நிஜம், அழுகை நிஜம். ஏனென்றால் அது அனுபவித்துக் கொண்டிருக்கும் விஷயம். அந்த சூழ்நிலையில் வந்து, எதற்காக இந்த அழுகை, துக்கம்?, யாருக்கு என்றால், அனுபவித்துக் கொண்டிருப்பவன் என்ன சொல்வான்? இதோ அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே, கண்ணெதிரே பார்க்கிறீர்களே, இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று கேட்கமாட்டானா? ராமரும் அதைத் தான் கேட்டார். சற்றே மனதை அடக்கிக் கொண்டு, முனிவருக்கு மரியாதை
தரவேண்டும் என்பதற்காக தன் சீற்றத்தையும் அடக்கிக் கொண்டு கேட்கிறார்.

அகஸ்திய உவாச:
"துர்ஜ்ஞேயா ஷாம்பவீ மாயா யயாஸம்மோஹ்யதே ஜகத்||" (26)

பொருள்:
துர்ஜஞேயா - அறிவதற்கு அரியதான; ஷாம்பவீ - சம்புவினுடைய; மாயா - மாயை (மாயையே காரணம்); யயா - எந்த மாயையால்; ஜகத் - உலகம்; ஸம்மோஹ்யதே - பிரமிக்கிறதோ.

கருத்து:
எந்த மாயையால் உலகம் பிரமிப்படைகின்றதோ, அது சம்புவின் மாயையே காரணம். அதை அறிவது அரிது. மாயா சக்தி, பிரக்ருதி. சக்தியுடன் மாயையால் இந்த உலகம் இயக்கப்படுகிறது.

"மாயாந்து ப்ரக்ருதிம் வித்யா ந் மயிநம்து மஹேஸ்வரம்| அஸ்யாவயவபூதேந வ்யாப்தம் ஸர்வமிதம் ஜகத்||" (27)

பொருள்:
மாயாந்து- மாயையோ என்றால்; ப்ரகிருதிம் - முதற்காரண மானது என்று; வித்யாத் - அறிய வேண்டும்; மாயிநம்து மாயையை வசப்படுத்தியவனை; மஹேஸ்வரம் - மஹேஸ்வரர் (என்று அறிய வேண்டும்); அஸ்ய - இவரது; அவயவபூதேந - அம்சம்; இதம் ஜகத் சர்வம் இவ்வுலகம் முழுவதும். வ்யாப்தம் - வியாபிக்கப்பட்டுள்ளது.

கருத்து:
மாயைதான் இதற்கெல்லாம் முதற்காரணமானது என்பதை அறிய வேண்டும். மாயையை வசப்படுத்தியவரான மஹேஸ்வரரை அறிய வேண்டும். அவரது அம்சம் இவ்வுலகம் முழுவதும் வியாபித்துள்ளது.

"ஸத்ய ஞானாத்மகோநந்தோ விபுராத்மா மஹேஸ்வர:| தஸ்யை வாம்ஷோ ஜீவலோகே ப்ராணிநாம் ஹ்ருதயேஸ்தித:|| (28)

பொருள்:
ஸத்ய ஞானாத்மக: - சத்யம், ஞானம் இவற்றின் உருவாக; அனந்த:- எல்லையற்றதாக; விபு: - வியாபித்திருக்கும்; ஆத்மா - ஆத்மா; மஹேஸ்வர: - மகேஸ்வரராகும்; தஸ்ய ஏவ அம்ச: - அவருடைய அம்சமே; ஜீவலோக - ஜீவர்கள் வாழும் இவ்வுலகில்; ப்ராணிநாம் பிராணிகளுடைய; ஹ்ருதயே - இருதயத்தில்; ஸ்தித: - உள்ளது.

கருத்து:
சத்யம், ஞானம் இவற்றின் உருவமாக, எல்லையற்று எங்கும் வியாபித்திருக்கும் ஆத்மாவே மகேஸ்வரராகும். அவருடைய அம்சமே இவ்வுலகில் பிராணிகளுடைய இருதயத்தில் உள்ளது.

