சிவ சஹஸ்ரநாமம் அறிமுகம்

                              உ
                       சிவமயம் 
  திருச்சிற்றம்பலம்..அருணாசலம்..
                 "சிவஞான இதழ்"
   குரோதி, சித்திரை 21 (04.5.2024)

  "வேத சாரம் சிவ சஹஸ்ரநாமம்"

முகவுரை:-

சிவ சஹஸ்ரநாமம் கிட்டத்தட்ட 14-15 கிடைக்கிறது 

அதாவது புராணத்தில், குறிப்பாக சிவ மஹாபுராணம், சிவ ரஹஸ்யத்தில் போன்றவற்றில், ஆதியில் முதல் முதலில் பிரம்மாவிற்கு சிவபெருமானுடைய 10,000 நாமங்கள் உபதேசம் செய்யப்பட்டது என்று வருகிறது. பின்னர் அதிலிருந்து ஆயிரம் நாமங்களை த்யானத்தில் எடுத்ததாக சிவ மஹாபுராணம் கூறுகிறது. 

இந்த சிவ சஹஸ்ரநாமத்துக்கு பெயர், "ஸாம்ப ஸதாசிவாயுத நாமாவளி" என்று போற்றப்படுகிறது. இதில் , இதிஹாஸங்கள், ஆகமங்கள், புராணங்கள், துதிகள் இவற்றில் இடம்பெறுகிறது. சிவபெருமானது பத்தாயிரம் நாமங்களை அகராதி வரிசையில் உள்ள "ஸ்ரீ ஸாம்ப ஸதாசிவாயுத நாமாவளி", அதில் சிவபெருமானது லீலைகள், மந்திர-தந்திர சாஸ்திரங்களில் தத்துவநோக்குடன் விளக்கம் தருகிற நிலைகள், சிவபெருமானின் பல்வேறு நிலைகள், தோற்றங்கள் காவியமாக அமைந்த துதிகளில் காணப்பெறுகிற சுவை மிக வர்ணித்துள்ள வடிவழகு முதலியவற்றை விளக்குகிற நாமங்கள் அமைந்துள்ளன .

சிவ சஹஸ்ரநாமம் - 1

பத்மபுராணத்தில், பில்வகேஸ்வர மாஹாத்ம்யத்தில், ஸ்ரீ க்ருஷ்ண - மார்கண்டேய ஸம்வாதமாக வருகிறது. க்ருஷ்ணன் தன் வழிபாட்டிற்காக தன் குரு ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷியால் உபதேசிக்கப்படுகிறது. இதுவும், வேதஸார ஸிவ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் என்று போற்றப்படுகிறது.

சிவ ஸஹஸ்ரநாமம் - 2

இது மஹாபாரதத்தில் அநுசாஸனிக பர்வத்தில் 17வது அத்தியாயமாக இடம்பெறுகிறது. யுதிஷ்டிரருக்குக் கிருஷ்ணன் இதனை உபதேசிக்கிறார். தண்டி என்ற சிவபக்தரின் சிஷ்ய வரிசையில் வந்த உபமன்யு கிருஷ்ணனுக்கு இதனை உபதேசித்தார்.

சிவ ஸஹஸ்ரநாமம் - 3

இது ஸ்காந்த புராணத்தில், ஸ்கந்தனுக்கு சிவபெருமான் உபதேசித்து அருளியது . இது ருத்திரானுவாகமும், ஆகமங்களும் கூறுகிற சிவமகத்துவம் மிக்க நாமத்தொகுப்பு இது.

சிவ ஸஹஸ்ரநாமம் - 4 

பகீரதன் தன் முன்னோர்களான ஸக புத்திரர்கள் நற்கதியடைய கங்கை நதி கபிலாரண்யத்தில் பெருகி ஓட இமயமலையில் சிவபெருமானை நோக்கிச் செய்த தவத்தில் நெகிழ்ந்த சிவபெருமான் அவனது எதிரில் தோன்ற பகீரதன் சிவனை இந்த நாமங்களால் துதிக்கிறான். ஸ்ரீமஹாபாகவதத்தில் 67வது அத்தியாயமாக இது இடம் பெறுகிறது.

