சிவானந்தலஹரி அறிமுகம்

                              உ
                       சிவமயம் 
  திருச்சிற்றம்பலம்..அருணாசலம்..
                 "சிவஞான இதழ்"
   குரோதி, சித்திரை 18, (1.05.2024)

ஆதி சங்கரர் அருளிய சிவானந்தலஹரி

சிவானந்தலஹரி என்பது, சிவானந்த வெள்ளம்/சிவானந்த அலை என்பதாகும். இந்த சிவானந்த வெள்ளம், பரமேஸ்வரனின் தேகத்திலிருந்து உண்டானது. அது எல்லா நலன்களும் பெற்றுத் தருவது. பாபங்களை அழிக்க வல்லது. மேலும் இதனால் ஈஸ்வரனின் லீலா வினோதங்களை தெரிந்து கொள்ளலாம். 

நாரத பக்தி சூத்திரம் சொல்லும் 11 வகையான பக்தி வடிவங்கள் - இடைவிடாது நினைப்பது, சேவை செய்வது, நட்பு கொள்வது, காதலாகி கசிவது, குழந்தை போல் நேசிப்பது, தன்னை அர்பணம் செய்வது, இடைவிடாது நினைப்பது, தன்மயமாகிவிடுவது, பூஜை செய்வது, ரூபத்தை தியானிப்பது, பிரிவாற்றாமை, இவை எல்லாம் சிவானந்தலஹிரியில் விவரிக்கப்படுகிறது. 

பொதுவாக நம்முடைய மனம் ஒரு காந்தம் ஊசியும் போல , மரத்தை ஒரு கொடி சுற்றிக் கொள்வது போல,, சமுத்திரத்தை நதியும் எவ்வாறு நாடுகின்றனவோ, அவ்வாறு மனதின் நாட்டம் இயற்கையாகவே இறைவனிடம் இருந்தால் அதுதான் பக்தி எனப்படும். இந்த பக்தி முக்குணங்களைக் கடந்தது, வினாடிதோறும் வளர்வது, இடைவிடாத தொடர்புடையது, அனுபவத்தாலேயே உணரப்படுவது. இப்படிப்பட்ட பக்தியால் குறைவெல்லாம் நிறைவாகும்.

கண்ணப்ப நாயனார் பக்தி, "கண்ணப்பரின் மிதியடி சிவனுக்குப் பரிசுத்தமான கூர்ச்சம் போலும், வாயிற் கொண்டு வந்து கொப்பளித்த நீர் அபிஷேகமாகவும், ருசிபார்த்த இறைச்சி நைவேத்யமாகவும் ஆயின. காட்டில் வசித்த வேடன் பக்தசிரேஷ்டன் ஆகிறான். பக்தி எதைத்தான் செய்யாது"? என்கிறார் சங்கர பகவத்பாதாள். நால்வர் பக்தியைப் போல்.

நீ என்ன செய்கிறாய், எதை அர்பணம் செய்கிறாய் என்பது கேள்வியன்று, எந்த பாவனையுடன் செய்கிறாய் என்பதைதான் இறைவன் கவனிக்கிறான். பக்திக்கு ஆட்பட்டு தான் இறைவன் அருள் வழங்குகிறார்.

சிவன் கையில் பொன் மலையும், குபேரனும், கற்பக காமதேனுவும், சிந்தாமணியும், சிரசில் புஷ்பம் போல சந்திரனும், திருவடியில் எல்லாம் மங்களங்களும் இருக்கையில், நாம் அவனிடம் இல்லாத ஒன்றையா அளிக்க இயலும்? சேவையோ, நமஸ்காரமோ, ஸ்தோத்ரமோ, பூஜையோ, தியானமோ, கதை கேட்பதோ, தரிசிப்பதோ..இவைகள் போதாதா? 

ஸாரூப்யம் என்னும் முக்தி நிலை உன்னுடைய பூஜையிலும், ஸாமீப்யம் பஜனை செய்வதிலும், ஸாலோக்யம் பக்தர்களுடன் கூட இருப்பதிலும், ஸாயுஜ்யம் தியானத்திலும் கிடைக்கிறது (28 ஆவது ஸ்லோகம்). 

கொஞ்ச காலம் அர்ச்சனை, கொஞ்ச காலம் வந்தனம், கொஞ்ச காலம் தியானம், ஸமாதி, கொஞ்சம் சிவ கதைகள் கேட்பது, கொஞ்சம் தரிசனம், கொஞ்சம் துதி, இப்படி மனதை சிவனிடம் அர்பணம் செய்து எவன் சந்தோஷமாக வாழ்கிறானோ அவன், இங்கு உடல் வாழும்போதே முக்தி எய்துவான் - (81 ஆவது ஸ்லோகம்).

மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவானே, ஸ்ரீ பரமேஸ்வரனைப் பற்றி பாண்டவர்களுக்கு விரிவாக உபதேசிக்கிறார். பீஷ்மர் எல்லா தர்மங்களையும் சொல்லும்போது, சிவபெருமானைப் பற்றிப்பேசதனக்குத் தகுதியில்லையென்று கூறி, ஸ்ரீ கிருஷ்ணரையே விளக்கும்படி பிரார்த்திக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணர், உபமன்யு மஹரிஷியிடமிருந்து தான் பெற்ற சிவதீக்ஷை, சிவஸஹஸ்ரநாம உபதேசம் முதலியவற்றைச் சொல்லி, தான் செய்த கடும்தபஸ், கடைசியில் பெற்ற சிவ பார்வதி தரிசனம், அவர்கள் அளித்த வரன்கள் இவற்றை விவரிக்கிறார். அங்கு ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ பரமேஸ்வரனின் எளிதாக சந்தோஷமடையும் பாங்கைச் சொல்லி,

''பிரம்மத்வம் கேசவத்வம் வா சக்ரவம் வா ஸுனா: ஸஹ |த்ரைலோக்யஸ் யாதிபத்யம் வா துஷ்டோ ருத்ர: ப்ரயச்சதி||"

"பிரம்மா, விஷ்ணு, இந்த்ரன், தேவர் உள்பட மூன்று லோகங்களின் அதிபதி ஆகிய பதவிகளை, சிவபெருமான் ஸந்தோஷப்பட்டு அளித்துவிடுகிறார்" என்கிறார்.

ஸ்ரீபரமேஸ்வரன் அஷ்டமூர்த்தி என்று சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, பஞ்சபூதங்கள் -பூமி, நீர், அக்கினி, வாயு, ஆகாசம், சூரியன், சந்திரன் உபாஸிக்கும் யஜமானன் என்று இந்த எட்டு ஸ்வரூபங்களாக அவரே விளக்குகிறார். காண்பதெல்லாம் சிவனே என்கிற மனப்பான்மையை இது வளர்க்கும்.

"சிவ, சிவ" என்றால் எல்லா பாவங்களும் விலகி. புனிதமடைவோம் என்பதை சாஸ்திரம். "யத்கிருத்யம் தந்நக்ருதம், அக்ருத்யம் க்ருத்யவத் யதாசரிதம், உபயோ: ப்ராயஸ்சித்தம் சிவ, தவ நாம, த்வ்யக்ஷரம், சிவாய நம" அதாவது சாஸ்திரம் செய் என்று ஆணையிட்டதை செய்யாதது, செய்யக்கூடாது என்று சொன்னதை விருப்பத்துடன் செய்வது. இந்த இரு பாவங்களின் ப்ராயச்சித்தம், சிவபெருமானே, தங்கள் இரண்டெழுத்து மந்திரமாகிய “சிவ” என்ன நாமமே.

சிவபெருமானுடைய பாதாரவிந்த அர்ச்சனை, த்யானம், கதைகள் கேட்பது, துதிப்பது இவற்றில் மனதை அர்ப்பித்தால் ஜீவன் முக்தன் ஆகிறான் என்று உறுதியாக கூறுகிறார் ஶ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள்.
சிவானந்தலஹரி படிக்கும் போது, இறைவனுடைய திருவடியை தொட்ட இன்பம் தோன்றும். 

ஸௌந்தர்யலஹரியிலும், சிவானந்தலஹரியிலும் ஆச்சாரியர் இறைவனைத் தாயாகவும் தந்தையாகவும் எண்ணிப் பலவிதங்களில் போற்றியுள்ளார். ஒரு குழந்தை தனது தாய்தந்தையர்களிடம் எப்படிப் பிடிவாதம் பிடிக்குமோ அப்படி அவர் ஒரு குழந்தையாகவே ஆகி, இறைவனிடம் பிடிவாதம் பிடிக்கிறார். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் போன்று, சிவானந்தலஹரியில் ஆச்சாரியர் சிவபெருமானிடம் பலவாறு பேசுகிறார். பக்தியின் விளக்கமாகத் திகழ்வது இந்த நூல்.

சிவானந்தலஹரி படிப்பது, பாராயணம் செய்வது சர்வாபீஷ்டங்களையும் அருளும், பரம பவித்ரமான ஸ்தோத்திரம். இது இல்லங்களில் இருப்பது நம் குடும்பத்துக்கு ஷேமமாகும்.

என்றும் சிவகைங்கர்யத்தில்..

ஜெய்குமார் சுகவனம்/ஶ்ரீதேவிஜெய்குமார்..

திருச்சிற்றம்பலம் 🙏

Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்