"விஸ்புலிங்கா யதா வஹ்நேர் ஜாயந்தே காஷ்டயோகத:| அநாதிகர்ம ஸம்பத்தா ஸ் தத்வதம்ஷா மஹேஷிது:|| (29)

பொருள்:
யதா - எவ்வாறு; காஷ்ட யோகத: - கட்டையின் சம்பந்தத்தால்; வஹ்நே: - நெருப்பிலிருந்து; விஸ்புலிங்கா - தணற்பொறிகள்; ஜாயந்தே - உண்டாகின்றனவோ; தத்வத் அதுபோலவே; அநாதிகர்மஸம்பத்தா: - அநாதியான செயல்களோடு கூடிய ஜீவர்களும்; மஹேஷிது - மஹேஸ்வரரது; அம்சா:- அம்சமானவர்கள்.

கருத்து:
நெருப்பு, கட்டையோடு சேரும்போது (அரனி கட்டை ) தணற் பொறிகள் உண்டாகும். அதைப் போல அநாதியான செயல்களோடு கூடிய ஜீவர்களும் மஹேஸ்வரரது அம்சமானவர்களே.

"அநாதி வாஸநாயுக்தா: க்ஷேத்ரஜ்ஞா இதி தேஸ்ம்ருதா: மநோ புத்திரஹங்கார: சித்தம் சேதி சதுஷ்டயம்||" (30)

பொருள்:
அநாதிவாஸநாயுக்தா:- அநாதியான கர்மவினைகளைக் கொண்டவர்கள்; தே - அவர்கள் (ஜீவன்கள்); க்ஷேத்ரஜ்ஞா இதி - க்ஷேத்ரஞ்ஞர்கள் என்று; ஸ்ம்ருதா:- கூறப்பட்டவர்கள்; மன: - மனம்: புத்தி: - புத்தி; அஹங்கார: - அஹங்காரம்; சித்தம்சேதி - சித்தம் என்று இவ்வாறு; சதுஷ்டயம் நான்கு உள்ளது.

"அந்த: கரணமித்யாஹுஸ் தத்ர தே ப்ரதி பிம்பிதா:| ஜீவத்வம் ப்ராப்நுயு: கர்ம பலபோக்தார ஏவதே|| (31)

பொருள்:
அந்த: கரணம் - (மேலே சொன்ன நான்கும் (மனம் புத்தி அஹங்காரம் சித்தம்) அந்த கரணம், இதி ஆஹு: - என்று கூறுகிறார்கள்; தத்ர - அங்கு; ப்ரதிபிம்பிதா:- பிரதிபிம்பித்தவர்களான; தே - அவர்கள்; ஜீவத்வம் - ஜீவத்வத்தை; ப்ராப்நுயு: - அடைவார்கள்: கே ஏவ - அவர்களே; கர்ம பல போக்தார:- கர்ம பலனை அனு பவிப்பவர்கள்.

கருத்து:
சதுஷ்டயம் என்னும் புத்தி, மனம், அஹங்காரம், சித்தம் நான்கும் அந்த கரணங்கள் என்று கூறப்படும். அதில் பிரதிபலிப்பவர்களாக ஜீவர்கள் கர்ம பலனை அனுபவித்தபடி ஜீவிப்பார்கள்.

"ததோ வைஷயிகம் தேஷாம் தேஷாம் சுகம் வா துக்கமேவ வா| தஏவ புஞ்ஜதே போகா யதநேஸ் மின் சரீர்கே|| (32)

பொருள்:
தத:- ஆதலால் ; தஏவ- அவர்களே; தேஷாம் - அவர்களது; வைஷயிகம் - விஷய சம்பந்தமான; சுகம் வா - சுகத்தை யாவது; துக்கம் வா - துக்கத்தையாவது; போகாயதநே - அனுபவிப்பதற்கு இடமாகிய; அஸ்மின் சரீரகே - இந்த சரீரத்திலே; புஞ்ஜதே - அனுபவிக்கிறார்கள்.

கருத்து:
ஆதலால் அந்த ஜீவர்கள், அவர்களது விஷய சம்பந்தமான சுகத்தையாவது, துக்கத்தையாவது அனுபவிப்பதற் கிடமாகிய இந்த சரீரத்திலே அனுபவிக்கிறார்கள்.

"ஸ்தாவரம் ஜங்கமம் சேதி தவிவிதம் வபுருச்யதே| ஸ்தாவராஸ்தத்ர வ்ருக்ஷாஸ்யுஸ் ஸுக்ஷ்மாகுல்ம லதாதய:|| (33)

பொருள்:
வபு: சரீரம் ; ஸ்தாவரம் - ஸ்தாவரம்; ஜங்கமம்ச - ஜங்கமமும்; இதி - என்று; த்விவிதம் - இருவகையாக; உச்யதே - சொல்லப்படும்; தத்ர - அதில்; ஸ்தாவரா: - ஸ்தாவரங்கள்; வருக்ஷா: - மரங்கள்; ஸுக்ஷ்மா: சூட்சு மங்களான; குல்மலதாதய:- செடி கொடி முதலியவைகளே; ஸ்யு:- ஆகும்.

