சிவ சஹஸ்ரநாமம் பூர்வபாகம் ஸ்லோகங்கள் விளக்கத்துடன் 1-39

பூர்வபாக ஸ்லோகங்கள்:-

"யுதிஷ்டிர உவாச:- 
த்வயாபகேய நாமானி ச்ருதானீஹ ஜகத்பதே:| பிதாமஹேசாய விபோர்: நாமான்யாசக்ஷ்வ சம்பவே||" (1)

"பப்ரவே விச்வரூபாய மஹாபாக்யஞ்ச தத்வத:| ஸுராஸுரகுரௌ தேவே சங்கரே வ்யக்தயோனயே||" (2)

பொருள்:- கங்கா புத்ரரே பிதாமஹரே உலக நாயகரும் எங்கும் நிறைந்தவரும் சம்புவும் பொன் போன்ற மேனியரும் விஸ்வரூபியும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் குருவும், தேவ தேவரும் மங்களத்தைச் செய்பவரும், மூலப்பிரகிருதிக்கு காரணமாகியவருமான ஈஸ்வரர் சங்கரருடைய நாமங்களையும் சிறந்த மஹிமையையும் நீர் கேட்டுள்ளதை உள்ளபடி கூறியருளும் என்று யுதிஷ்டிரர் கேட்கிறார்..

- இது, மஹாபாரதம் அனுசாசன பர்வத்தில் முதலாவதாகிய தான தர்ம பர்வத்தில் பதினான்காம் அத்யாயத்தில் தொடங்குகிறது.

"பீஷ்ம உவாச:- 
அசக்தோஹம் குணான் வக்தும் மஹாதேவஸ்ய தீமத:| ஹோ ஹி ஸர்வக்தோ தேவோ த ச ஸர்வத்ர த்ருச்யதே||" (3)

"பிரம்ம விஷ்ணு ஸுரேசானாம் ஸ்ரஷ்டா ச ப்ரபுரே வ ச| ப்ரம்மாதய: பிசாசாந்தா யம் ஹி தேவா உபாஸதே||" (4)

பொருள்:- பீஷ்மர் கூறியது
சிறந்த ஞானமுள்ளவரான மஹாதேவருடைய குணங்களைச் சொல்ல நான் வல்லவன் அல்ல. பரமசிவன் எல்லா இடங்களிலும் இருப்பவர் ஆனால் எங்கும் காணப்படுவதில்லை - (3)

பிரம்மா விஷ்ணு இந்திரன் ஆகியோரை படைத்தவர். இவர்களுக்கு பிரபுவானவர், பிரம்மா தேவர்கள் எல்லோரும் அவரை உபாஸிக்கின்றனர் (4)

ப்ரக்ருதீனாம் பரத்வேன புருஷ்ஸ்ய ச ய: பர:| சிந்த்யதே யோ யோகவித்பிர் ருஷிபிஸ் தத்வதர்சிபி:| அஷரம் பரமம் அஸச்ச ஸதஸச்ச் ய: || (5)

ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ ஷோபயித்வா ஸ்வதேஜஸா | ப்ரஹ்மாண மஸ்ருஜத் தஸ்மாத் தேவதேவ ப்ரஜாபதி: || (6)

கோ ஹி சக்தோ குணான் வக்தும் தேவ தேவஸ்ய தீமத: | கர்ப்ப ஜன்ம ஜரா யுக்தோ மர்த்யோ ம்ருத்யு ஸமன்வித: || (7)

பொருள்:- அவர் ப்ரக்ருதிக்கும் புருஷன் என்ற ஜீவனுக்கும் மேம்பட்டவர். யோகமார்கத்தை அறிந்து, உண்மையைக் கண்டிருக்கும் ரிஷிகளால் அவர் தியானிக்கப்படுகிறார். அழிவற்ற பரப்ரஹ்மம் அவரே. காரிய பிரபஞ்சமாகவும் காரண காரியமாகவும் உள்ளவர் அவரே.(5)

தேவதேவரும் பிரஜைகளுக்கு ஈஸ்வரருமாகிய அவர் தமது மஹிமையால் பிரகிருதி புருஷர்களிடம் அசைவுண்டாக்கி அதினின்று ப்ரஹ்மாவைப் படைத்தார். (6)

