சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 1 - 10 விளக்கத்துடன்

ஸ்லோகம் - 1 - பரமசிவன் பராசக்தி நமஸ்காரம்

"கலாப்யாம் சூடலாங்க்ருத ஸசிகலாப்யாம் நிஜதப: பலாப்யாம்| பக்தேஷு ப்ரகடித பலாப்யாம் பவதுமே| சிவாப்யாம் அஸ்தோக த்ரிபுவன சிவாப்யாம் ஹ்ருதிபுன:பவாப்யாம்| ஆனந்த ஸ்புரத் அனுபவாப்யாம் நதிரியம்||"

"பரமசிவனுக்கும் பராசக்திக்கும் நமஸ்காரம்"

"சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும் ந சேதேவம் தேவோ ந கலு: குசல: ஸ்பந்திது மபி: அதஸ்த்வா மாராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபிரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய ப்ரபவதி" - சௌந்தர்யலஹரி 

அந்த ஸ்லோகத்தில், "கலு" என்ற வார்த்தை வரும், இதற்கு அர்த்தம், இது நிச்சயம், சந்தேகம் வேண்டாம் என்பதாகும்.

கலாப்யாம் - கலை வடிவாகியவர்களும்,  
சூடாலங்க்ருத சசிகலாப்யாம் - சந்திரக் கலையைத் தலையில் அணிந்தவர்களும், ஒருவருக்கொருவர் தவத்தின் பயன் வடிவாகியவர்களும் 
பக்தேஷு - அடியார்களிடத்தில் (பேதம் கூடாது சிவ சக்தி சேர்ந்து பூஜை செய்வது பூரண பலன்). 
ப்ரகடித பலாப்யாம் - அருள் பயனை விளங்கச் செய்பவர்களும்
அஸ்தோக தரிபுவன சிவாப்யாம் -  மூவுலகிற்கும் குறைவற்ற மங்களங்களை அருள்பவர்களும் 
ஹ்ருதி - இருதயத்தில் 
புனர் பவாப்யாம் - நினைக்குந்தோறும் புதிது புதிதாய்த் தோன்றுபவர்களும், ஆனந்த ஸ்புரத் அனுபவாப்யாம் - ஆத்மானுபவத்தால் ஆனந்தக்களிப்புடையவர்களுமாகிய 
சிவாப்யாம் - சிவ சக்தி ஐக்கிய வடிவினர்க்கு 
மே - என்னுடைய 
இயம் - இந்த 
நதி: நமஸ்காரம் 
பவது - உரித்தாகட்டும்.

மங்களாசரணமாக அமையும் இந்த முதல் சுலோகத்தின் முதலெழுத்தாகிய 'க' தேவியின் பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் முதலெழுத்து ஆகையால் பராசக்தியின் தியானமும் அதனால் பரமமங்களமும் அடையப் படுகிறது. "அத" சிவ கீதை ஆரம்பம் 

"ககாரரூபா கல்யாணீ கல்யாண குணசாலினீ|"

-லலிதா த்ரிசதி

பொருள்: இது சிவ சக்தி துதியாக அமைந்துள்ளது. ஆனந்தமாக மங்களகரமாக அமையும் இந்த முதல் ஸ்லோகம் "க" என்ற முதல் எழுத்துடன் ஆரம்பம், இது தேவியின் பஞ்சதசாஷரியில் மந்திரத்தின் 13 எழுத்துக்களின் முதல் எழுத்து. "ககாரரூபா கல்யாணி கல்யாண குணசாலினீ" - லலிதா த்ரிசதி தொடங்குகிறது. கலை வடிவாகியவர்களும், சந்திர கலையை தலையில் அணிந்தவர்களும், பார்வதியின் தவப்பயன் பரமசிவன், பரமசிவனின் தவப்பயன் பார்வதி, அடியார்களிடம் திருவருளை தருபவர்களும், மூவுலகிற்கும் மங்களகளை அருள்பவர்களும், எப்போது நினைத்தாலும் அவ்வப்போது புதிது புதிதாக தோன்றுபவர்களும், ஆத்ம அனுபவத்தில் ஆனந்த களிப்பு உடையவர்களும். அந்த சிவ சக்தி ஐக்கிய வடிவினர்களுக்கு இந்த துதி நமஸ்காரம் உரியதாகட்டும். சிவ சக்தி ஐக்கிய அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தின் கருத்து. சிவ சக்தியைப் (பார்வதியை) பிரிக்கமுடியாது என்பதாம். ஓம் நமசிவாய, ஓம் ஹரீம் நமசிவாய 

"மாதா தேவீ பிந்து ரூபா நாதருப: சிவ: பிதா|| பூஜிதாப்யாம் பித்ருப்யாம் து பரமாநந்த ஏவ ஹி| பரமாநந்த லாபார்த்தம் சிவலிங்கம் ப்ரபூஜயேத்|| ஸா தேவீ ஜகதாம் மாதா ஸ ஸிவோ ஜகத: பிதா| பித்ரோ: ஸுஷ்ரூஷகே நித்யம் க்ருபாதிக்யம் ஹி வர்த்ததே||"