கருத்து:
சரீரமானது ஸ்தாவரம், ஜங்கமம் என்று இருவகையாக சொல்லப்படுகிறது. அதில் ஸ்தாவரங்கள் என்பது, மரம், செடி, கொடி முதலானவைகளாகும்.

"அண்டஜாஸ்வேதஜாஸ் தத்வத் கர்பஜா இதிஜங்கமா:| யோநி மந்யே ப்ரபத்யந்தே சரீரத்வாய தேஹிந:||" (34)

"ஸ்தானுமந்யேநுஸம்யந்தி யதாகர்ம யதாஸ்ருதம்| ஸுக்யஹம் து:க்யஹஞ்சேதி ஜீவஏவாபி மந்யதே||" (35)

பொருள்:
ஜங்கமா:- ஜங்கமங்கள் (என்பவை): அண்டஜா: முட்டையிலிருந்து தோன்றுவன; ஸ்வேதஜா: - புழுக்கத்தி லிருந்து தோன்றுவன; தத்வத் அவ்வாறே; கர்பஜா: கருப்பையிலிருந்து தோன்றுவன; இதி - என்று (சொல்லப் படுகிறது); அந்யே தேஹிந: - மற்ற தேஹிகள் (நல்வினை கொண்டவர்கள்); சரீரத்வாய - சரீரம் பெறுவதற்காக; யோநிம் - கர்ப்பத்தின் வழியை; ப்ரபத்யந்தே அடைகின்றார்கள்; அந்யே - மற்றவர்கள் (தீவினை கொண்டவர்கள்); யதாகர்மம். யதாஸ்ருதம் - கர்மவினைகளின்படி; ஸ்தாணும் - ஸ்தாவர சரீரத்தை; அநுஸம்யந்தி - அடைகின்றனர்; அஹம் சுகி - நான் சுகவான்; அஹம் துக்கி - நான் துயரப்படுவோன்' (என்று); ஜீவஏவ- ஜீவனே; அபிமந்யதே - நினைக்கின்றான்.

கருத்து:
ஜங்கமங்கள் என்பவை, முட்டையிலிருந்து தோன்றுவன, புழுக்கத்திலிருந்து தோன்றுவன, கருப்பையிலிருந்து தோன்றுவன என்று சொல்லப்படுகிறது.

நல்வினைப்பயன் கொண்டவர்கள் உடலைப் பெறு வதற்காக கர்ப்பத்தின் வழியை அடைகின்றார்கள். தீ வினைப்பயன் கொண்டவர்கள், அவர்கள் கர்மவினைப்படி ஸ்தாவர சரீரத்தை அடைகின்றனர். நான் சுகமாக இருக்கிறேன் என்றும், துயரப்படுகிறேன் என்றும் ஜீவன் நினைக்கிறான்.

"நிர்லேபோபி பரம்ஜ்யோதிர் மோஹிதஷ் ஷம்புமாயயா|"

பொருள்:
நிர்லேப:- பாவமற்றவன்; பரம்ஜ்யோதி: - பரஞ்சோதி; அபி - ஆனாலும்; ஷம்புமாயா மோஹித:- மயங்குகிறான். சம்புவின் மாயையால்;

கருத்து:
ஜீவன், பரஞ்ஜோதியாகத்தக்க பாவமற்றதாக இருந்தாலும் கூட சிவபிரானின் மாயையால் மயங்குகிறான்.

"காம: க்ரோதஸ் ததாலோபோ மதோ மாத்ஸர்ய மேவச||" (36)

"மோஹஸ்சேத்யரிஷட்வர்க மஹங்காரகதம்விது:|"

பொருள்:
காம: - காமம் ; க்ரோதம் -குரோதம்; ததா லோப: அவ்வாறே லோபமும்; மத: மதமும்; மாத்ஸாய: ஏவச மாச்சர்யமும்; மோஹஸ்ச - மோகமும்; இதி அரிஷட்வர்கம் (ஆகிய) இவை ஆறு வகையான பகைகளாகும் (இவை); அஹங்காரகதம் - அகங்காரத்தில் அடங்கியவை (என்று); விது:- அறிகின்றார்கள்.

