சிவ கீதை அத்தியாயம் 1 ஸ்லோகங்கள் 1-36 விளக்கத்துடன்

(சிவ பக்தியின் பெருமை - 36 ஸ்லோகங்கள்)

சிவ பக்தி உத்கர்ஷன நிரூபணம். சிவ பக்தியோக மகிமை, சிவனின் பெருமை, சிவார்பணத்தின் பெருமையையும் விளக்கும் அத்தியாயம். வேத வியாசர், சூத முனிவர், அகஸ்தியர் போன்ற ரிஷிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன..

சூதர் உவாச:

"அதாதஸ்ஸம்ப்ரவஷ்யாமி சுத்த கைவல்ய முக்திதம்| அனுக்ரஹாந் மஹேசஸ்ய பவதுக்கஸ்ய பேஷஜம்||" (1)

பொருள்:
அத - சுபமான ஆரம்பத்தை குறிக்கும் சொல். சுத்த கைவல்ய முக்திதம் - சுத்த கைவல்ய முக்திதம் அளிப்பதும். பவதுக்கஸ்ய - சம்சாரம் எனும் துக்கத்திற்கு. பேஷஜம் - மருந்தும், சிவ கீதை எனும் ரத்னத்தை. மஹேசஸ்ய - சிவபெருமானுடைய அனுக்ரஹதாத் - அனுக்ரஹத்தால். ‌ஸம்ப்ரவஷ்யாமி - நல்லபடியாக கூறுகிறேன்.

கருத்து:
சுத்த கைவல்ய முக்தியை அளிப்பதும், சம்சாரம் எனும் துக்கத்துக்கு மருந்துமான சிவ கீதை எனும் ரத்தினத்தை சிவபெருமானுடைய அருளால் உங்களுக்கு கூறுகிறேன்.

விளக்கம்:
நூல்கள் எழுதும்போதும் சரி, நல்ல விஷயங்களை, புராண இதிகாசகள் கூறும்போதும் சரி, மங்களமான சொல்லால் ஆரம்பிக்க வேண்டும். மங்கள ஸ்லோகங்களைச் சொன்னபிறகே இவற்றையெல்லாம் ஆரம்பிப்பது இன்னும் கடைபிடித்து கொண்டிருக்கும் ஒரு விஷயம். இரண்டு சொற்கள் மங்களமானவை, இவற்றை மஹரிஷிகளும் அந்நாளில் ஆரம்பித்துச் சொன்னார்கள், அவை, "ஓம்", "அத" என்பதாகும். எனவே சூத முனிவர் சிவ கீதை ஆரம்பத்தை "அத" என்று ஆரம்பிக்கிறார்.‌ அப்படி சொன்னவர், நல்லபடியாக இப்போது சொல்லப் போகிறேன்..எதை? கைவல்ய முக்தியை தரக்கூடிய சிவ கீதை. முக்தி ஐந்து வகைகள் அவை, சாலோக்யம், சாரூப்யம், சார்ஷ்ட்யம், சாயுஜ்யம், கைவல்யம்... இதில் கைவல்ய முக்தி உயர்ந்தும் மீண்டும் பிறப்பே இல்லாததுமாகும்..பிரம்மத்தோடு கலந்து விடுவது......
*****
"ந கர்மணாமநுஷ்டானைர் ந தாநைஸ்தபஸாபிவா:|
கைவல்யம் லபதே மர்த்ய: கிம்து ஞானேன கேவலம்||" (2)

மர்த்ய: - மனிதன், கைவல்யம் - கைவல்ய முக்தி, கர்மணாம் - கருமங்களினிடையே, அனுஷ்டானை - அனுஷ்டானங்களால், நலபதே - அடைவதில்லை, தாநை:ந - தானங்களாலும் இல்லை, தபஸா அபி வா ந - தவத்தினாலும் இல்லை, கேவலம் ஞானேன - தனித்த ஞானத்தினாலேயே

கருத்து:
மனிதன் கர்மானுஷ்டானங்கள் செய்தோ, தானங்கள் செய்தோ, தவம் செய்தோ, கைவல்ய முக்தியை அடைவதில்லை, ஞானத்தினால் மட்டுமே அடையமுடியும். தவம், கர்மாணுஷ்டானங்களால் கைவல்ய முக்தி பெறமுடியாது என்றால், இவையெல்லாம் எதற்காக செய்ய வேண்டும்? செய்வதால் என்ன பலன்? இவையெல்லாம் செய்ய வேண்டாமே என்று தோன்றும். ஞானத்தினால்தான் கைவல்ய முக்தி பெற முடியும் என்றாலும், அந்த ஞானத்தை அடைவதற்கு இவை எல்லாம் செய்ய வேண்டும், அந்த ஞானத்தை பெற இவையெல்லாம் உதவும்.
*****
"ராமாய தண்டகாரண்யே பார்வதீ பதிநா புரா| யா ப்ரோக்தா சிவகீதாக்யா குஹ்யாத் குஹ்யதமாஹி ஸா||" (3)

பொருள்:
புரா - முன்னர், தண்டகாரண்யே - தண்டகாரண்ய வனத்தில், பார்வதீ பதிநா - பார்வதியின் நாதராகிய சிவபிரானால், ராமாய - ராமருக்கு, சிவகீதாக்யா - சிவ கீதை என்று கூறப்படும், யா - எந்த (பிரம்ம வித்யையானது), ப்ரோக்தா - கூறப்பட்டதோ, ஸா - அந்த ( பிரும்ம வித்தையை), குஹ்யாத் - ரகசியத்திலும், குஹ்யதமாஹி - ரகசியத்திலும் ரகசியமானதன்றோ.

கருத்து: 
முன்பு ஶ்ரீ ராமருக்கு, சிவபிரான் தண்டகாவனத்தில சொன்ன பிரம்ம வித்யை இந்த சிவ கீதை, இது மிகவும் ரகசியமானது.