கர்ப்பவாசம் பிறப்பு மூப்பு இறப்பு முதலியவற்றுடன் கூடிய எந்த மானிடன் தேவர்களுக்குத் தேவராகியவரும் ஸர்வஜ்ஞருமான அவருடைய குணங்களைச் சொல்ல திறமையுள்ளவனாவான்? (7)

கோ ஹி சக்தோ பவம் ஜ்ஞாதும் மத்வித: பரமேஸ்வரம் | ருதே நாராயணநாத் புத்ர சங்கசக்ரகதாதராத் || (8)

ஏஷ வித்வான் குணச்ரேஷ்டோ விஷ்ணு: பரமதுர்ஜய: | திவ்யசஷுர் மஹாதேஜோ வீஷ்யதே யோகசஷுஷா || (9)

ருத்ரபக்த்யா து க்ருஷ்ணேன ஜகத்வ்யாப்தம் மஹாத்மனா |
தம் ப்ரஸாத்ய ததா தேவம் பதர்யாம் கில பாரத || (10)

அர்த்தாத் ப்ரியதரத்வஞ்ச ஸர்வலோகேஷு வை ததா |
ப்ராப்தவானேவ ராஜேந்த்ர ஸுவர்ணாக்ஷான் மஹேஸ்வராத் || (11)

பொருள்:- புத்திரனே, சங்கு சக்கரம், கதை ஆகியவற்றைத் தரித்திருக்கும் நாராயணரைத் விட வேறு யாரால் பரமேஸ்வரரைப் பற்றி அறியக் கூடும்? (8)

எல்லாம் தெரிந்தவரும், குணங்களிற் சிறந்தவரும், வெல்லதற்கரியவரும், திவ்யஜ்ஞானமுடையவருமு, சிறந்த மஹிமை உள்ளவரும் ஆகிய இந்த விஷ்ணு யோகக் கண்களால் பார்க்கிறார் (9)

மஹாத்மாவான கிருஷ்ணர், ருத்ர பக்தியினால் உலகை வியாபிதிருக்கிறார். இவர் பதரிகாசிரமத்தில், மஹாதேவரை தவத்தால் மகிழ்வித்து பொன் போன்ற கண்களையுடைய மகேஸ்வரரிடமிருந்து எல்லா உலகங்களுக்கும் எல்லா விஷயங்களை காட்டிலும் அதிக பிரியமாய் இருக்கும் தன்மையை அடைந்துள்ளார். (10,11)

பூர்ணம் வர்ஷஸஹஸ்ரம் து தப்தவானேஷ மாதவ்:| ப்ரஸாத்ய வரதம் தேவம் சராசரகுரும் சிவம் || (12)

யுகே யுகே து க்ருஷ்ணேன தோஷிதோ வை மஹேஸ்வர:| பக்தயா பரமயா சைவ ப்ரீத்ச்சைவ மஹாத்மா:|| (13)

ஐஸ்வர்யம் யாத்ருசம் தஸ்ய ஜகத்யோநேர் மஹாத்மா:|
ததயம் த்ருஷ்டவான் ஸாஷாத் புத்ரார்தே ஹரிரச்யுத:|| (14)

பொருள்:- இந்த மாதவர் சராசர குருவும் வரமளிக்கும் தெய்வமுமான பரமசிவனை மகிழ்வித்து பூர்ணமாக ஆயிர வருஷம் தவம் செய்தார் (12)

யுகந்தோறும் மஹாத்மாவிடம் பரம பக்தியுள்ள க்ருஷ்ணனால் மஹேஸ்வரர் ப்ரீதி செய்யப்பட்டு சந்தோஷத்தை அடைந்திருக்கிறார் (13)

உலகிற்கு உற்பத்தி ஸ்தானமாகிய அம்மஹாத்மாவின் ஐஸ்வர்யம் எப்படிபட்டதென்று என்பதை புத்திரனை விரும்பி தவம் செய்த போது அச்சுதராகிய ஹரி நேரில் கண்டிருக்கிறார். (14)