பொருள்:
இவ்வுலகமே நாதபிந்து சொரூபமே. பிந்து என்பது சக்தி தத்துவம். நாதம் சிவதத்துவம். இவ்வுலகு சிவ சக்தி இணைந்த உருவம். நாதம் பிந்துவுக்கு ஆதாரம், பிந்து உலகிற்கு ஆதாரம். பிந்துவும் நாதமும் (சிவமும் சக்தியும்) இவ்வுலகிற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. பிந்துவதும் நாதமும் ஒருகிணைந்த அனைத்தும் சிவ சொரூபமே. ஆதாரத்தில்தானே ஆதேயமானது லயத்தை அடையும். இதை சகலீகரணம் என்பர். இந்த சகலீகரணத்தின் இருப்பில் தான் படைப்புத் தொழில் தொடங்கி இவ்வுலகம் தோன்றியது. சிவலிங்க திருமேனி பிந்துவும் நாதமும் இணைந்த சொரூபம். பிந்து - தேவி. நாதம் - சிவன். சிவமும் சிவையும் இணைந்த சொரூபமே சிவலிங்க திருமேனி. ஆகவே பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெற சிவலிங்க பூஜை செய்ய வேண்டும். பிந்து ரூபமான உமா(பார்வதி) தாய், நாத ரூபமான சிவன் தந்தை. தாய் தந்தையரது பூஜையே பரமானந்தத்தை அளிக்தும். ஆகவே பரமானந்தத்தை பெற சிவலிங்க பூஜை செய்ய வேண்டும். சிவலிங்க திருமேனியே எமக்கு தாயும் தந்தையும் என்ற எண்ணத்தோடு பூஜிக்க வேண்டும்.
**********
ஸ்லோகம் - 2 - சிவானந்த வெள்ளம்

"கலந்தீ ஸம்போ த்வத் சரித ஸரித:கில்பிஷரஜோ| தலந்தீ தீகுல்யா ஸரணீஷு பதந்தி விஜயதாம்| திஸந்தீ ஸம்ஸார ப்ரமண பரிதாப உபஸமனம்| வஸந்தீ மத்சேதோ ஹ்ருத புவி சிவானந்தலஹரி||"

சம்போ - சம்புவே! 
த்வச்சரித ஸரித - உமது சரித்திரமாகிய நதியிலிருந்து 
கலந்தீ - பெருகுவதாயும், 
கில்பிஷரஜ: - பாவமாகிற புழுதியை 
தலந்தீ - போக்குவதாயும், 
தீகுல்யாஸரணிஷு - புத்தி எனும் வாய்க்கால் வழிகளில் 
பதந்தீ - பாய்ந்து செல்வதாயும் 
ஸம்ஸார ப்ரமண - பிறவிச் சுழலில் உண்டாகும் 
பரிதாபோபசமனம் - பெருந்துன்பத்திற்கு சாந்தியை 
திசந்தீ - அளிப்பதாயும் 
மத் சேத: - எனது சித்தமாகிய 
ஹ்ரதபுவி -  மடுப்பிரதேசத்தில் 
வஸந்தீ - வந்து தேங்குவதாயும் உள்ள 
சிவானந்தலஹரீ - சிவானந்த வெள்ளம் 
விஜயதாம் - வெற்றியுடன் விளங்கட்டும்.

சிவானந்தலஹரீ - இச்சொல் நூலுக்குப் பெயரைத் தருகிறது. அதாவது, சிவானந்த வெள்ளம் பக்தனுடைய இருதயமாகிய மடுவில் தங்கி, அதினின்று பெருகி, புத்தி எனும் கால்வாய் வழியாகப் பாய்ந்து, உலகின் துன்பத்தைப் போக்கி இன்பம் பயப்பதாக ஆகிறது.

பொருள்: சிவபெருமானே, சிவசரிதம் எனும் புனித நூலில் பொங்கிப் பெருகும் சிவானந்த வெள்ளம், என் பாவங்களை போக்கி, புத்தி எனும் வாய்க்கால் வழியே பாய்ந்து பிறவிகள் தோறும் மாறி மாறி வருகின்ற துன்பங்களை நீக்கி என் சித்தமாகிய ஏரியில் நிலைத்து தங்கி இருக்கட்டும். பரமனின் திருவிளையாடல்களை கேட்பதாலும், படிப்பதாலும் நமது மனமாசுகள் மறைகின்றன. நமக்கு நிரந்தரமாக சிவனருள் சித்திக்கும். பிறவிச்சூழலில் இருந்து விடுபட சிவ பூஜையும், தியானமும் அவசியம்.
********
ஸ்லோகம் - 3 - சிவ வடிவ(லீலா) த்யானம்

"த்ரயீவேத்யம் ஹ்ருதயம் த்ரிபுரஹர மாத்யம் த்ரிநயனம் ஜடாபாரோதாரம் சலதுரக ஹாரம் ம்ருகதரம்| மஹாதேவம் தேவம் மயிஸதய பாவம் பசுபதிம் சிதாலம்பம் ஸாம்பம் சிவமதி விடம்பம் ஹ்ருதிபஜே||"