விளக்கம்:- இந்த கீதையை சொன்னவர் ஸ்ரீ பரமேஸ்வரன். அதை கேட்டவரோ ஸ்ரீமந்நாராயணன் அவதாரமாகிய ஶ்ரீ ராமர். அப்படி என்றால் அது எப்பேர்ப்பட்ட சிறந்த விஷயமாக இருக்க வேண்டும். சாதாரணமாக கிடைக்க கூடிய விஷயமா. இதை நான் சொல்கிறேன் என்று சூதர் கூறுகிறார்.

"யஸ்யாஸ்மரண மாத்ரேண ந்ருணாம் முக்தி: த்ருவாஹிஸா| புரா சனத்குமாராய ஸ்கந்தேனாபி ஹிதாஹிஸா||" (4)

பொருள்:- யஸ்யா - எந்த கீதையானது; ஸ்மரண மாத்ரேண - நினைத்த அளவிலே; ந்ருணாம் - மனிதருக்கு; த்ருவா - நித்தியமான; ஸா - அந்த (கைவல்யம் என்கிற); முக்தி - முக்தியானது(கிடைக்கின்றதோ); ஸா - அந்த கீதையானது; ஸ்கந்தேன - கந்தபிரானால்; புரா - முன்னர்; சனத்குமாராய - சனத் குமாருக்கு; அபிஹிதா - கூறப்பட்டது.

கருத்து:- நினைத்த அளவில் முக்திதரும் இந்த சிவ கீதையை ஒரு சமயம் கந்தபிரான் சனத் குமாருக்கு உபதேசித்தார்.

"சநத்குமார: ப்ரோவாச வ்யாசாய முநிஸத்தமா:| மஹ்யம் க்ருபாதிரேகேண ப்ரததௌ பாராயணம்:||" (5)

பொருள்:- முநிஸ்த்தமா - முனிவர்களே; சநத் குமார - சநத்குமாரர்; வ்யாசாய - வியாசருக்கு; ப்ரோவாச - உபதேசித்தார்; பாதராயண - வியாசர்; க்ருபாதிரேகேண - கருணையின் மிகுதியால்; மஹ்யம் - எனக்கு; ப்ரததௌ - அளித்தார்.

கருத்து:- சனத்குமாரர் வியாசருக்கு சிவ கீதையை உபதேசித்தார். வியாசர் கருணையினால் அதை எனக்கு உபதேசித்தார்.

விளக்கம்:- சிவபெருமானால் சொல்லப்பட்ட இந்த கீதை ராமருக்கு சொல்லப்பட்டது. குரு பரம்பரையில் வந்தது சிவ கீதை..

"உக்தம் ச தேந கஸ்மைசித் த தாதவ்யம் இதம் த்வயா| சூதபுத்ர அந்யதா தேவா: க்ஷுப்யம்தி ச சபந்தி ச:||" (6)

தேந - அவரால் (வியாசரால்), உக்தம் ச - சொல்லப்பட்டானது, சூதபுத்ர - சூதபுத்ரனே, த்வயா - உன்னால், இதம் - இந்த கீதையானது, கஸ்மைசித் - எவருக்காவது(தகுதி அற்ற எவருக்காவது), தாதவ்யம் - கொடுக்க கூடியது, ந - அல்ல, அநயதா - அன்றேல், தேவா:- தேவர்கள், க்ஷுப்யந்தி - கலக்கமுறுவர், சபந்தி ச - சபிக்கவும் செய்வர்

கருத்து:- இதை சாதாரணமான வர்களுக்கு உபதேசிக்க கூடாது. இது ஒரு ஞான பொக்கிஷம். யாருக்குமே கொடுக்க கூடாது என்று இல்லை, தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே குரு உபதேசம் கொண்டு கொடுக்க வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

"அத ப்ருஷ்டோ மயா விப்ரா: பகவான் பாதராயண:| பகவன் தேவதா: சர்வா: கிம் க்ஷுப்யந்தி சபந்தி ச:||" (7)

பொருள்:- விப்ரா - அந்தணர்களே, அத - பிறகு, பகவான் பாதராயண: - பகவானாகிய வேத வியாசர், மயா - என்னால், ப்ருஷ்ட - கேட்கப்பட்டார், பகவான் - பகவானே, சர்வா தேவதா - எல்லா தேவர்களும், கிம் க்ஷுப்யந்தி - ஏன் கோபம் கொள்வர், சபந்தி ச - ஏன் சபிப்பர்

கருத்து:- சூதமுனிவர் வியாசரை நோக்கி "ஏன் சபிப்பர், ஏன் தேவர்களுக்கு கோபம் வரவேண்டும், என்ன காரணம்? என்று கேட்டனர். சிவ கீதை ஞானத்தை உபதேசிக்க போகிறது, இதனால் ஏன் தேவர்களுக்கு கோபம் வரவேண்டும்"? அதற்கு விளக்கம் கீழே உள்ள ஸ்லோகத்தில்

"தாசாம் அத்ராஸ்தி காஹாநிர்யயா க்ஷுப்யந்திதேவதா:| பாராசர்யோ த மாமாஹ யத்ப்ருஷ்டம் ஸ்ருணு வத்ஸலா||" (8)

பொருள்:- தேவர்கள் எதனால் கோபமடைய வேண்டும் எதனால் சாபமிட வேண்டும் என்று சூத முனிவர் வியாசரிடம் கேட்க, அதற்கு வியாசர் விளக்கம் சொல்கிறேன் என்று கூற ஆரம்பித்தார்.

"நித்யாக்நி ஹோத்ரிணோ விப்ராஸ்ஸந்தியே க்ருஹமேதிந:|
தயேவ சர்வ பலதா: ஸுராணாம் காம தேநவ:||" (9)

க்ருஹமேதந: - இல்லறவாசிளான, மே விப்ரா: - எந்த அந்தணர்கள், நித்யாக்நிஹோத்ரிண: - தினமும் அக்நி ஹோத்ரம் செய்பவர்களாய், சந்தி - இருக்கிறார்களோ, தேஏவ - அவர்களே, ஸுராணாம் - தேவர்களுக்கு, சர்வ பலதா: - எல்லா பலன்களையும் கொடுக்கும், காமதேநவ - காம தேனுக்கள்..