சிவ ஸஹஸ்ரநாமம் - 5 

ஸ்காந்த புராணத்தில் சங்கர ஸம்ஹிதையில் சிவரஹஸ்ய கண்டத்தில் இடம் பெற்ற இது விஷ்ணு ஸுதர்சன சக்கிரம் பெற, சிவனை இந்த ஆயிரம் நாமங்களால் தாமரைப் பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்கிறார். கடைசியில் இருபூக்கள் குறைய தன் இரு கண்களையும் கொண்டு அர்ச்சிக்கிறார். சிவபெருமான் நெகிழ்ந்து இருகண்களையும் ஸுதர்சனைத்தையும் வழங்குகிறார். திருவீழிமழலையின் நேத்ரார்பணேசுவாராக உத்ஸவப் பெருமானான ஸ்ரீ கல்யாண ஸுந்தரர் இந்த நாமங்களுக்குரியவர். விஷ்ணுவால் தாமரையாகத் தன் கண்களைக் கொண்டு அர்ச்சிக்கப் பெற்றவர் என இந்தத் தலவரலாறு கூறும்.

சிவ ஸஹஸ்ரநாமம் - 6

இதுவும் திருவீழிமழலை வரலாற்றுப்படி விஷ்ணுவால் ஸுதர்சனம் பெற வழிபட ஏற்கப்பட்டது. இதனைப் படிக்கும் போது விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் சுலோக பாதங்கள் பல வரிசையும் உருவும் மாறாமல் அமைந்துள்ளது வியப்பிற்குரியது.

இவற்றை எல்லாம், தவிர "ருத்ர சஹஸ்ரநாமம்" என்று வருகிறது, "ஓம் நமோ பகவதே ருத்ராய" என்ற அக்ஷர வரிசையில் ருத்திரரின் நாமங்கள் ருத்ர ஸஹஸ்ர நாமாவளியாக, ருத்ர யாமளத்தில் இடம் பெறுகின்றன. இது ப்ருங்கி முனிவர் அருளியது. சிவ விஷ்ணு சம்வாதமாக வருகிறது.

இவற்றை தவிர, மஹாம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் ருத்ரயாமளத்தில் தேவீ ரஹஸ்யத்தில் 44வது படலமாக அமைந்தது. மிருத்யுஞ்ஜய மந்திரங்களும் வேதம் கூறும் சிவமந்திரங்களும் நாமவடிவம் பெறுவது இதில் உள்ள தனிச்சிறப்பு.

மேலும் சிவபெருமான் மீது உள்ள, கிடைக்கக் கூடிய சஹஸ்ர நாமாவளிகள்:-

1. தக்ஷிணாமூர்த்தி சஹஸ்ரநாமம் - சிதம்பர ரஹஸ்யத்தில் மூன்று வருகிறது. தக்ஷிணாமூர்த்தி, த்ரிசதியும் வருகிறது 