கருத்து:
காமம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம், மோகம் என்னும் இந்த ஆறுவகையான பகைகளும் அகங்காரத்தில் அடங்கும்.

"ஸ ஏவ பத்யதே ஜீவ ஸ்வப்ந ஜாக்ரதவஸ்தயோ:||" (37)

"ஸுஷுப்தௌ ததபாவாச்ச ஜீவஷ்ஷங்கரதாங்கத: ஸஏவ மாயயா ஸ்ப்ருஷ்ட: காரணம் சுக து:க யோ:|| (38)

பொருள்:
ஸ: ஏவ் - அந்த ஜீவனே; ஸ்வப்ந ஜாக்ர தவஸ்தயோ:- கனவு, விழிப்பு இருநிலைகளிலும்; பத்யதே - கட்டுப்படுகிறான்; ஜீவ: - ஜீவன்; ஸுஷுப்தெள - உறக்கத்தில்; தத பாவாச்ச - அது இல்லாததால்; சங்கரதாம்கத: - ஆனந்தத்தை அடைகிறான்; ஸ: ஏவ - அவனே; மாய்யா மாயையால்; ஸ்ப்ருஷ்ட: - சம்பந்தப்பட்டு; சுகது:கயோ-சுகதுக்கங்களுக்கு; காரணம் - காரணமாகிறான்.

கருத்து:
ஜீவன், கனவு, விழிப்பு என்னும் இருநிலைகளுக்கும் கட்டுப்படுகிறான். தூக்கத்தின்போது இந்த இரண்டும் இல்லாத நிலையில் ஆனந்தத்தை அடைகிறான். இந்த ஜீவனே மாயையால் சுகதுக்கங்களுக்குக் காரணமாகிறான்.
*****
"ஸுக்தௌ ரஜதவத் விஷ்வம் மாயயா த்ருஷ்யதே ஷிவே| ததோ விவேக ஞானேந நகோப்யத்ராஸ்தி து:கபாக்||" (39)

பொருள்:
ஸுக்தௌ - சிப்பியில்; ரஜவத் வெள்ளிபோல; விஷ்வம் - உலகமெல்லாம்; ஷிவே - சிவபிரானிடம்; மாயயா த்ருஷ்யதே - மாயையால் காணப்படுகிறது; தத: - ஆதலால்; விவேக ஞானேந - விசாரித்து அறியும் அறிவால்; அத் இங்கு: க: அபி - ஒருவனும்; து: கபாக் - துக்கத்தை அடைபவனாக; நாஸ்தி - இல்லை.

கருத்து:-
சிப்பியானது, வெள்ளி போல் ஒரு மாயத் தோற்றத்தை கொடுக்கும் அது மாயையால் காணப்படுகிறது. அந்த மாயையை விவேகத்தோடு விசாரித்து அறிவால் அறியும் ஒருவர் துக்கத்தை அடைவதில்லை.

"ததோ விரம து:காத்வம் கிமுதா பரிதப்யஸே|"

பொருள்:
தத:- ஆதலால்; த்வம் - நீர்; து;காத் - துக்கத்திலிருந் தும்; விரம- விடுபடுவீராக; கிம் முதா தப்யஸே - பரிதவிக்கிறீர். ஏன் வீணாக; பரி

கருத்து:
"ஆதலால் ராமா, நீர் துக்கத்திலிருந்தும் விடுபடுவீராக. ஏன் வீணாக பரிதவிக்கிறீர்." என்று அகஸ்தியர் கூறினார்.

விளக்கம் :
அனாதி காலம் தொடங்கி ஆயிரமாயிரம் பேர் அநேக விதங்களாக விளக்கிக் கொண்டிருக்கும் மாயையைப் பற்றி. அகஸ்தியரும் ராமருக்கு விளக்கத் தொடங்குகிறார்.

உலகம் ஒரு பிரமையான நிலையில் இருக்கிறது. இது உண்மை அல்ல. ஆனால் உண்மை போல் தோன்றுகிறது. இதற்கு என்ன காரணம்? சாட்சாத் பரமேஸ்வரருடைய மாயைதான் காரணம். இந்த மாயை வசப்பட்டிருப்பது பரமேஸ்வரரிடம்தான். இனி பரமேஸ்வரர் எங்கிருக்கிறார்?
எங்கும் நிறைந்து இருக்கிறார். இவரது அம்சம் நம் ஆத்மாவாக இருக்கிறது. இதற்கு ஜீவாத்மா என்று பெயர். கர்ம வினைகளால் மீண்டும் மீண்டும் பிறந்து மடிந்து கொண்டிருப்பதுமான ஜீவர்கள் பரமேஸ்வரரது அம்சமே.