பொருள்:- பூவுலகில் தினமும் அக்னிஹோத்ரம் செய்யும் அந்தணர்கள் தான் தேவலோகத்தில் உள்ள தேவர்களுக்கு அனைத்தயும் வழங்கும் காமதேனு பசுவைப் போன்றவர்கள்.

"பஷ்யம் போஜ்யம் ச பேயம்ச யத்யதிஷ்டம் சுபர்வணாம்|
அக்நௌ ஹுதேந ஹவிஷா தத்ஸர்வம் லப்யதே திவி||" (10)

பஷ்யம் - தட்டில் போட்டுக் கொள்ளாமலே சாப்பிடக் கூடியதும், போஜ்யம்ச - தட்டில் போட்டுக் கொண்டு சாப்பிடுபவையும், பேயம் ச - அருந்தப்படுவதும், யத் யத் - எது எது, சுபர்வணாம் - தேவர்களுக்கு, இஷ்டம் - விருப்பமோ, தத்ஸர்வம் - அவை அனைத்தும், அகநௌ - நெருப்பில், ஸுதேந - ஹோமம் செய்யப்பட்ட, ஹவிஷா - அவிர்பாகத்தில், திவி - தேவலோகத்தில், லப்யதே - அடையப் படுகிறது.

பொருள்:- தேவர்களுக்கு விருப்பமான, குடிக்கின்ற பானங்களானாலும் பட்சணங்கள் ஆனாலும் உணவாணாலும் எதுவுமே இங்கு பூமியில் ஹோமம் செய்தால் தான் போய்ச் சேரும். தேவர்களுக்கு இங்கே மனிதர்கள் கொடுக்கும் ஹவிர் பாகம் தான் அவர்களுக்கு உணவாக போய் சேருகிறது. அது இல்லை என்றால் தேவர்களும் தளர்ந்து போய் விடுவார்கள். 

"நாந்யதஸ்தி சுரேஷாநாம் இஷ்டஸித்திப்ரதம் திவி|
தோக்த்ரீ தேநுர் யதாநீதா துக்கதா க்ருஹமேதிநாம்||" (11)

"ததைவ ஞானவான் விப்ரோ தேவாநாம் துக்கதோ பவேத்|
த்ரிதசாஸ்தேந விக்நந்தி ப்ரவிஷ்டா விஷயம் ந்ருணாம்||" (12)

பொருள்:
சுரேஷாநாம் - தேவர்களுக்கு; திவி - விண்ணுலகில்; இஷ்ட ஸித்திப்ரதம் - விரும்பியதை சாதித்துக் கொடுப்பது; அந்யத் நாஸ்தி - வேறு எதுவும் இல்லை; யதா - எவ்வாறு; தோக்த்ரீ-நன்கு கறக்கும்; தேநு:-பசு; நீதா - (பிறரால்) கைப்பற்றப்பட்டது (எனில்); க்ருஹமே திநாம் - இல்லறத் தாருக்கு; துக்கதா - துக்கத்தைக் கொடுக்குமோ; ததைவ - அவ்வாறே; ஞானவான் விப்ர: ஞானியான அந்தணன்; தேவாநாம் - தேவர்களுக்கு; துக்கத: - துக்கத்தைக் கொடுப் பவன்; பவேத் - ஆவான்; தேந அதனால்; த்ரிதசா: தேவர்கள்; ந்ருணாம் - மனிதர்களுடைய;விஷயம் விஷயத்தில் (ஞான விஷயத்தில்); ப்ரவிஷ்டா: - பிரவேசித்த வர்களாகி; விக்நந்தி - விக்னம் விளைவிக்கிறார்கள்.

பொருள்:- தேவர்களுக்கு விண்ணுலகில் விரும்பியதை கொடுப்பவர் க்ருஹஸ்தர்கள், எப்படி வீட்டில் உள்ள கறவை மாடுகள் களவு போனால் க்ருஹஸ்தர்க்கு கஷ்டமாக இருக்குமோ அது போல இல்லறத்தில் உள்ளவர் ஞானத்தை பெற முயலும் போது தேவர்களுக்கு பிடிக்காது அவர்கள் தடை செய்வார்கள். ஞானத்தை அடைய முடியாது செய்வார்கள். ஏனெனில் இல்லற தர்மம் இல்லாமல் போகும் போது, ஹோமாதி கர்மாக்கள் இல்லாமல் போகும். அதனால் தேவர்களுக்கு இழப்பு. அவர்கள் இல்லறத்தான் ஞானியாவதை விரும்புவதில்லை. விக்னங்கள் விளைவிப்பார்கள்.

சிவ கீதையானது ஒருவனை ஞானியாக்கும். எனவே, சிவ கீதை உபதேசம் பெறுபவனுக்கு தேவர்கள் தரக்கூடிய இடைஞ்சல்களை வெல்லக் கூடிய வல்லமை பொருந்தியவராக இருக்கு வேண்டும்.
*****
"ததோ ந ஜாயதே பக்தி: சிவே கஸ்யாபி தேஹிந:| தஸ்மாதவிதுஷாம் நைவ ஜாயதே சூலபாணிந:||" (13)

பொருள்:
தத: - எனவே; கஸ்ய அபி தேஹிந: - மனிதர்களான எவருக்கும்; சிவே - சிவபிரானிடம்; பக்தி: ந ஜாயதே - பக்தியானது உண்டாகிறதில்லை; தஸ்மாத் அவிதுஷாம் - அறிவற்றவர்க்கு; சூலபாணிந: அதனால்; சூலபாணி யான பகவானிடம்; ந ஏவ ஜாயதே - (பக்தி) உண்டா கின்றதே இல்லை.

கருத்து:- அறிவற்ற மாந்தர்க்கு சிவபக்தி இருக்காது.