த்ரயீ வேத்யம்  - மூன்று வேதங்களால் அறியத்தக்க வரும். 
ஹ்ருத்யம் - மனதிற்கு இனியவரும். 
(த்ரிபுரஹரம்) - முப்புரங்களை அழிப்பவரும். 
ஆத்யம் - அனைத்திற்கும் முதல்வரும். 
த்ரிநயனம் - மூன்று கண்களை உடையவரும். 
ஜடாபாரோதாரம் - சடைகளைத் தாங்குவதால் கம்பீரமான தோற்றம் உடையவரும். 
சலத் - அசைகின்ற. 
உரகஹாரம் - பாம்பை மாலையாக உடையவரும். 
மருகதரம் - மானைக் கையில் ஏந்தியவரும். 
மஹாதேவம் - தேவர்களில் பெரியவர், சிறந்தவரும். 
தேவம் - ஸ்வயம் பிரகாசமானவரும். 
மயி - என்னிடத்தில். 
ஸதயபாவம் - தயையுடன் கூடிய நோக்கமுடையவரும். 
பசுபதிம் - ஜீவர்களுக்கு நாயகரும். 
சிதாலம்பம் - அறிவிற்கு உறைவிடமும். 
ஸாம்பம் - அம்பிகையுடன் கூடியவரும். 
அதிவிடம்பம் - நடிப்புத் திறமை மிகுந்தவருமாகிய. 
சிவம் - பரமசிவனை. 
ஹ்ருதி - இருதயத்தில். 
பஜே - தியானம் செய்கின்றேன்.

பொருள்: த்ரயீ வேத்யம் ரிக், யஜூஸ், ஸாமம் மூன்றும் சேர்ந்து த்ரயீ. சிவன் மூன்று வேதங்களால் அறியத்தக்கவர். மனதிற்கு இனியவரும். முப்புரங்களை அழித்தவரும். அனைத்திற்கும் முதல்வரும். மூன்று கண்களை உடையவரும். சடைகளை தாங்குவதால் கம்பீரமான தோற்றம் உடையவரும். அசைகின்ற பாம்பை மாலையாக உடையவரும். மானை கையில் ஏந்தியவரும, தேவர்களில் சிறந்தவரும், அதனால் மஹாதேவரும். ஸவயம் பிரகாசமாய் இருப்பவரும். என்னிடத்தில் தயை வைக்கும் உள்ளம் படைத்தவரும். எல்லா ஜீவர்களின் தலைவர். அறிவு ஞானத்தின் உறைவிடம். அம்பிகையுடன் கூடியவரும். நடிப்புத் திறன் உடையவரும் ஆகிய அத்தகைய சிவபெருமானை இதயத்தில் நினைக்கிறேன். தொழுகிறேன்.. தியானம் செய்கிறேன். த்ரயீவேத்யம் (ரிக் யஜுர் சாம) மூன்றும் த்ரயீ. எவன் ஒருவன் வேத மந்திரங்களால் சிவனை அறியவில்லையோ, அவனுக்கு அந்த மந்திரங்களால் என்ன பயன்?

"த்ரிபுரஹரம்" விளக்கம் - ஸ்தூலாதி சரீரத்ரய ஹரம், ஸ்தூலம், ஸூக்ஷ்மம், காரணம் ஆகிய மூன்று தேகங்களையும் அழித்து விதேஹ முக்தியை அளிப்பவரை. ஆணவம் கன்மம் மாயை. பசு பதி. தமஸ் ரஜோ ஸத்வ குணங்கள் 

புராணக் கதை - தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற அசுரர்கள் மயனால் நிர்மாணம் செய்து கொடுக்கப்பட்ட மூன்று அதிசயமான பட்டணங்களில் வாழ்ந்து வந்தனர். அவை இரும்பாலும் வெள்ளியாலும்
பொன்னாலும் ஆக்கப்பட்டு ஆகாயத்தில் பறந்து செல்லக்கூடியவையாக இருந்தன. மூன்றும் ஆயிரம் வருஷத்துக்கு ஒருமுறை ஒன்று சேரும். அப்போது ஒரே பாணத்தால் அடித்தால்தான் முப்புரங்களை ஜயிக்கலாம். அசுரர்கள் தனித்தனியாகப் பறந்து சென்று பல ஊர்களின் மேல் இறங்கி அவற்றைப் பாழாக்கி வந்தனர். தேவர்கள் பரமசிவனிடம் முறையிட்டனர். பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களைச் சக்கரமாகவும், நாலு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரம்மாவை ஸாரதியாகவும், மேருமலையை வில்லாகவும், நாணாகவும், விஷ்ணுவை ஆதிசேஷனை அம்பாகவும் கொண்டு பரமசிவன் போருக்குச் சென்றார். தேர் புதைந்தபோது விஷ்ணு விருஷப உருவங்கொண்டு அதைக் கொம்பால் தூக்கினார். சிவன் குதிரை மேல் ஒரு காலும் விருஷபத்தின் மேல் ஒரு காலுமாக நின்று முப்புரத்தை நோக்கினார். அப்போது முப்புரமும் ஒன்றாய்ச் சேரவே சிரித்தே எரித்து விட்டார்.