2. அருணாசல சஹஸ்ரநாமம், 

3. பைரவ சஹஸ்ரநாமம் 

4. ஸரபேஸ்வரர் சஹஸ்ரநாமம், 

5. நடராஜ சஹஸ்ரநாமம், 

6. குஞ்சிதபாத சஹஸ்ரநாமம், 

7. த்யாகராஜர் முசுகுந்த சஹஸ்ரநாமம், 

8. தேஜனீவனநாத கல்யாண சுந்தர ஸஹஸ்ர நாமாவளி

9. அர்த்தநாரீஸ்வரர் ஸஹஸ்ரநாமம் 

10. ஸ்வர்ணாகர்ஷன பைரவர் ஸஹஸ்ரநாமம் 

11. வீரபத்ர சஹஸ்ரநாமம் 

12. அகோர மூர்த்தி சஹஸ்ரநாமம் 

13. வடுக பைரவர் சஹஸ்ரநாமம்

14. விஷ்ணு ப்ரோக்த சிவ சஹஸ்ரநாமம்

சிவபெருமான எல்லாமானவர், எங்குமுள்ளவர், எல்லாம் வல்லவர், பேரறிவு வடிவினர், தேவையுணர்வின்றி நிறைந்தவர் என்ற இறை நிலைகளை வேதங்கள் விளக்குகிறது. அவற்றை தொடர்ந்து வருகிற சமக அனுவாகங்கள் அவரருளால் உலகவாழ்வில் பெறத்தக்கனைத்தையும் பெறலாமாதலால் அவற்றை அவரிடம் கோருகிற பாங்கை விளக்குகின்றன. நமக்கெல்லாம் வேதம் தானே மூலம் ஆதாரம்..அந்த வேதமே நேரடியாக போற்றுகிது சிவபெருமானை. வேறு யாருக்கும் இப்படி இருப்பதாக தெரியவில்லை. வேதம் எல்லாவற்றையும் சிவ ரூபமாக, ருத்ர ரூபமாகவே பார்க்கிறது, பாடுகிறது, போற்றுகிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்..இதற்கு மேல் என்ன இருக்கிறது..ஒன்றும் இல்லை..!

சிவபெருமானைப் பற்றி வேதங்களும் சிவாகமங்களும் தருகிற விளக்கங்களை விஷயவாரியாக நினைவிற்குக் கொணடு வருவது "ருத்ரத்ரிசதீ". இது மிக அரிய தொகுப்பு இது. ஆகமஸாரத்திலுள்ளது. அர்ச்சாமூர்த்திகள் அனைவரையும் ஒருங்கே இதனைக் கொண்டு தியானம் செய்யலாம்.

மஹா மிருத்யுஞ்ஜய மாலா மந்திரமும் கவசமும் அநாயாஸ மரணத்தை விரும்பிய பெரியோர்கள் தினமும் பாராயணம் செய்து வந்தது. அகால - அபமிருத்யு பயத்தைப் போக்கும்.

*****

வேத சாரம் சிவ சஹஸ்ரநாமம் என்பது மஹாபாரதத்தில் உள்ளம் போன்ற அனுசாசன பர்வத்தில் தான தருமங்கள், சாஸ்திரங்களின் கருத்துக்களை எடுத்துச் செல்லும் ஶ்ரீ கிருஷ்ணர், "சிவ சஹஸ்ரநாம" ஸ்தோத்ரத்தை தர்மபுத்திரருக்கும், அவர் மூலமாக உலகனைத்துக்கும் உபதேசிக்கப்பட்டுள்ளது. 

அம்புப் படுக்கையில் இருக்கும் பீஷ்மரிடம் தர்மபுத்திரர் சிவபெருமானுடைய ஆயிரம் நாமங்களை, அதன் மகிமையை கூறும்படி கேட்க, அதற்கு பீஷ்மர்,

 "மஹாதேவருடைய குணங்களை சொல்ல எனக்குத் தகுதி இல்லை, அதற்கு தகுந்தவர் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான், அவர் தான் மஹாதேவருடைய நாமங்களை, குணங்களை குறைவின்றி விளக்குவதற்கு சரியானவர்".

என்று சொல்லி, ஶ்ரீ கிருஷ்ணரிடம் 

"மங்கள வடிவினரான சிவனைப் பற்றி நீர் சொல்வதுதான் தகும். பரமசிவனின் மகிமையை கூற வேண்டும்" என்று கேட்கிறார்.

அதற்கு ஶ்ரீ கிருஷ்ணர், 

"மஹாதேவருடைய பெருமையை அறிவதற்கு இந்திரன், பிரம்மா, மஹரிஷிகள் யாவரும் சக்தி வாய்ந்த அல்லர். நுட்பமானதையும் காண சக்தி படைத்தவர்களும் கூட அவருடைய ஆதி அந்தம் காணமுடியாது. மகரிஷி உபமன்யுவால் எனக்கு சிவ சஹஸ்ரநாமம் உபதேசிக்கப் பட்டது. உபமன்யுவிற்கு தண்டி மஹரிஷியும், அதற்கு முன் ஆதியில் பிரம்மா கூறிய பத்தாயிரம் நாமங்களை த்யானத்தால் இந்த ஆயிரம் நாமங்களை எடுத்தது. இது எல்லா பாவங்களை போக்குவது, நான்கு வேதங்களுடன் ஒன்று பட்டது," 

என்று எல்லாம் கூறி ஶ்ரீ கிருஷ்ணர், ஆசமனம் செய்து சிவ சஹஸ்ரநாமத்தை எடுத்துரைக்க ஆரம்பித்தார்.