விளக்கம்:-
இந்த ஸ்லோகத்தில் ஒரே விஷயம் திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளது. அது விஷயத்தின் அழுத்தத்தை அதிகரிப் பதற்காகவே. சிவபக்தி என்பது சாமான்யமானதல்ல. சிவ மஹிமையை தெரிந்து கொள்வது அறிவற்ற மானிடர்க்கு அரிதான காரியம். அரை குறை அறிவு கொண்டவர்க்கும் அது இயலாத காரியம் என்பதே இந்த ஸ்லோகம் அழுத்தம் திருத்தமாகக் கூறும் அடிப்படை விஷயம்.

பொருள்:- சிவபக்தி என்பது சாமான்யமானதல்ல. சிவ மஹிமையை தெரிந்து கொள்வது அறிவற்ற மானிடர்க்கு அது இயலாத காரியமாகும். அறிவற்ற மாந்தர்க்கு சிவபக்தி இருக்காது.
*****
"யதா கதம்சித் ஜாதாபி மத்யே விச்சித்யதே ந்ருணாம்|
ஜாதம் வாபி சிவஞானம் ந விஸ்வாசம் பஜத்யலம்||" (14)

பொருள்:- ந்ருணாம் - மனிதருக்கு, யதாகதம்சித் - எவ்விதத்திலாவது, ஜாதா அபி - (பக்தி) ஏற்பட்டாலும், மத்யே விச்சித்யதே - நடுவிலே தொலைந்து போய் விடுகிறது, சிவஞானம் ஜாதம் வாபி - சிவஞானம் உண்டானாலும், அலம் - போதுமான, விஸ்வாசம் - நம்பிக்கை, ந பஜதி - அடைவதில்லை.

மனிதர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் பக்தி ஏற்பட்டாலும் அது நிலைத்து இருக்காமல், காலப்போக்கில் காணாமல் போய்விடுகிறது. சிவ மஹிமையை அறிந்தாலும் கூட முழுமையாக அறியாமல், திடமான, ஸ்திரமான நம்பிக்கை இல்லாமல் போகிறார்கள்.

விளக்கம் :

மனிதர்களுக்கு பகவானிடம் ஏற்படும் பக்தி என்பதே, தங்கள் சுயநலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு சாதனமாக இருக்கிறது. இது உண்மையான பக்தி அல்ல. தங்கள் தேவையை முன் வைத்து ஒரு தெய்வத்தை வணங்குவார்கள். அத்தெய்வத்துக்கு பூஜைகள், விழாக்கள் செய்வார்கள். அவர்கள் தேவைகள் நிறைவேறிக் கொண் டிருக்கும் வரைதான் எல்லாமே. இல்லை என்றவுடனே அத்தெய்வத்தை தொழுவதை நிறுத்திவிடுவார்கள்.

கோரிய வரத்தைப் பெறுவதற்காக என்று ஏற்படும் பக்தி, வரத்தைப் பெற்றவுடன், அதன் பலனை அனு பவிக்கும் நிலையில் மறந்து போகிறது. அடுத்து, ஒன்று மாற்றி ஒன்று வரம் கேட்டுக் கொண்டே இருக்கும் பக்தர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் கேட்டது கிடைக்கும்வரை, 'ஆஹா இதைப்போல ஒரு தெய்வ சான்னித்தியம் எங்கிருக்கிறது' என்று போற்றிக் கொண் டிருப்பார்கள். நடுவில் அவர்களுக்கு எதுவும் கிடைக்காமல் போய்விட்டதோ, அத்தோடு அவர்கள் பக்தியும் போய் விடும். நேற்றுவரை 'தெய்வம்' என்றவர்கள், 'கல்' என்று சொல்லிவிடுவார்கள்.

இப்படி சுயநலத்துக்காக ஏற்படும் பக்தி நடுவிலே தொலைந்து போய்விடும்.

இனி அடுத்து, சிவஞானம் ஏற்பட்டாலும் போதுமான நம்பிக்கை ஏற்படுவதில்லை என்று இருக்கிறது. சிவ மஹிமை அறிந்து, சிவபிரானை அடைவது ஒன்றே நித்யம், மற்றதெல்லாம் அநித்யம் என்று புத்திக்கு எட்டியவர்களும்கூட, சிவஞான வழியில் போகும் போது ஏற்படும் துன்பங்கள், ஏமாற்றங்கள், இடைஞ்சல்கள், வாழ்க்கையில் தோன்றும் பல தோல்விகளாலும் ஒரு கட்டத்தில் சிவபிரானிடம் நம்பிக்கை இழந்து விடுகிறார்கள். இதை எல்லாம் செய்பவர்கள் தேவர்கள் தான் என்று புரிந்து, உறுதியாக அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது போகிறார்கள்.
*****
 ருஷய  ஊசூ:

"யத்யேவம் தேவதா விக்நமாசரந்தி தநூப்ருதாம்| பௌருஷம் தத்ர கஸ்யாஸ்தி யேந முக்திர்பவிஷ்யதி||" (15)

பொருள்:
ஏவம்- இவ்வாறு; தேவதா:- தேவர்கள்; தநூபருதாம்- மனிதருக்கு; விக்நம் ஆசரந்தி யதி - இடையூறு விளை விப்பார்களானால் ; யேந - எதனால்;முக்தி: பவிஷ்யதி - முக்தி ஏற்படுமோ; பௌருஷம் - அத்தகைய பௌருஷத் தன்மை; தத்ர - இங்கு; கஸ்ய - யாருக்கு; அஸ்தி - உள்ளது.