ஸ்ரீ ருத்ரம்
"அவதத்ய தனுஸ்த்வக்ம் ஸஹஸ்ராஷ சதேஷுதே.....பவ" 

பொருள்:- "அப்பனே உன் கையில் உள்ள வில்லின் நாணை அவிழ்த்து, தளர்த்தி விடு’’ என்று ஈசனை நோக்கி சொல்கிறது வேதம். ஏன்? அவன் வில்லில் நாண் ஏற்றியும் பயன் இல்லை என்பதால் அல்ல, முப்புரத்தையும் எரிக்க ஈசன் மேருவை வில்லாக வளைத்தான். ஆயினும் அது பயன் படவில்லையே. சிரித்தே முப்புரத்தையும் அழித்து ஒழித்து விட்டானே. ஆக்கவும் அழிக்கவும் அவன் குறு நகையே போதும் அல்லவா? அதான்"
***********
ஸ்லோகம் - 4 - ஏக பக்தி 

"ஸஹஸ்ரம் வர்தந்தே ஜகதி விபுதா க்ஷூத்ர பலதா ந மன்யே ஸ்வப்னே வா தத் அனுஸரணம் தத்க்ருத பலம்| ஹரி ப்ரம்மா தீனாமபி நிகட பாஜாம் அஸுலபம் சிரம் யாசே சம்போ சிவ தவ பதாம்போஜ பஜனம்||"

(ஜகதி) - உலகில் 
(க்ஷுத்ரபலதா:) - அல்பப் பயனைக் கொடுக்கின்ற 
(விபுதா) - தேவர்கள் 
(ஸஹஸ்ரம்) - ஆயிரக்கணக்காக 
(வர்த்தந்தே) - இருக்கிறார்கள். 
(ஸ்வப்னே வா) - கனவிலுங்கூட 
(தத் அனுஸரணம் ) - அவர்களை வழிபடுதலையும் 
(தத் க்ருதபலம்) - அதனால் ஏற்படும் பயனையும் 
(ந மன்யே) - நான் கருதமாட்டேன். 
(சம்போ) - சம்புவே! 
(ஹரி ப்ரஹ்மாதீனாம் அபி) - விஷ்ணு பிரம்மா முதலியவர்களுக்குங்கூட (நிகடபாஜாம்) - அருகாமையில் இருந்த போதிலும் 
(அஸுலபம்) - அடைதற்கரிதான 
(தவ) - உம்முடைய 
(பதாம்போஜ பஜனம்) - திருவடித்தாமரையைத் தொழுவதையே 
(சிரம் ) -  என்றும் 
(யாசே) - வேண்டுவேன்.

திருவாசகம்:-
"தொழுவேனோ பிறரைத் துதிப்பேனோ எனக்கோர் துணையென நினைவோ சொல்லாய்"

பொருள்: உலகில் அல்ப பயனை கொடுக்கும் தேவர்கள் பலர் இருக்கிறார்கள். கனவிலும் கூட அவர்களை வழிபடுதலையும் அதனால் ஏற்படும் பயனையும் நான் கருதமாட்டேன். சம்புவே! விஷ்ணு பிரம்மா உன்னுடைய மகிமையை அறிந்தார்களா? உம்முடைய திருவடிகளை தொழுவதையே என்றும் நான் வேண்டுவேன்.

திருமந்திரம்:-

"சிவனோடொக்குந் தெய்வந்தேடினும் இல்லை. அவனொடொப்பர் இங்கு யாவரும் இல்லை. பவனங்கடந்தன்று பொன்னொளி மின்னுந்தவனைச் சடைமுடித் தாமரை யானே"

சிவ மஹா புராணம் - வித் ஸம் 

எந்தெந்த தேவதைகள் எவ்வாறெல்லாம் வரிசையாக தோன்றினார்களோ.. பூஜை செய்தார்களோ, அப்படியே லயம் அடைகிறார்கள். ஆனால் ருத்ரனை சிவனை பூஜிப்பவர்கள் நேரடியாக உடனே ருத்ரனிடம் லயம் அடைகிறார்கள்

"யாதொரு தெய்வம் கொண்டீர்
அத்தெய்வ மாகிஆங்கே
மாதொரு பாகனார்தாம் 
*****
ஸ்லோகம் -5 - கருணையை வேண்டுதல்..

"ஸ்ம்ருதௌ சாஸ்த்ரே வைத்யே சகுன கவிதா கான பணிதௌ| புராணே மந்த்ரே வா ஸ்துதி நடன ஹாஸ்யேஷ்வசதுர:| கதம் ராக்ஞாம் ப்ரீதிர்பவதி மயி கோஹம் பசுபதே பசும் மாம் ஸர்வஞ்ஜ ப்ரதித க்ருபயா பாலய விபோ||"