யஸ்மாத் பரதரஞ் சைவ நான்யம் பச்யாமி பாரத | வ்யாக்யாதும் தேவ: தேவஸ்ய சக்தோ நாமான்யசேஷத:|| (15)

ஏஷ சக்தோ மஹாபாஹுர் வக்தும் பகவதோ குணான்| விபூதிஞ் சைவ கார்த்ஸ்ன்யேன ஸத்யாம் மாஹேஸ்வரீம் ந்ருப|| (16)

ஸுராஸுரகுரோ தேவ விஷ்ணோ த்வம் வக்துமர்ஹஸி| சிவாய சிவரூபாய யன்மாப்ருச்சத் யுதிஷ்டிரா:|| (17)

பொருள்:-
தேவதேவருடைய (சிவபெருமான்) நாமங்களை குறைவின்றி விளக்குவதற்கு இவரையல்லாத சக்தி வாய்ந்த வேறெருவரை நான் காணவில்லை (15)

மஹா பாஹுவான இவர் (க்ருஷணர்) பகவானுடைய (சிவபெருமான்) குணங்களை ஸத்தியமான மஹேஸ்வரரின் விபூதிகளையும்(பெருமைகள்) முழுதும் கூறுவதற்கு சக்தி படைத்தவர். (16)

பீஷ்மர் க்ருஷணரிடம் கூறுகிறார், "தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் குருவே விஷ்ணவே, மங்கள வடிவினரான சிவனைப் பற்றி எதை யுதிஷ்டிரர் என்னிடம் கேட்டாரோ அதை நீர் சொல்வதுதான் தகும் (17)

நாம்னாம் ஸஹஸ்ரம் தேவஸ்ய தண்டினா ப்ரஹ்மவாதினா |
நவேதிதம் ப்ரஹ்மலோகே ப்ரஹ்மனோ யத்புராபவத் || (18)

த்வைபாயனப்ரப்ருதயஸ் ததா சேமே தபோதனா: | ருஷய: ஸுவ்ரதா தாந்தா: ச்ருண்வந்து கததஸ்தவ || (19)

வாசுதேவ உவாச:-
ந கதி: கர்மணாம் சக்யா வேத்து மீசஸ்ய தத்வத: | ஹிரண்யகர்பப்ரமுகா தேவா: ஸேந்த்ரா மஹர்ஷ்ய:|| (20)

பொருள்:- 
ப்ரம்மவாதியான தண்டி மஹரிஷியால் தேவ தேவருடைய எந்த ஸஹஸ்ரநாமம் ப்ரஹ்ம லோகத்தில் ப்ரம்மாவிற்கு முன் தெரிவிக்கப்பட்டதோ, அதை சிறந்த விரதமுடையவர்களும், இந்திரியங்களை வென்றவர்களும், தவச் செல்வர்களுமான த்வைபாயனர் மற்றும் இந்த ரிஷிகள் நீர் சொல்லக் கேட்கட்டும் (18, 19)

வாசுதேவ உவாச:-
ஈஸ்வரருடைய லீலைகளின் போக்கை உள்ளபடி அறிவதற்கு மஹரிஷிகளோ இந்திரன் ப்ரம்மா முதலிய தேவர்களோ சக்தி படைத்தவர்களல்லர்.(20)

ந விதுர் யஸ்ய நிதன மாதிம் வா ஸூஷ்மதர்சின: | ஸ கதம் நாமமாத்ரேன சக்யோ ஜ்ஞாதும் ஸதாம் கதி: || (21)

தஸ்யாஹ மஸுரக்க்னஸ்ய காம்ச்சித்பகவதோ குணான் |
பவதாம் கீர்த்தயிஷ்யாமி வ்ரதேசாய யதாததம் || (22)

வைசம்பாயன உவாச:-
ஏவமுக்த்வா து பகவான் குணாம்ஸ்தஸ்ய மஹாத்மா:|
உபஸ்ப்ருச்ய கசிர்பூத்வா கதயாமஸ தீபத்:|| (23)

பொருள்:-
நுட்பமானதயும் காணும் சக்தி படைத்தவர்களும் எவருடைய ஆதியையோ முடிவையோ காணமுடியவில்லையோ, எவர் சாதுக்களின் புகலிடமோ, அவரை பெயர் மந்திரத்தால் எங்கனம் அறிய இயலும்? (21)