பொருள்:- தேவர்கள் செய்யும் இடையூறுகளை முறியடித்து முக்தி பெறத்தக்க பௌருஷம் இங்கு யாருக்கு உள்ளது?
*****
ருஷய  ஊசூ:

"சத்யம் சூதாத்மஜ ப்ரூஹி தத்ரோ பாயோஸ்தி வா நவா|"

சூத உவாச:

"கோடி ஜன்மார்ஜிதை: புண்யை: சிவே பக்தி: ப்ரஜாயதே ||"(16)

சூதாத்மஜ - சூதபுத்ரரே; தத்ர - இந்த விஷயத்தில்; உபாயோஸ்தி - உபாயம் உள்ளதா, நவா - இல்லையா, சத்யம் ப்ரூஹி - உண்மையைக் கூறுங்கள்; 

கோடி ஜன்மார்ஜிதை - அநேகப் பிறவிகளில் சம்பாதிக்கப்பட்ட; புண்யை : புண்ணியங்களால்; சிவே பக்தி: - சிவபிரானிடம் பக்தி யானது; ப்ரஜாயதே - உண்டாகின்றது.

கருத்து:
"சூதபுத்ரரே. இந்த விஷயத்தில் உபாயம் உள்ளதா. இல்லை என்பதை உண்மையாகக் கூறுங்கள்" என்று முனி வர்கள் கேட்க, சூதபுத்ரர்

"ஆயிரம் கோடி பிறவிகளில் பலவகையான யோனிகளில் பிறப்பவர்களில் சிலருக்கே, அநேகப் பிறவிகளில் சம்பாதிக்கப் பட்ட புண்ணியங்களால் பரமசிவனிடம் பக்தி ஏற்படும். அப்படி தோன்றும் சிலருக்கு, வேறு நாட்டமில்லாத சிவபக்தியே பிரதானமாக இருக்கும்.."
என்கிறார்.

சிவ பக்தி ஏற்படுவதே கடினம், அப்படி ஏற்பட்டாலும் தேவர்கள் செய்யும் விக்னங்களால் அது நீங்கிப் போய் விடுகிறது என்பதைக் கேட்ட முனிவர்களுக்கு. இப்படி தேவர்கள் இடையூறு செய்து கொண்டிருந்தால், பிறகு எப்படித்தான் முக்தியைப் பெறமுடியும்? இந்த 'இடை யூற்றையெல்லாம் வெல்லக்கூடிய தன்மைதான் யாருக்கு இருக்கும்? இந்நிலையில்,முக்தி பெறத்தக்க உபாயம்

"சூதபுத்ரரே. இந்த விஷயத்தில் உபாயம் உள்ளதா, இல்லையா என்பதை உண்மையாகக் கூறுங்கள்" என்று முனி வர்கள் கேட்க, அதற்கு சூதர் அடுத்து வரும் ஸ்லோகங்களில் மனிதன் பதில் கூறுகிறார்..

"இஷ்டாபூர்தாதி கர்மாணி தேநாசரதி மாநவ:| சிவார்பணதியா காமாந் பரித்யஜ்ய யதாவிதி||" (17)

பொருள்:
மாநவ: மனிதன்; தேந - அந்த சிவப்ரசாதத்தினால்; இஷ்டா பூர்தாதிகர்மாணி கோயில் கட்டுவது, அன்ன சத்திரம் எழுப்புவது, குளம் கிணறுகளை நிர்மாணிப்பது, யாகாதி களைச் செய்வது முதலிய செயல்களை; காமாந் - (பயனில்) விருப்பத்தை; பரித்யஜ்ய - விடுத்து; சிவார்பணதியா - (அனைத்தும்) சிவபிரானுக்கு அர்ப்பணம் என்ற எண்ணத் தோடு; யதாவிதி - விதிமுறைப்படி; ஆசரதி - செய்கிறான்

பொருள்:- மனிதன் சிவானுக்ரஹத்தால், கோயில் கட்டுவது, கோயில் பணி செய்வது, அன்ன சத்திரம் அமைப்பது, குளம், கிணறு வெட்டுவது, யாகம் செய்வது முதலானவற்றால் வரும் புண்ணிய பலனை கருதாமல் சிவபிரானுகே அர்ப்பணம் என்ற எண்ணத்தோடு விதிமுறைப்படி செய்தல் வேண்டும். என்னை கருவியாக வைத்து, சிவபிரானே அனைத்தையும் செய்கிறார் என்ற எண்ணத்தோடு சிவார்ப்பணமாக செய்ய வேண்டும், அதே சமயம் அதற்க்கென விதிக்கப்பட்ட விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

"அனுக்ரஹாத் தேந சம்போர் ஜாயதே சுத்ருடோ நர:| ததோ பீதா: பலாயந்தே விக்நம் ஹித்வா சுரேஸ்வரா:||" (18)

தேந - அதனால், சம்போ அனுக்ரஹாத் - சிவபெருமான் அருளால், நர - மனிதன், சுத்ருட - திட சித்தமுடையவனாக, ஜாயதே - ஆகின்றான், தத - ஆதலால், சுரேஸ்வரா - தேவர்கள், விக்னம் ஹித்வா - இடையூறு விடுத்து, பீதா - பயந்தவர்களாக, பலாயந்தே - ஓட்டம் பிடிக்கிறார்கள்.

பொருள்:- சிவபெருமான் அருளால் தான் மனிதருக்கு திடசித்தம் ஏற்படும். அப்படி ஆனதும் தேவர்கள் பயந்து இடையூறு விளைவிப்பதை விடுத்து ஓட்டம் பிடிக்கிறார்கள்.

விளக்கம் :
இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் கூறியபடி திருப்பணிகளைப் பயன் கருதாது சிவார்ப்பணமாக செய்து கொண்டே வரும்போது, சிவபிரானுடைய அருளுக்குப் பாத்திரமா கிறான். அந்த அருளால் இம்மனிதனுக்கு திடமான மனம், எதற்கும் பின்வாங்காத தன்மை ஏற்படுகிறது. அத்தகு களைச் செய்யாது ஓடிவிடுவார்கள். அத்தகு சமயத்தில் தேவர்களுக்குப் பயம் ஏற்படுகிறது. இடையூறுகளை செய்யாமல் ஓடி விடுவார்கள் 
*****
"ஜாயதே தேந ஸுஸ்ரூஷா சரிதே சந்திரமௌளி ந:| ஸ்ருண்வதோ ஜாயதே ஞானம் ஞானாதேவ விமுச்யதே:||" (19)

தேந - ஆதலால், சந்திரமௌளின - சிவபெருமானுடைய, சரிதே - சரித்திரத்தில், ஸுஸ்ரூஷா - கேட்கும் விருப்பம், ஜாயதே - உண்டாகிறது, ஞானாத் ஏவ - ஞானத்தினாலேயே, விமுச்யதே - பற்றுவிட்டு முக்தி அடைகிறான்.