சிவ சஹஸ்ரநாமங்கள் பத்துக்கும் மேல் கிடைக்கிறது, லிங்க புராணம், பிரம்மாண்ட புராணம், சிவ மஹாபுராணம், பத்ம புராணம், வாயு புராணம், ருத்ர யாமலம், சிவ ரஹஸ்யம், ஸ்காந்த புராணம், ஆதித்ய புராணம்..

மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்திலும் ஒரு சிவ சஹஸ்ரநாமம் வருகிறது. அடுத்து லிங்க புராணத்தில் வரும் சஹஸ்ரநாமம், இதுவும் ஸ்ரீ கிருஷ்ணர் மார்கண்டேயருக்கு உபதேசம் செய்தது.

பாரதத்தில் அனுசாசன பர்வத்தில் வரும் சிவ சஹஸ்ரநாமம், வேத சாரம் என்னும் பெருமையுடையது. இதை குரு பரம்பரையாக அருளப்பட்டது அதாவது..

முதலில், 

பிரம்மா

இந்திரன்

ம்ருத்யு

மருத்ஸ்(ருத்ராஸ்)

தண்டி

சுக்ரர்

கௌதமர் (சப்த ரிஷிகளில் ஒருவர்)

வைவஸ்வத மனு

நாராயணர் (புருஷ சூக்த மந்த்ர த்ருஷ்டா)

யமா

நாசிகேதா

மார்கண்டேயா

உபமன்யு 

கிருஷ்ணர் 

யுதிஷ்டிரர் 

இவ்வளவு உன்னதமான உயர்வான குரு பரம்பரையில் வந்தது வேத சாரம் "ஸ்ரீ சிவ சஹஸ்ரநாமம்".

சிவ சஹஸ்ரநாமத்தின் உயர்ந்த தத்துவங்களை உடைய சிவ நாமங்கள் சில..

உன்மத்த வேஷப்ரச்சன்ன்:- பித்தன் வேஷத்தில் தன்னை மறைத்துக் கொண்டிருப்பவர்

அதீன: - பித்தன் போலே ஏழை போலே இருந்தாலும், ஏழையில்வாதவர்

பீஜவாஹன:- அவித்யாகாம கர்மமாகிய பீஜத்தை வாகனமாக கொண்டவர்

நீலகண்ட:- அமரர்களுக்கு அருள் புரிய ஆலகால விஷம் குடித்தவர்

துர்வாஸ:- எங்கும் நிறைந்தவர் அதனால் ஆடை அணிவிக்க இயலாதவர்

அஹிர்புத்ன்ய:- உலகைத் தன்னுள் மூடிக்கொண்டு இருள் போன்ற தத்வஸ்வரூபி

அஜைகபாத்:-  ஒற்றை காலில் அசைவின்றி நிற்பவர். பிறப்பில்லாது என்றும் ஒரே மாதிரியாக இருப்பவர்

நவசக்ராங்க:- ஒன்பது ஆவரணம் உள்ள ஸ்ரீ சக்ரத்தை அங்கமாக கொண்டவர்

மஹாந்ருத்ய:- சிறந்த நர்த்தனம் உடையவர்

அதிவ்ருத்த:- பெரியவர்களுக்கும் பெரியவர். "யோ தேவானாம் ப்ரதமம் புரஸ்தாத் விச்வாதியோ ருத்ரோ மஹர்ஷி:"

நமஸ்காரார்த்த மந்த்ரம் 

"கத்ருத்ராய ப்ரசேதஸே மீடுஷ்டமாய தவ்யஸே| வோசேம சந்தமக்ம் ஹ்ருதே| ஸர்வோ ஹ்யேஷ ருத்ரஸ்தஸ்மை ருத்ராய நமோ அஸ்து||"

ருத்ரனை, எல்லாவற்றையும் அறிந்தவரும், உணர்ந்தவரும், எல்லாருக்கும் இஷ்ட பலன்களை கொடுப்பவரும், எல்லாரையும்விட பெரியவர், வேதமே சொல்கிறது, "தவ்யஸே" - எல்லாவற்றையும் விட , எல்லோரையும் விட‌ பெரியவர். பழமைக்கும் பழமை, புதுமைக்கும் புதுமை. அவரை, ஹ்ருதயத்திலிருந்து எப்படி சொல்லப் போகிறோம்? எப்பொழுது துதித்கப்போகிறோம்..?