(ஸ்ம்ருதௌ) - மனுஸ்மிருதி முதலிய தர்ம நூல்களிலும் 
(சாஸ்த்ரே) - சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம்,சந்தஸ், ஜோதிஷம் முதலிய சாஸ்திரங்களிலும் (வைத்யே) - வைத்திய நூல்களிலும் (சகுன கவிதா கான பணிதௌ) - சகுனம், கவித்துவம், சங்கீதம் முதலியவற்றால் பிறரைக் களிக்கச் செய்வதிலும்
(புராணே) - புராணப் பிரவசனம் செய்வதிலும் 
(மந்த்ரேவா) - மந்திரப் பிரயோகங்களிலும் 
(ஸ்துதி நடன ஹாஸ்யேஷு) - புகழ்தல், நடித்தல், விகடம் பேசுதல் ஆகியவற்றிலும் 
(அசதுர:) - நான் திறமையற்றவன். (ராஜ்ஞாம்) - அரசர்களுக்கு 
(ப்ரீதி:) - அன்பு 
(மயி) - என்னிடத்தில் 
(கதம்) - எவ்வாறு 
(பவதி) - உண்டாகும்? 
(பசுபதே) - உயிர்களின் தலைவரே! (ஸர்வஜ்ஞ) - எல்லாமறிந்தவரே! 
(ப்ரதித) - புகழ்பெற்றவரே! 
(விபோ) - எங்கும் நிறைந்தவரே! 
(க: அஹம்) - நான் எதில் சேர்ந்தவன்? (பசும்) - ஒன்றுமறியாத பிராணியாகிய (மாம் ) - என்னை 
(க்ருபயா) - கருணையால் 
(பாலய) - காப்பாற்றியருளும்.

பொருள்: மனுஸ்மிருதி, சிஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஷம் முதலிய சாஸ்திரங்களிளும், வைத்ய நூல்களிலும், சகுனம், கவித்வம், சங்கீதம் முதலியவற்றால் பிறரைக் களிக்கச் செய்வதிலும். புராணப் பிரவசனம் செய்வதிலும், மந்திர பிரயோகம், நடனம், புகழ்தல், நடித்தல், விகடம் ஆகியவற்றில் நான் திறமையற்றவன். அரசர்களுக்கு அன்பு எவ்வாறு என்னிடத்தில் உண்டாகும்? உயிர்களின் தலைவரே, எல்லாமறிந்தவரே புகழ் பெற்றவரே எங்கும் நிறைந்தவரே, நான் எதில் சேர்ந்தவன்? என்னை காப்பாற்றி அருளும்.

இவருக்கு ஒன்றும் தெரியாது என்று இல்லை, நமக்காக பாடுகிறார்..

மாணிக்கவாசகர் - "நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு தாயில்.."

"அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே..!"

நால்வர் பக்தி:-
  • திருஞானசம்பந்தர் - தந்தை - குழந்தை
  • சுந்தரமூர்த்தி நாயனார் - நட்பு, தோழமை
  • அப்பர் பெருமான் - தாசன், எஜமான் வேலை ஆள்
  • மாணிக்கவாசகர் - குரு சிஷ்யன்
******
ஸ்லோகம் - 6 - தர்க்கம் பயனற்றது சிவ பாதமே சுகம்

"கடோ வா ம்ருத பிண்டோப்யணுரபி ச தூமோக்னி அசல: பயோ வா தந்துர்வ பரிஹரதி கிம் கோர சமனம்| வ்ருதா கண்டஷோபம் வஹஸி தரஸா தர்க்வசஸா பதாம்போஜம் சம்போர் பஜ பரம ஸௌக்யம் வ்ரஜ ஸ்துதி:||"

(கட: வா) குடம் என்றும் 
(ம்ருத்பிண்ட: அபி) - மண்கட்டி என்றும் (அணு : அபி ச) - அணு என்றும் 
(தூம்:) - புகை என்றும் 
(அக்னி:) - நெருப்பென்றும் 
(அசல :) - மலை என்றும் 
(பட:வா) - துணி என்றும் 
(தந்து: வா) - நூல் என்றும் 
(வ்ருதா) வீணாக 
(தர்க்க வசஸா) - தர்க்க பரிபாஷைச் சொற்களால் 
(கண்டக்ஷோபம்) - தொண்டையின் வரட்சியை 
(தரஸா ) - ஆக்ரோஷத்துடன் 
(வஹஸி) - ஏற்றுக்கொள்ளுகிறாய். (கோரசமனம்) - கொடிய யமனை (பரிஹரதி கிம்) - இது விலகச் செய்யுமா? (சம்போ:) - பரமசிவனுடைய (பதாம்போஜம்) - திருவடித் தாமரையை (பஜ) - தியானம் செய். 
(ஸுதீ:) - நல்ல புத்தி படைத்தவனே! (பரமஸௌக்யம் வ்ரஜ) - பேரின்பத்தை நாடு.

இந்தத்துதியில் தர்க்கத்தினாலும், குதர்க்க வாதத்தினாலும், யம உபாதையை விலக்க முடியாது. சிவனுடைய திருவடித் தாமரையைப் பணிந்து பேரின்பம் பெறு என்கிறார்.

குடம் என்றும், மண்கட்டி என்றும், அணு என்றும், புகை - நெருப்பு என்றும், மலை என்றும், துணி-நூல் என்றும் வீணாக தர்க்க குதர்க்கமான சொற்களால் தொண்டை காய கத்தினால் யாது பயன்? இது யமவேதனையை விலகச் செய்யுமா! நல்ல புத்தியுடன் யரமசிவனுடைய திருவடியை தியானம் செய்து பேரின்பம் பெற்று திகழலாமே என்கிறார் ஆதிசங்கரர். 