பொருள்:- சிவபெருமானுடைய சரித்திரத்தை கேட்க விருப்பம் ஏற்பட்டு, ஞானம் கிட்டுகிறது. பின் முக்தியும் கிட்டுகிறது. ஆதலால் என்பது தேவர்களுடைய இடையூறு நீங்கி விட்டது என்று அர்த்தம். அதாவது, தேவர்களுடைய விக்னங்கள் நீங்கிய பின்னர் தான் சிவபெருமான் சரிதங்களை கேட்கும் விருப்பமே ஒருவனுக்கு ஏற்படும். அப்படி சிவ மஹிமைகளை கேட்டு கேட்டு தன்னால் ஞானம் வந்து முக்தியும் கிட்டிவிடுகிறது.
*****
"பஹுநாத்ர கிமுக்தேந யஸ்ய பக்திஸ்ஸிவே த்ருடா|
மஹாபாபோப பாபௌக கோடிக்ரஸ்தோபி முச்யதே||" (20)

அத்ர - இங்கு; பஹுநா உக்தேந - நிறைய சொல்லுவதால்; கிம் - என்ன இருக்கிறது; யஸ்ய - எவருக்கு; சிவே - சிவபிரானிடம்; த்ருடா - திடமான உறுதியான; பக்தி - பக்தியானது(உள்ளதோ); மஹாபாபோப பாபௌக கோடிக்ரஸ்தோபி - மிகப்பெரிய பாவங்களிலிருந்து விடுபட்டு; முச்யதே - முக்தி அடைகிறான்.

பொருள்:-
நிறைய சொல்லிக்கொண்டே இருப்பதால் என்ன பயன்? எவனுக்கு சிவபிரானிடம் உறுதியான பக்தி இருக்கிறதோ அவன் எப்படிப்பட்ட மஹா பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடைகிறான். எத்தனை விதமாக கூறினாலும், எப்படி எப்படி கூறினாலும், திரும்பத் திரும்ப கூறினாலும், விஷயம் ஒன்றுதான், சிவபக்தி மட்டுமே ஒருவனை முக்தனாக்கும் என்பதே.
*****
"ருத்தம் கிஞ்சித் ஸமாதாய க்ஷுல்லகம் ஜலமேவ வா| யோதத்தே நியமேநாஸௌ தஸ்மை தத்தே ஜகத்ரயம்||" (21)

ருத்தம் கிஞ்சித்- சிறப்பான எதையாவது; க்ஷுல்லகம் - அற்பமான எதையாவது; ஜலம் ஏவ வா - ஜலத்தையேயாவது; ஸமாதாய - எடுத்து; ய: - எவன்; நியமேன - நியமமாய்; தத்தே - கொடுக்கிறானோ(சிவபெருமானுக்கு); அஸௌ - அப்போது; தஸ்மை - அவனுக்கு; ஜகத்ரயம் - மூவுலகத்தையும்; தத்தே - அளிக்கிறார்.

பொருள்:- சிறப்பானதையாவது அல்லது அற்பமானதையாவது அதுவும் இல்லை என்றால் ஜலத்தையாவது எடுத்து எவன் சிவபெருமானுக்கு நியமமாக சமர்பிக்கின்றானோ அவனுக்கு சிவபிரான் மூவுலகையும் கொடுப்பார்.
*****
"தத்ராப்யஸக்தோ நியமாந் நமஸ்காரம் ப்ரதஷிணம்| ய: கரோதி மஹேஷஸ்ய தஸ்மை துஷ்டோபவேச்சிவ:||" (22)

தத்ர அபி - அதில் கூட, அசக்த - சக்தியற்றவனாகிய, ய - எவன், நியமாத் - நியமமாக, மஹேஷஸ்ய - மஹேஸ்வரருக்கு, நமஸ்காரம் - வணக்கத்தையும், ப்ரதஷிணம் - வலம் வருவதையும், கரோதி - செய்கிறானோ, தஸ்மை - அவனிடம், சிவ: துஷ்ட: - சிவபிரான் சந்தோஷம் கொண்டவராக, பவேத் - ஆவார்.

கருத்து:- அதுவும் இயலாதவன் நியமமாக சிவ பிரானை வலம் வருதலையும், வணங்குவதையும் செய்து கொண்டிருந்தால் அதனாலும் சிவபிரான் மகிழ்கிறார்.
*****
"ப்ரதஷிணாஸ்வஷக்தோபி யஸ்வாந்தேசிந்தயேசிவம்|
கச்சந்ஸமுபவிஷ்டோவா தஸ்யாபீஷ்டம் ப்ரயச்சதி||" (23)

ப்ரதஷிணாஸு அபி - ப்ரதக்ஷிணங்களில் கூட, அசக்த - சக்தியற்றவன், ய: - எவன், கச்சந் - நடந்து கொண்டாவது, ஸமுபவிஷ்டோ வா - உட்கார்ந்து கொண்டாவது, சிவம் - சிவபிரானை, ஸ்வாந்தே - மனதினில், சிந்தயேத் - சிந்திப்பானாகில், தஸ்ய - அவனுக்கு, அபீஷ்டம் - விரும்பிய பொருளை, ப்ரயச்சதி - அளிக்கிறார் (சிவபிரான்)

பொருள்:- வலம் வந்து வணங்குவது கூட சக்தியற்ற வன், நடந்து கொண்டிருக்கும் போதோ அல்லது உட்கார்ந்து இருக்கும் போதோ சிந்தையில் சிவபிரானை சிந்திப்பானாகில் அவனுக்கும் சிவபெருமான் விரும்பியவற்றை கொடுக்கிறார்.
*****
"சந்தனம் பில்வகாஷ்டஸ்ய புஷ்பாணி வநஜாந்யபி| பலானி வநஜான்யேவ யஸ்ய ப்ரீதிகராணிவை||" (24)