சுத்தபாலீச பகவான்:- ப்ரளய காலத்தில் கர்ம வாசனைகளை காப்பாற்றும் ஈஸ்வரர்

ஸர்வதேவமய:- எல்லா தேவர்களையும் அங்கமாக கொண்டவர். 

ஜகத்:- உலகனைத்தும் தாமாகவே இருப்பவர்.

ஸ்தோத்திர லக்ஷணங்கள் ஆறு..

"நமஸ்காரஸ் ததாசீச்ச ஸித்தாந்தோக்தி:பராக்ரம:| விபூதி: ப்ரார்ததனாசேதி ஷட்விதம் ஸ்தோத்ர லக்ஷணம்||"

1. நமஸ்கரித்தல்

2. ஆசி கூறுதல்

3. சித்தாந்தத்தை எடுத்துரைத்தல்

4. பராக்கிரமத்தை புகழ்தல்

5. பெருமைகளை பேசுதல்

6. பிரார்த்தனை

1. நமஸ்கரித்தல் - ஓம் நம: ஆயிரம் பெயர்களுக்கும் முதலில் ஒங்காரமும் முடிவில் நம: என்ற பதமும் சேர்க்கப்பட்டு ஒவ்வொன்றும் மந்திர வடிவாய் அர்ச்சனையில் உபயோகப்படுவதால் "நமஸ்காரம்" என்ற முதல் லக்ஷணம் பொருந்தும்

2. ஆசி கூறுதல் - நம: என்று உபாசிப்பதால் ஆசைகள் எல்லாம் உபாசிப்பவனை வந்து நமஸ்கரிக்கும் என்று உபநிஷத்கள் சொல்ழதால் இரண்டாவது லக்ஷணம் "ஆசி" இதில் பொருந்தும்

3. சித்தாந்தம்:- இது ஸ்வர்கத்தை அளிப்பது, ஆரோக்கியத்தை ஆயுளை செல்வத்தை அளிப்பது, அசுரர்களோ, யக்ஷர்களோ, ராக்ஷசர்களோ பிசாசங்களோ ஒரு இடையூரும் செய்ய இயலாது என பலச்ருதி கூறுகிறது. "ப்ரபஞ்சோபசமம் சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே ஸ ஆத்மா ஸ விஜ்ஞேய:" ப்ரபஞ்சமற்றவன், சாந்தன், சிவன், இரண்டற்றவன், அவனையே துரீயமாக - விழிப்பு, தூக்கம், கனவு ஆகிய நிலைகளுக்கு அப்பாற்பட்டவன். அவனை ஆத்மா, அவனே அறியத்தகுந்தவன். இந்த சித்தாந்தம் இங்கு விளக்கப்படுகிறது. இது மூன்றாவது லக்ஷணம் "சித்தாந்தம்"

4. "மஹாதப: நீலகண்ட: கஜக்ன: மஹாவேக: மஹாந்தக: ஸுபந்தன விமோசன:" போன்ற நாமங்கள் நான்காவது லக்ஷணம் "பராக்கிரமத்தை" பேசுகின்றன

5. "பெருமைகளை பேசுதல் "விபூதிர் ப்பூதி ரைச்வர்யம்" என்று அமரம் கூறுகிறபடியால் சிவபெருமானின் விபூதிகளை அதாவது ஐஸ்வர்யத்தை பெரும்பாலான நாமாக்கள் விளக்குகின்றன. இது ஐந்தாவது லக்ஷணம் "பெருமைகளை பேசுதல்"

6. பிரார்த்தனை - ஆயிரம் கோடி பிறவிகளில் பலவகை யோனிகளில் பிறப்பவர்களில் சிலருக்கே சிவபெருமானிடம் உண்மையான பக்தி பிறக்கிறது. அப்படி தோன்றும் பக்தி வேறு நாட்டமில்லாது சிவபக்தியே வேண்டப்படுவது. இது ஆறாவது லக்ஷணம் "ப்ரார்த்தனை"

சிவ சஹஸ்ரநாமத்தை, ஆயிரம் நாமாக்களை நம: என்று அர்ச்சனையாக சொல்லி புஷ்பம் போடுவது ஒன்று. அதை நாமாவளியாக, பாராயணமாக செய்வது வேறு. எப்படி லலிதா மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வார்களோ (செய்வீர்களோ) அதேபோல் செய்ய வேண்டும்.