வைசம்பாயனர் உவாச:-
விரதங்களுக்கு ஈஸ்வரராகிய உங்களுக்கு அசுரரை அழிப்பவராகிய அந்த பகவானுடைய குணங்களில் சிலவற்றை கூறுகிறேன். (22)

ஶ்ரீ கிருஷ்ண பகவான் இங்ஙனம் கூறிவிட்டு ஆசமனம் செய்து பரிசுத்தராகி புத்தி சக்திக்கு உறைவிடமாகிய பகவானுடைய (சிவபெருமானுடைய) குணங்களை எடுத்துரைக்க ஆரம்பித்தார்.(23)
*****
வாசுதேவ உவாச:-
"தத: ஸ ப்ரயதோ பூத்வா மம தாத யுதிஷ்டிர:| ப்ராஞ்சலி: ப்ராஹ விப்ரர்ஷிர் நாமஸங்க்ரஹ மாதித:|| (24)

உபமன்யு உவாச:- 
"ப்ரஹ்மப்ரோக்தைர் ருஷிப்ரோக்தைர் வேதவேதாங்க ஸம்ப்பவை:|
ஸர்வலோகேஷு விக்யாதம் ஸ்துத்யம் ஸ்தோஷ்யாமி நாமபி:|| (25)

மஹத்பிர் விஹிதைஸ்ஸத்யை: ஸித்யை ஸர்வார்த்த ஸாதகை:| ருஷிணா தண்டினா பக்த்யா க்ருதைர் வேதக்ருதாதாமனா|| (26)

யதோக்தை: ஸாதுபி: க்யாதைர் முனிபிஸ்தத்வதர்சிபி:|
பரவரம் ப்ரதமம் ஸ்வர்க்யம் ஸர்வபூதஹிதம் சுபம்:|| (27)

பொருள்:-
வாசுதேவர் கூறியது:- யுதிஷ்டிரா, ப்ரஹ்ம மஹரிஷியான உபமன்யு மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு, கை கூப்பியவராக எனக்கு சிவ நாம ஸஹஸ்ரநாமத்தை ஆதியிலிருந்து கூறியருளினார்.(24)

உபமன்யு உவாச:- வேதங்களினினிறும் வேத அங்கங்களினின்றும் உதித்தவையும், ப்ரஹ்மாவாலும், ரிஷிகளாளும் பாராயணம் செய்யப்பட்டவையும் எல்லா உலகங்களிலும் பிரசித்தமானவையும் ஆகிய நாமங்களால் துதிக்கத் தக்கவரை துதிக்கிறேன்(25)

இவை மஹான்களால் போற்றப்பட்டவை. ஸத்யமானவை. சித்தயளிப்பவை. எல்லா கார்யங்களையும் சாதிப்பவை. வேதத்தில் ஊன்றிய உள்ளம் படைத்த தண்டி மஹரிஷியால் பக்தியுடன் அருளப்பட்டவை. (26)

உண்மையுணர்ந்த முனிவர்களாலும் ஸாதுக்களாலும் உள்ளபடி உணர்த்தப்பட்டுப் பிரசித்தமான அந்நாமங்களால் சிறந்தவரும் முதல்வரும் சுவர்க்கத்தை அளிப்பவரும் எல்லா உயிர்களுக்கும் நன்மை புரிபவரும் மங்கள வடிவினருமான அவரை துதிக்கிறேன். (27)
*****
ச்ருதை: ஸர்வத்ர ஜகதி ப்ரம்மலோகாவதாரிதை:|

ஸத்யைஸ்தத் பரமம் ப்ரஹ்மப்ரோக்தம் ஸநாதனம்| வக்ஷ்யே யதுகுல ச்ரேஷ்ட ச்ருணுஷ்வாவஹிதோ மம|| (28)

வரயைனம் பவம் தேவம் பக்தஸ்த்வம் பரமேஸ்வரம்| தேன தே ச்ராவயிஷ்யாமி யத்தத் ப்ரஹ்ம ஸ்நாதனம் || (29)