நெருப்பும் கட்டையும் சேர்ந்தால் என்னவாகும்? கட்டையில் நெருப்புப் பற்றி தணற் பொறிகள் ஏற்படும். அதைப் போல வெறும் கட்டையைப் போன்றவர்கள், நெருப்பு என்னும் ஆத்மாவின் சேர்க்கையைப் பெற்று, கர்ம வினைகளைப் புரிகிறார்கள். கர்மவினை புரியும் ஜீவாத்மாக் களை க்ஷேத்ரக்ஞர்கள் என்று கூறுவார்கள். மனம், புத்தி, அஹங்காரம். சித்தம் என்னும் நான்கு விஷயங்களைப் பிரதிபலிப்பவை ஜீவாத்மாக்கள். இந்த நான்கையும் சதுஷ்டயம் என்று கூறுவார்கள்.'

1. மனம்: இது வாயுவின் அம்சம். நினைப்பு, மறப்பு இரண்டும் இதன் தன்மைகள். மனம் வாயுவின் அம்ச மானதால், சதா வாயுவைப் போலவே அலையும். இதற்கு அதிதேவதை சந்திர பகவான்.

2. புத்தி: இது அக்நியின் அம்சம். நல்லதையும் கெட்டதையும் இது பகுத்துணரும். ஒரு பொருள் எப்படிப்பட்டது என்பதை நிச்சயிக்கும். இதற்கு அதிதேவதை பிரம்மதேவர்.

3. சித்தம்: இது தண்ணீரின் அம்சமாக விளங்குவது. சிந்தனை இதன் தன்மை. ஐம்புலன்களுக்கும் சலனத்தை
உண்டாக்குவது இதுவே. இதற்கு அதிதேவதை விஷ்ணு.

4. அஹங்காரம்: இது "பிருத்வி' என்னும் 'மண்ணின் அம்சம். இந்த ஜடமாகிய உடலையே தான் என்று எண்ணும். நான், எனது என்னும் குணங்களோடு, நல்லது, கெட்டது ஆராயாமல், நல்வினை, தீவினைகளைச் செய்து கொண்டிருக்கும். இதற்கு அதிதேவதை ருத்ரன்.

ஸ்தாவரம் சங்கமம் போன பாடங்களில் பார்த்தோம்.
*****
ஸ்ரீராம உவாச:
முநே ஸர்வமிதம் ஸத்யம் யந்மதக்ரே த்வயேரிதம்|| (40)

பொருள்:
முநே - முனிவரே; மதக்ரே - எனக்கெதிரில்; த்வயா - உங்களால்; யத் எது; ஈரிதம் -கூறப்பட்டதோ; இதம் ஸர்வம் - இதுவெல்லாம்; ஸத்யம் - உண்மை.

"ததாபி நஜஹாத்யேதத் ப்ராரப்தாத்ருஷ்ட முல்பணம்| மத்தம் குர்யாத் யதா மத்யம் நஷ்டாவித்யாமபித்விஜம்||" (41)

பொருள்:
ததாபி - அங்ஙனமாயினும்; ஏதத் - இந்த (துயரம்); நஜஹாதி - விடவில்லை; உல்பணம் - கடுமையான; ப்ராரப்தாதருஷ்டம் - பிராரப்த கர்மமானது; யதா - எங்ஙனம் ; மத்யமானது - கள்ளானது; நஷ்டாவித்யம் - அஞ்ஞானம் நீங்கிய; த்விஜமபி - அந்தணனையும்; மத்தம் குர்யாத் -  மயங்கச் செய்யுமோ (அதுபோல).

"தத்வத் ப்ராரப்த போகோபி நஜஹாதி விவேகிநம்| தத: கிம் பஹுநோக்தேந ப்ராரப்தம் ஸ சிவ:ஸ்ம்ருத:||" (42)

பொருள்:
தத்வத் - அதுபோல; ப்ராரப்தபோக: - பிராரப்த கர்ம மானது; விவேகியும் அபி - விவேகியைக்கூட ; நஜஹாதி -  விட்டுவிடாது; தத: - ஆதலால்; பஹுநோக்தேந - அதிகம் கூறுவதால்; கிம் - என்ன (பயன்?); ப்ராரப்தம் - பிராரப்தமானது; ஸ: ஷிவ: - அந்த சிவபிரானால்; ஸ்ம்ருத: - தீர்மானிக்கப் பட்டது.