"துஷ்கரம் தஸ்யஸேவாயாம் கிமஸ்தி பவநத்ரயே| வந்யேஷு யாத்ருஷீ ப்ரீதிர் வர்ததே பரமேஷிது:||" (25)

"உத்தமேஷ்வபி நாஸ்த்யேவ க்ராம ஜேஷ்வபி தாத்ருஷீ| தம் த்யக்த்வா தாத்ருஷம் தேவம் யஸ்ஸேவேதாந்ய தேவதாம்||" (26)

"ஸஹி பாகீரதீம் த்யக்த்வா காங்க்ஷதே ம்ருகத்ருஷ்ணிகாம்| கிம்து யஸ்யாஸ்தி துரிதம் கோடி ஜன்ம ஸுஸஞ்சிதம||" (27)

விளக்கம் (24,25,26,27) :- 
சிவபெருமானிடம் பக்தி கொண்டவர் அவரைப் பூஜிப்பதற்கு சிரமப்பட வேண்டியதில்லை. நல்ல உயர்ந்த மலர்கள், பழங்கள் மற்ற பொருட்கள் வாங்க வேண்டும் என்றில்லை. சாதாரண காட்டு மலர்களோ, பழங்களோ கூட போதும். நாவல் பழம், இலந்தைப்பழம், விளாம்பழம் இவையெல்லாம் நைவேத்தியம் செய்யலாம். எளிதாக கிடைக்க கூடிய பொருட்களால் பூஜை நைவேத்தியம் செய்யலாம். இதற்கு கூட சக்தி இல்லாதவர்கள் சிவபிரானை தியானித்தோ, நிற்கும் போது, நடக்கும் போது அமர்ந்து இருக்கும் போது அவரை நினைத்தாலே கூட போதும்..சிவ சிவ என்ற அந்த இரண்டு எழுத்து கூட போதும்..அவர் பெரும் பேற்றை தந்து விடுவார்.

இப்படி இது கூட செய்யமுடியாது என்றால் அப்படிப்பவரைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. சிவ பக்தி இல்லாத மானிடர் பாவத்தின் பிறப்பிடம் தான்.

எளிதாக வசப்படும் சிவபிரானை விடுத்து இன்னும் எளிதாக நிறைய பலன்களை அளிக்கக்கூடிய தெய்வம் வேறு இருக்கிறதா என்று தேடிப் போகிறவரைப் போல் முட்டாள் யாரும் இல்லை. கண்ணெதிரே கங்கை இருக்கும் போது, தூரத்தே கானல் நீரைப் தேடிப் போவதும், தாகம் தீர்த்துக் கொள்ளலாம் என்று போகிறவர்கள் முட்டாள் என்று கூறாமல் வேறு என்ன கூற வேண்டும்? வினைப் பயனால் தான் அநேகப் பிறவிகளில் செய்த பாவத்தின் தொகுப்பால் தான் இத்தகைய முட்டாள்தனம் ஏற்படும்.
*****
ஸ்லோகம் 28 & 29

"தஸ்ய ப்ரகாஷதே நாயம் த்வர்தோ மோஹாந்தசேதஸ:| ந காலநியமோ யத்ர நதேஷஸ் யஸ்தலஸ்யச||" (28)

"யத்ராஸ்யசித்தம் ரமதே தத்ர த்யாநேந கேவலம்| ஸ்வாத்மத்வேந ஷிவஸ்யாஸௌ ஷிவசாயுஜ்ய மாப்நுயாத்||" (29)

பொருள் (28-29): அஞ்ஞான இருளில் மூடப்பட்ட மனதில் சிவ தத்வம் விளங்காது. இது காலம், தேசம், இடம் என்ற நியமனம் சிவபிரான் விஷயத்தில் இல்லை. எந்த கால தேசவர்த்தமானத்தில் இவன் மனம் லயிக்கிறதோ, அங்கே சிவம் என்ற பாவனையோடு தியானிக்கும் மனிதன் சிவபிரானின் சாயுஜ்ய முக்தியை அடைவான். 

விளக்கம்:
"கபீரே காஸாரே விசதி விஜனே கோரவிபினே விசாலே சைல ச ப்ரமதி குஸுமார்த்தம் ஜடமதி:| ஸமர்ப்யைகம் சேத: ஸரஸிஜமுமாநாத பவதே ஸுகேனாவஸ்தாதும் ஜன இஹ ந ஜானாதி கிமஹோ|| "

இந்த விஷயத்தை ஆதிசங்கரர் தமது சிவானந்த லஹரியில் அழகாக எடுத்துரைத்துள்ளார். "குகையிலோ, வீட்டிலோ, வெளியிலோ, காட்டிலோ, மலையுச்சியிலோ எங்கே வேண்டுமானாலும் இருக்கட்டும். தண்ணீரில் நின்று கொண்டு தவம் செய்ய வேண்டும், பஞ்சாக்னி மத்தியில் தவம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. எப்போதும் மனதில் சிவபிரானை நினைத்துக் கொண்டிருந் தால் அதுவே யோகம்" என்கிறார்.

தியானமானது, தானே சிவம் என்ற பாவனையோடு இருக்க வேண்டும் என்கிறார் சூதபுத்திரர்.

ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விஸ்வரூபம் மஹேஸ்வரம்| ஸோஹமித்யாதரேணைவ த்யாயேத் யோகீஸ்வரேஸ்வரம்
- தர்சனோபநிஷத்.

பொருள்:-
மேல்நோக்கிய ரேதஸ் உடையவரும், நெற்றிக் கண் உடையவரும், விஸ்வரூபரும், யோகீஸ்வரர்களால் சேவிக்கப்படுபவருமான சிவபிரானை "அவரே நான்" என்னும் எண்ணத்தோடு தியானிக்க வேண்டும், என்கிறது தர்ச னோபநிஷத்.