ந சக்யம் விஸ்தராத் க்ருத்ஸ்னம் வக்தும் சர்வஸ்ய கேநசித்| யுக்தேனாபி விபூதீனா மபி வர்ஷசதைரபி|| (30)

பொருள்:-
யதுகுல ச்ரேஷ்டரே, ப்ரம்ம லோகத்திலிருந்து இவ்வுலகிற்கு இறங்கியவையும் வேதத்தில் எங்கும் உறைபவையும் ஸத்தியமானவையுமான நாமங்களால் ப்ரம்மாவால் போற்றப்பட்ட பிரம்மமாகிய அப்பரம்பொருளைப் போற்றுகிறேன். ஒருமைப்பட்ட மனதுடன் என்னிடமிருந்து கேட்பீராக (28)

உலகின் தோற்றுவாயும் தேவதேவனும் ஆகிய இந்த பரமேஸ்வரனை பக்தராகிய நீர் ஆராதனை செய்யும். அதற்காக உமக்கு ஸநாதன ப்ரம்மாவாகிய இதை ச்ரவணம் செய்விக்கிறேன். (29)

எல்லாப் பொருமைகளும் வாய்ந்தவராயினும் எவராலும் சிவனுடைய பெருமை முழுவதையும் விரிவாக நூறு வருஷங்களில் கூட சொல்ல இயலாது. (30)
*****
யஸ்யாதிர் மத்த்ய மந்தஞ் ச ஸுரைரபி ந கம்யதே| கஸ்தஸ்ய சக்னுயாத் வக்தும் குணான் கார்த்ஸ்ன்யேன மாதவ|| (31)

கிம் து தேவஸ்ய மஹத: ஸம்ஷிப்தார்த்த பதாக்ஷரம்| சக்திதச்சரிதம் வஷ்யே ப்ரஸாதாத் தஸ்ய தீபத்:|| (32)

அப்ராப்ய து ததோனுஜ்ஞாம் ந சக்ய: ஸ்தோதுமீஸ்வர:| யதா தேனாப்யனுஜ்ஞாத: ஸ்துதோ வை ஸ ததா மயா|| (33)

அனாதிநிதனஸ்யாஹம் ஜகத்யோநேர் மஹாத்மன:| நாம்னாம் கஞ்சித் ஸமுத்தேச்யம் வஷ்யாம் யவ்யக்த யோநிந:|| (34)

பொருள்:-
மாதவா எவருடைய அடியும் முடியும் நடுவும் தேவர்களால் காணமுடியவில்லையோ அவருடைய குணங்கள் முழுவதும் சொல்வதற்கு எவன் சக்தியள்ளவனாவான் (31)

என்றாலும் புத்திக்கு உறைவிடமான அவருடைய அருளால் அந்த மஹாதேவருடைய சரிதத்தை சுருக்கமாக பதங்களிலும் அஷரங்களிலும் என் சக்திக்கு இயைந்தபடி கூறுகிறேன் (32)

அவருடைய அனுக்ரஹத்தைப் பெறாமல் அந்த ஈஸ்வரனை துதிக்க இயலாது. எப்பொழுது அவருடைய அனுக்ரஹத்தை பெற்றேனோ அப்பொழுதே என்னால் அவர் துதிக்கப்பட்டார் (33)

உலகத்தில் உற்பத்தி ஸ்தானமும் தனக்கு உற்பத்தி ஸ்தானம் காணப்படாதவரும் , ஆதியந்தமில்லாதவரும் ஆகிய அம்மஹாத்மாவின் நாமங்களில் சிலவற்றை உத்தேசமாக கூறுகிறேன்.(34)
*****
வரதஸ்ய வரேண்யஸ்ய விஸ்வரூபஸ்ய தீபத்:| ச்ருணு நாம்னாஞ் சயம் க்ருஷ்ண யதுக்தம் பத்மயோநினா||(35)

தசநாம ஸஹஸ்ராணி யான்யாஹ ப்ரபிதாமஹ:| தானி நிர்மத்ய மனஸா தத்னோ க்ருதமிவோத்த்ருதம்||(36)