குடம் மண்ணால் செய்தது, ஆக இரண்டும் ஒன்றே, புகை இருந்தால் அங்கு நெருப்பு இருக்க வேண்டும். துணியா - அது நூலில் ஆனதுதான், தங்கம் உண்டு என்றெல்லாம், தர்க்கத்தில் என்ன பிரயோஜனம்? அத்தகைய சர்ச்சைகள், தான் யாதும் அறிந்தவன், பல உபநிடத வேத சாஸ்திரங்களை பெருமை யுடன் பறைசாற்றுவதில் யாது பயன்? பிறந்த ஒவ்வொருவனும், ஒருநாள் யமனால் பீடிக்கப்பட்டு, அழிய நேருமே, அதற்கு ஒரு வழி, மனச்சாந்தி பெற வழி தேட வேண்டாமா? அதற்கு ஒரே வழி, சிவபெருமானிள் தாளைப் பணிவதே என்று ஆதிசங்கரர் வலியுறுத்துகிறார்.

பிரமாணங்கள்:-
பிரத்தியட்சம், அனுமானம் அல்லது யூகம், அனுபவ வாக்கு, உபமானம், அர்த்தாபத்தி, அனுபலப்தி

சிவ மஹிம்னா ஸ்தோத்திரம் - புஷ்பதந்தர் 

"அறிவுச் சுமையால், வீணே வாதிடும் பெருமை ஏற்புடையதாக இல்லை. எனவே அறிவுடன் வாதிடத் தெரியாதவன் என உலகம் நினைத்தாலும் பரவாயில்லை, இக்குழப்பத்தில் ஈடுபடாமல், இறைவனை பணிந்து துதிப்பதில் மட்டுமே, தமது வாழ்வை அர்பணிக்கத் தாம் வெட்கப்படவில்லை என்றும் அப்படி அடிபணிந்து இறைவனைத் துதிக்கின்ற உறுதியிலிருந்து தாம் மாறப் போவதில்லை.."

செல்வத்தினால் எப்படி செருக்கு வருமோ, அது போலவே அறிவும் ஒரு சுமையே! அதுவும் செருக்கினை வளர்க்கும் ஒரு குறைதான்! எனவே அறிவையும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துகின்ற பக்குவம் நமக்கு வரவேண்டும்...

"அறிந்து அடங்குதல் ஞானம், அடங்கி அறிதல் பக்தி"
*****
ஸ்லோகம் - 7 - செயல் எல்லாம் சிவனுக்கே..

"மனஸ்தே பாதாப்ஜே நிவஸது வச: ஸ்தோத்ர பணிதௌ கரௌ சாப்யர்ச்சாயாம் ச்ருதிரபி கதாகர்ணன-விதௌ| தவ த்யானே புத்திர் நயனயுகளம் மூர்த்தி-விபவே பரக்ரந்தான் கைர்வா பரமசிவ ஜானே பரமத:||"

(பரமசிவ) - பரமசிவனே! 
(மன:) - மனது 
(தே) - உம்முடைய 
(பாதாப்ஜே) - திருவடித் தாமரையிலும் (வச:) - வாக்கு 
(ஸ்தோத்ர பணிதெள) - உமது புகழைப் பேசுவதிலும் 
(கரெள ச) - இருகைகளும் (அப்யர்ச்சாயாம்) - உமது அர்ச்சனையிலும் 
(ச்ருதி: அபி) - காது 
(கதாகர்ணன் விதௌ) - உமது கதைகளைக் கேட்பதிலும் 
(புத்தி:) - புத்தியானது 
(தவ) - உம்முடைய 
(த்யானே) - தியானத்திலும் 
(நயனயுகளம்) - இரு கண்களும் 
(மூர்த்தி விபவே) - உமது திருமேனி அழகிலும் 
(நிவஸது ) - நிலைபெறட்டும் 
(அத: பரம் ) - அதற்குப்பின் 
(கை: வா) - எவ்வாற்றால் 
(பரக்ரந்தான்) - மற்ற நூல்களை (ஜானே) அறிவேன்?

பொருள்: பரமசிவனே! என் மனது உனது பாதத்தாமரைகளிலும், எனது பேச்சுகள் எல்லாம் உமது புகழை, லீலைகளை பேசுவதிலும், எனது இரு கைகளும் உம்மை அர்ச்சிப்பதிலும், ஜபம் செய்வதிலும், எனது காதுகள் உமது திவ்ய நாமங்களை, கதைகளை கேட்கட்டும், என் புத்தி உம்மை தியானிக்கட்டும். எனது கண்கள் உமது எழிலில் லயிக்கட்டும். இவ்விதம், எல்லா செயல்களும் சிவார்ப்பணமாகச் செய்ய வழிகாட்டுகிறார் ஆதி சங்கரர்..