"பாததே மாம் திவாராத்ரம் அகங்காரோபி தாத்ருச| அத்யந்த பீடிதோ ஜீவ ஸ்தூல தேஹம் விமும்சதி||" (43)

பொருள்:
தாத்ருச:- அப்படிப்பட்ட; அஹங்காரோபி - அகங்காரமும்; மாம் - என்னை; திவாராத்ரம் - இரவும் பகலும்; பாததே - பாதிக்கிறது; அத்யந்த பீடித: - அதிகம் பாதிக்கப்பட்டால்; ஜீவ: - ஜீவன்; ஸ்தூலதேஹம் - உடலினை; விமும்சதி விடுகின்றான்.

"தஸ்மாத் ஜீவாப்தயே மஹ்யம் உபாய : க்ரியதாம் த்வயா|"

பொருள்:
தஸ்மாத் ஆதலால்; ஜீவாப்தயே - ஜீவிப்பதற்கு; மஹ்யம் - எனக்கு; உபாய: - உபாயமானது; த்வயா - உங்களால்; க்ரியதாம் - கூறப்படட்டும்.

கருத்து: (40-43)
ஸ்ரீராமர் அகஸ்தியரிடம், "முனிவரே, நீங்கள் என்னிடம் எதைக் கூறினீர்களோ, அதெல்லாம் உண்மைதான். ஆனாலும், என்னைவிட்டுத் துயரம் நீங்கவில்லை. அஞ்ஞானம் நீங்கிய அந்தணனையும் கள்ளானது, போதை கொள்ளச் செய்வது போன்று, பிராரப்த கர்மமானது விவேகியைக் கூட விட்டு விடாது. இன்னும் அதிகம் பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன்? பிராரப்தமானது அந்த சிவபிரானைப் போன்றதே. அகங்காரமும் இரவும் பகலும் என்னைப் பாதிக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்டால் ஜீவன் உடலினை விடுவானன்றோ? எனவே ஜீவிப்பதற்கு எனக்கு உபாயம் கூறுங்கள்" என்று கேட்டார்.

விளக்கம்:
அகஸ்தியர் நிலையாமை பற்றியும் சொன்னார். வேதாந்தமான கருத்துக்களையும் நிறையச் சொன்னார். ராமரும் கேட்டார். கேட்பதற்கு எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் கஷ்டம் போய்விட்டதா என்ன, இல்லையே. மனத்தைப் பெருந்துயரம் பாதித்துக் கொண்டிருக்கும்போது, அகஸ்தியர் சொன்ன எதுவும், தன் துயரத்தைத் தீர்த்துவிடவில்லை என்பதை அவரிடமே கூறுகிறார் ராமர். ஞானியாக இருந்தாலும் கள்ளுண்டால் மயங்கத்தான் செய்வான். அதுபோல விவேகியாக இருந்தாலும்கூட முன்வினைப் பயனால் தாம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை கூறுகிறார். இதை வெல்ல முடிய வில்லை. சிவபிரானைப் போலத்தான் முன்வினையும் என்று சொல்லும்போது சிவபிரானைப் போலவே வெல்ல முடியாததாக, அடக்க முடியாததாக முன்வினைப் பயன் இருக்கிறது என்பதை ஸ்ரீராமர் தெளிவாகக் கூறுகிறார்.

அகங்காரத்தைப் பற்றி அகஸ்தியர் சொன்னதைக் கேட்ட பிறகும் ராமர் சொல்கிறார். "நீங்கள் சொல்வது சரியே, ஆனால் என்னிடம் அகங்காரம் இருக்கத்தான் செய்கிறது. அது எப்போதும் கூடவே இருக்கிறது. நான் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன், தாங்க முடியாத துயரம் என்றால் உயிர் போகத்தானே செய்யும்? நான் உயிரோடிருக்க வழி இருந்தால் சொல்லுங்கள்" என்றார்.

- இதி பத்மபுராணே. சிவ கீதா உபநிஷத். பிரம்ம வித்யாயாம். சிவ ராகவ சம்வாதே. வைராக்கிய யோக நிரூபணே. த்வியத்யாய சம்பூர்ண:

அத்தியாயம் இரண்டு முற்றிற்று.

திருச்சிற்றம்பலம் 🙏 

Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்