கிரே: ஸாரம் யதா ஹேம புஷ்பசாரம் யதா மது| க்ருதாத் ஸாரம் யதா மண்டஸ்ததைதத் ஸாரமுத்ருதம்||(37)

ஸர்வபாபாபஹமிதம் சதுர்வேத ஸமன்விதம்| ப்ரயத்னேனாதி கந்தவ்யம் தார்யஞ் ச ப்ரயதாத்மனா||(38)

ஸர்பூதாத்ம பூதஸ்ய ஹரஸ்யாமித தேஜஸ:|அஷ்டோத்திர ஸஹஸ்ரம் து நாம்னாம் சர்வஸ்ய மே ச்ருணு|
யச்ச்ருத்வா மனுஜவ்யாக்க்ர ஸர்வான் காமானவாப்ஸ்யஸி||(39)

பொருள்:- 
வரமளிப்பவரும், சிறந்தவரும், விஸ்வரூபியும் புத்தியே வடிவாகியவரும் ஆன அவருடைய நாமங்களின் தொகுதி எவ்வாறு பிரம்மாவால் கூறப்பட்டுள்ளதோ அதைக் கேட்பீராக (35)

பிரம்மா கூறிய பத்தாயிரம் நாமாக்கள் எவையோ அவற்றை மனதால் கடைந்து தயிரிலிருந்து நெய்யை போல் இந்த ஸஹஸ்ரநாமம் எடுக்கப்பட்டதாகும் (36)

சுரங்கக் கனியின் ஸாரமான தங்கமும் புஷ்பத்தின் ஸாரமான தேனும் வெண்ணையில் ஸாரமான நெய்யும் எப்படியோ அப்படி ஸாரமான இது ஆராய்ந்தெடுக்கப்பட்டுள்ளது(37)

இது எல்லா பாவங்களையும் போக்குவது நாலு வேதங்களுடன் ஒன்றுபட்டது. முயற்சி செய்து அடையத்தககது. ஒருமைப்பட்ட மனத்தினால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது(38)

உயிர்களுக்கு எல்லாம் உயிராகியவரும் அளவு கடந்த வீரியம் படைத்தவரும் அனைத்தையும் தன்னிடம் ஈர்த்து கொள்வதால் ஹரன் எனவும் சர்வன் எனவும் பெயர் பெற்றவருமாகிய அவருடைய ஆயிரத்தெட்டு நாமாக்களை என்னிடமிருந்து கேட்பீராக. மனித உருக்கொண்டவர்களில் சிறந்தவரே! அதைக் கேட்பதால் எல்லா ஆசைகளின் பூர்த்தியையும் எய்துவீர்.(39)

பூர்வ பாகம் பாஷ்யம் முற்றிற்று
*****
த்யான ஸ்லோகம்:-

"சாந்தம் பத்மானஸ்த்தம் சசிதரமகுடம் பஞ்சவக்த்ரம் த்ரிநேத்ரம்
சூலம் வஜ்ரஞ்ச கட்கம் பரசு மபயதம் தஷபாகே வஹந்தம்|
நாகம் பாசஞ்ச கண்டாம் ப்ரலய ஹுதவஹம் ஸாங்குசம் வாமபாகே 
நானாலங்கார யுக்தம் ஸ்படிகமணி நிபம் பார்வதீசம் நமாமி||"

பொருள்:- சாந்த மூர்த்தியும் பத்மாசனத்தில் வீற்றிருப்பவரும், சந்திரகலையுடன் ப்ரகாசிக்கும் கிரீடங்கள் அணிந்தவரும், ஐந்து முகங்களையுடையவரும், மூன்று கண்களையுடையவரும், சூலம், வஜ்ரம், வாள், பரசு, அபய முத்திரை ஆகியவற்றை வலது புறமும், பாம்பு, பாசம், மணி, ப்ரளயாக்னி, அங்குசம் ஆகியவற்றை இடது புறமும் தரிப்பவரும் பலவிதமான அலங்காரம் உடையவரும் ஸ்படிகமணி போன்றவரும், ஆகிய பார்வதீசனை நமஸ்கரிக்கிறேன்.

திருச்சிற்றம்பலம் 🙏

Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்