"காதுகள் சிவ கீதத்தையே கேட்கட்டும், கண்கள் சிவ லிங்கம் தரிசனத்தையே தரிசிக்கட்டும், நாவே சிவ நாமத்தை சொல்லட்டும், கைகள் சிவ அர்ச்சனை, சிவ நாம லிகித செய்யட்டும், கால்கள் சிவனை வலம் வரட்டும், சித்தம் என்றும் சிவனையே தியானிக்கட்டும், சிவ நாம கீர்த்தனையும், நடனமும் செய்து கொண்டிருப்பவர்களே புண்யவான்கள்"
*****
ஸ்லோகம் - 8 - சிவனைவிடச் சிறந்த தெய்வம் இல்லை. இந்த துதியில் பரமசிவனை நினைக்காமல் பிற தெய்வங்களை நினைக்கிறீர்களே என்று அங்கலாய்க்கிற துதி

"யதா புத்தி: சுக்தௌ ரஜத மிதி காசாச்மணி மணிர் ஜலேபைஷ்டே ஷீரம் பவதி ம்ருகத்ருஷ்ணாஸு ஸலிம்| ததா தேவ ப்ராந்த்யா பஜதி பவதன்யம் ஜடஜனோ மஹா தேவேசம் த்வாம் மனஸி ச ந மத்வா பசுபதே||"

(பசுபதே) - பசுபதியே! 
(யதா ) - எப்படி 
(சுக்தௌ) - சிப்பியில் 
(ரஜதம் இதி) - வெள்ளி என்றும், (காசாச்மனி) - காசக்கல்லில் 
(மணி:) - ரத்தினம் என்றும்,
(பைஷ்டே ஜலே) - மாவு கலந்த ஜலத்தில் (ஷீரம் ) - பால் என்றும், (ம்ருகத்ருஷ்ணாஸு) - கானலில் (ஸலிலம்) - தண்ணீர் என்றும் 
(புத்தி: பவதி ) - எண்ணம் ஏற்படுகிறதோ (ததா) - அப்படித்தான் 
(ஜடஜன:) - மூடனான மனிதன் (மஹாதேவேசம்) - சிறந்த தேவர்களின் நாயகரான 
(த்வாம் ) - உன்னை 
(மனஸி ) - மனதில் 
(ந மத்வா) நினையாமல் 
(பவதன்யம்) - உம்மைவிட்டு வேறு ஒருவரை 
(தேவப்ராந்த்யா) - தெய்வம் என்று தவறாக எண்ணி 
(பஜதி ச) - சேவிக்கிறான்.

பொருள்: எப்படி மனிதனின் புத்தி எல்லாவற்றையும் தவறான பார்வை, அர்த்தம் பண்ணிக்கொள்கிறதோ, அதேபோல் மூடனான மனிதன் சிறந்த தேவர்களின் தலைவனான, நாயகனான உன்னை மனதில் நினையாமல், உம்மை விட்டு வேறு ஒருவரை தெய்வம் பெரிதாக தவறாக எண்ணி சேவிக்கிறார்களே..

"யாதொரு தெய்வம் கொண்டீர்
அத்தெய்வ மாகிஆங்கே
மாதொரு பாகனார்தாம்.."
*****
ஸ்லோகம் - 9 - சித்தமே (மனமே) சிவபூஜைக்கு உகந்த புஷ்பம்..

"கபீரே காஸாரே விசதி விஜனே கோரவிபினே விசாலே சைல ச ப்ரமதி குஸுமார்த்தம் ஜடமதி:| ஸமர்ப்யைகம் சேத: ஸரஸிஜமுமாநாத பவதே ஸுகேனாவஸ்தாதும் ஜன இஹ ந ஜானாதி கிமஹோ||"

(கபீரே) - ஆழமான 
(காஸாரே) - மடுவிலும், 
(விஜனே) - ஜன நடமாட்டம் இல்லாத (கோரவிபினே) - கொடிய காட்டிலும்,(விசாலே) - பரந்த 
(சைலே ச) -  மலையிலும் (குஸுமார்த்தம்) -  புஷ்பத்திற்காக (ஜடமதி:) - அறிவு குறைந்தவன் 
(விசதி ப்ரமதி) - புகுந்து அலைகிறான். (உமாநாத) - பார்வதீ பதியே! 
(பவதே) - உமக்கு 
(சேத:) - மனதாகிற 
(ஏகம் ஸரஸிஜம்) - ஒரு தாமரைப்பூவை (ஸமர்ப்ய) - அன்புடன் அளித்துவிட்டு (ஸுகேன) - சுகமாக 
(அவஸ்தாதும்) - அலையாமல் ஓரிடத்தில் இருப்பதற்கு 
(இஹ ) - இங்கே 
(ஜன:) -  மனிதன் 
(ந ஜானாதி கிம்) - அறிந்து கொள்ளவில்லையே, 
(அஹோ) -  ஆச்சரியம்.

பொருள்: பல இடங்களில் தேடி அலைந்து ஆழமான குளத்திலும், ஜனநடமாட்டம் இல்லாத காட்டிலும், மலையிலும், புஷ்பத்தை தேடும் மனிதன், உமாதேவி நாதனே, உனக்கு தூய மனது என்கிற தாமரைப் பூவை அன்புடன் அளித்து விட்டு, சுகமாக எங்கும் அலையாமல் ஓரிடத்தில் இருப்பதற்கு மனிதன் அறியவில்லையே, உணரவில்லையே.. ஆச்சரியம்.