இதற்குப் பூர்வாங்க, உத்தராங்க ஸ்லோகங்கள் உண்டு. சுக்லாம்பரதரம் இருந்து ஆரம்பித்து, ஆசமனம், சங்கல்பம் செய்து, அங்கந்யாசம், கரந்யாஸம், பஞ்சபூத நியாசம், த்யான ஸ்லோகம் எல்லாம் சொல்லி, பாராயணம் செய்து முடிவில் தூப, தீப, நைவேத்தியம், ஆரத்தி எல்லாம் செய்தால் முழு பலன் நிச்சயம் உண்டு.

இவை இல்லாமலும், வெறும் பாராயணம் மட்டுமே கூட சொல்லலாம் அல்லது கேட்கலாம் கண்டிப்பாக பலன் உண்டு. பக்தியும் சிரத்தையும் தான் பிரதானம். வாரம் ஒருமுறை பாராயணம் செய்தோ அல்லது கேட்கவோ செய்து சிவனருள் பெறுவோம்..

சிவ ஸஹஸ்ரநாமம் ஸ்லோகங்கள்:-

பூர்வ பாகம் 39 ஸ்லோகங்கள் 

நாமாவளி 123 ஸ்லோகங்கள்

உத்திரபாகம் 32 ஸ்லோகங்கள்

Total 194 ஸ்லோகங்கள்

*****

சூத உவாச:-

"கோடி ஜன்மார்ஜிதை: புண்யை: சிவே பக்தி: ப்ரஜாயதே||"

பொருள்: - 

அநேகப் பிறவிகளில் சம்பாதிக்கப்பட்ட புண்ணியங்களால் தான் சிவபெருமானிடம் பக்தியானது உண்டாகின்றது. சிவ பூஜை செய்வதும் அப்படியே, எல்லோருக்கும் கிடைப்பதில்லை. 

"ஆயிரம் கோடி பிறவிகளில் பலவகையான யோனிகளில் பிறப்பவர்களில் சிலருக்கே பரமசிவனிடம் பக்தி ஏற்படும். அப்படி தோன்றும் சிலருக்கு, வேறு நாட்டமில்லாத சிவபக்தியே பிரதானமாக இருக்கும்.." - சிவ சஹஸ்ரநாம பாஷ்யம்..

"இவ்வாறு எம்மனிதர்கள் இப்புவியில் மஹாதேவ பக்தர்களோ அவர்கள் பிறவிச் சுழலுக்கு வசமாக மாட்டார்கள் என்பது எனது நிச்சயமான அபிப்பிராயம். இது எனது நிச்சயமான அபிப்பிராயம்..."

- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், சிவ சகஸ்ரநாமம், உத்திர பாகம், ஸ்லோகம் - 32

*****

"சிவ ப்ரஸாதேன வினா ந புத்தி: சிவ ப்ரஸாதேன வினா ந யுக்தி: சிவ ப்ரஸாதேன வினா ந ஸித்தி: சிவ ப்ரஸாதேன வினா ந முக்தி:"

விளக்கம்:-

சிவனருளால் தான் புத்தியோ, யுக்தியோ, ஸித்தியோ, முக்தியோ கிடைக்கும். சிவபெருமானால் தான் இதையெல்லாம் கொடுக்க முடியும்..

- ஸுத ஸம்ஹிதை

*****

"உலகில் எவனொருவன் எனது அருவுருவான சிவலிங்கத்தை (விக்கிரகத்துக்கு) சேவையும், பூஜையும் செய்கிறானோ, அது, அவனுடைய முற்பிறவியில் செய்த பூஜையின் பயனாக, அந்த மனப்பதிவுகளை தன்னுள் கொண்டிருப்பதால் தான், இப்பிறவியில் செய்ய முடியும்."

 - சிவ மஹா புராணம், வாயவீய ஸம்ஹிதை - உத்தர காண்டம்

*****

என்றும் சிவகைங்கர்யத்தில்..

ஜெய்குமார் சுகவனம்/ஶ்ரீதேவிஜெய்குமார்

Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்