"சிவனென யானும் தேறினன் காண்க" என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்.
*****
"அதிஸ்வல்பதராயுஷ்ரீர் பூதேஷாம்ஷாதிபோபிய:|
ஸது ராஜாஹமஸ்மீதி வாதிநம் ஹந்திஸாந்வயம்||" (30)

பொருள்:- அற்ப ஆயுளையும் சொற்ப செல்வத்தையும் வைத்துக் கொண்டு மனிதருக்கு அதிபனாய் இருந்து கொண்டு நான் தான் ராஜா என்று சொல்லிக் கொண்டு வாழ்பவன் தன் இனத்தையும் அழிக்கிறான்.
*****16.4.2024
"கர்த்தாபி ஸர்வலோகானாம் அஷயைஷ்வர்யவாநபி|
ஷிவஷ்ஷிவோஹமஸ்மீதி வாதிநம் யஞ்சகம்சந||" (31)

"ஆத்மாநா ஸஹ தாதாத்ம்ய பாகிநம் குருதே ப்ருஷம்| தர்மார்த்த காம மோஷாணாம் பாரம் யாஸ்யத யேநைவ||" (32)

பொருள்:- (31,32) எல்லா உலகங்களுக்கும் தலைவன் ஆனாலும், குறையாத செல்வம் ஐஸ்வர்யம் உடையவரானாலும், சிவபிரான், "சிவோஹம், நானே சிவம்" என்று கூறுகிறவர்களை தன்னோடு இணைத்துக் கொண்டு, அறம் பொருள் இன்பம் வீடு எல்லையைக் கடந்து முக்தியை அளிக்கிறார்.

சூத உவாச:

"முநயஸ் தத்ப்ரவஷ்யாமி வ்ரதம் பாசுபதம்"

பொருள்:- சூத முனிவர் மற்ற முனிவர்களைப் பார்த்து "முனிவர்களே, பாசுபதம் என்று கூறப்படும் அவ்விரதத்தைப் பற்றி நன்கு கூறுகிறேன் என்றார்.

1. சோமவார விரதம்   
2. உமா மகேஸ்வர விரதம்
3. திருவாதிரை விரதம்
4. சிவராத்திரி விரதம்
5. கல்யாண விரதம்
6. பாசுபத விரதம்
7. அஷ்டமி விரதம்
8. கேதார கவுரி விரதம்

பாசுபத வ்ரதம்: பாசுபத யோகத்தை சிவபெருமான் தமது தெற்கு திருமுகத்திலிருந்து உரைத்ததாக மஹாபாரதம் தெரிவிக்கிறது. நான்கு ஆஸ்ரமத்தில் இருந்த நான்கு ப்ரம்மரிஷிகளுக்கு சிவபெருமான் இதை நேரடியாக உரைத்திருக்கிறார். அவர்கள் அதை உலகத்தில் பரப்பினார்கள். சிவபெருமானுக்கு "பசுபதி" என்று பெயர் உண்டு. அவரிடம் பக்தி வைத்து உடம்பெல்லாம் விபூதி பூசிக் கொண்டிருக்கும் பக்தர்கள் பாசுபதர்கள். தன்னிடம் பக்தியுள்ளவர்களுக்கு ரக்ஷையாகவும், மங்களத்திற்காகவும், சுத்தத்திற்காகவும், அடையாளத்திற்காகவும் சிவபிரான் விபூதியைக் கொடுத்தார். இது ஆதியில் நடந்தது.

பாசுபத விரதத்திற்கு பிரதம், சிரோமிரதம், அத்யாசிரமம், சாம்பவம், ஐஸ்வரம் என்று வேறு பெயர்களும் உண்டு. பாசுபதாஸ்த்ரம். அஸ்த்ரம் வேறு சஸ்த்ரம் வேறு.
*****
"க்ருத்வாது விரஜாம் தீஷாம் பூதி ருத்ராஷதாரிண:||" (33)

"ஜபந்தோ வேதஸாராக்யம் ஷம்போ நாம ஸஹஸ்ரகம்| ஸந்த்யஜ்யதேந மர்த்யத்வம் தைவீம் தநுமவாப்ஸ்யத||"(34)

பொருள்:-(33, 34)
விரஜா தீஷையை ஏற்று விபூதி ருத்ராட்சம் அணிந்து வேதசாரம் எனப்படும் சிவ சஹஸ்ரநாமத்தை ஜபித்து (படித்து/கேட்டு) கொண்டிருந்தால் மானுடத்தன்மை நீங்கி தெய்வத்தன்மை அடையப் பெறுவார்கள்.
*****
"தத: ப்ரஸந்நோ பகவாந் ஷங்கரோ லோகஷங்கர:| பவதாம் த்ருஷ்யதாமேத்ய கைவல்யம் வ: ப்ரதாஸ்யதி||" (35)

பொருள்:- உலகத்துக்கெல்லாம் ஆனந்தம் அளிப்பவரான சிவபெருமான் உங்களுக்கு காட்சயருளி கைவல்ய முக்தி அளிப்பார்.
*****
"ராமாய தண்டகாரண்யே யத்ப்ரதாத் கும்பஸம்பவ:| தத் ஸர்வம் வ: ப்ரவஷ்யாமி ஷ்ருணுத்வம் பக்தயோகிந:||" (36)

பொருள்:- தண்டகாவனத்தில் அகத்தியர் ராமருக்கு உபதேசித்ததை முழுவதும் உங்களுக்கு கூறுகிறேன், பக்தியுடன் கேளுங்கள்..
*****
இதி பத்ம புராணே. சிவ கீதா உபநிஷத். பிரம்ம வித்யாயாம். சிவ பக்தி உத்கர்ஷன நிரூபணே. சிவ ராகவ சம்வாதே. ப்ரதமாத்யாய சம்பூர்ண:

அத்தியாயம் ஒன்று முற்றிற்று.

Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்