பூசலார் நாயனார் கதை..திருநின்றவூர்
*****
ஸ்லோகம் 10 - பக்தியிருந்தால் எப்பிறவியும் நல்லதே.

"நரத்வம் தேவத்வம் நகவன மருகத்வம் மசகதா பசுத்வம் கீடத்வம் பவது விஹகத்வாதி ஜனனம்| ஸதா த்வத்பாதாப்ஜ ஸ்மரண பரமானந்தலஹரீ விஹாராஸக்தம் சேத் ஹ்ருதயமிஹ கிம் தேன வபுஷா||"

(நரதவம்) - மனிதப் பிறவியோ (தேவத்வம்) - தேவப் பிறவியோ 
(நகவன ம்ருகதவம் ) - மலை காடுகளில் மிருகப் பிறவியோ 
(மசகதா ) - கொசுத்தன்மையோ 
(பசுத்வம் ) - பசுத் தன்மையோ 
(கீடத்வம்) - புழுத் தன்மையோ (விஹகத்வாதி ஜனனம்) - பறவை முதலிய பிறவியோ, எதுவானாலும் (பவது) - ஏற்படட்டும்
(ஸதா) - எப்போதும் 
(த்வத்) - உம்முடைய 
(பாதாப்ஜஸ்மரண) -  திருவடித் தாமரைகளின் தியானமாகிற (பரமானந்தலஹரீ) - சிறந்த ஆனந்தப் பெருக்கில் 
(விஹார) - விளையாடுவதில் (ஹ்ருதயம்) - உள்ளமானது 
(ஆஸக்தம் சேத்) - ஈடுபட்டிருக்குமேயானால் 
(இஹா ) - இவ்வுலகில் 
(தேன) - அந்த 
(வபுஷா) - உடலைப் படைத்ததால் 
(கிம்) - என்ன குறைவு?

பொருள்:- மனிதனாகப் பிறந்தாலும், தேவனாகப் பிறந்தாலும், காடு மலைப் பிரதேசம் இவைகளில் மிருகமாகப் பிறந்திருந்தாலும், பசுவாகவோ, கொசுவாகவோ, பறவையாகவோ எந்தவிதமாகப் பிறந்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் எப்பொழுதும் சிவபெருமானது திருவடித்தாளை என் சிரசில் தியானம் கொண்டு பரம ஆனந்தலஹரியில், மனதானது, இதயமானது, ஈடுபட்டு இருக்குமேயானால், இவ்வுலகில் எந்த உடலைப் பெற்றிருந்தாலும் கவலையில்லை, குறைவே இல்லை இல்லை - என்கிறார் ஆதிசங்கரர்.

மிருகங்கள் பறவைகள் பூஜித்து சிவனடி சேர்ந்த தல புராணம் கூறுகிறது..நண்டு, நாரை, யானை, பாம்பு, சிலந்தி, எலி..

குனித்த புருவமும் கோவை செவ்வாயில் - நாவுக்கரசர் 

புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி மனத்தே வழுவாது இருக்க வரம் வேண்டும்.. நாவுக்கரசர் 

பிறவாமை வேண்டும் அப்படியே பிறந்தாலும் உன்னை மறாவாத மனம். அப்படியே நீ ஆடும்போது, நான் மகிழ்ந்துபாடி உன் அடியின்கீழ் இருக்கவும் வேண்டும் - காரைக்கால் அம்மையார்

"ஸிவே பக்தி: ஸிவே பக்தி: ஸிவே பக்திர் பவே பவே| அந்யதா ஸரணம் நாஸ்தி த்வமேவ ஸரணம் மம|| தஸ்மாத் காருண்ய பாவதே ரஷரஷ மகேஸ்வர||"

பொருள் - 
"நான் எப்பிறவி பெற்றாலும் அவ்வனைத்துப் பிறவிகளிலும் சிவனிடம் பக்தி இருக்கவேண்டும். சிவனிடம் பக்தி வளர வேண்டும்; சிவனிடமே பக்தி நிலைத்து நிற்க வேண்டும்; எனக்கு வேறொரு புகலிடம் இல்லை. நீ மட்டுமே எனக்கு புகலிடம். ஆகவே, மகேஸ்வரா கருணை கொண்டு என்னை காத்து அருளவேண்டும்"!

- ஶ்ரீ சிவ மகா புராணம்..ருத்ர சம்ஹிதை

ஜாதி, மதம், பேதம், மனிதன் , ம்ருகம், பக்ஷி, கொசு, புழு போன்ற, சுய அறிவு என்ற உணர்வு இல்லாமல் போனாலும் சிவபதத்தியானத்தில் ஈடுபட்டிருந்தால் சிவானந்த லஹரியில் திகழலாம் என்று அறிவுறுத்துகிறார். ஆதிசங்கரர்! நந்திகேசர், நந்தி மாடுதானே ஜம்புகேஸ்வரம், திருஆனைக்கா, காளஹஸ்தி போன்ற க்ஷேத்திரங்களில் ஆனை, பாம்பு, சிலந்தி போன்றவைகள் சிவபூஜையில் ஈடுபட்டன. இன்னும் சில சிவன் கோயில்களில் திருப்பாம்புலியூர், திருப்பாம்புபுரம் போன்ற தலங்களில்
*****

Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்